October 30, 2007

எழவெடுத்த கவிதை

சிவப்பு விழுவதற்குள்
சிக்னல் கடக்க விரைகையிலும்,
கடைசி முறையாய் முக்கி
கழிவு நீக்கத்தை முடிக்கையிலும்,
சமையல் ருசி பற்றின
மனைவியின் கேள்விக்கு
பதிலளிக்கும் இடைவெளியிலும்,
இரவில்,கலவி மயக்கத்தில்
தொலைந்த நினைவு திரும்பும்
அந்தரங்க நொடியிலும்,
எங்கிருந்து தான் தோன்றுமோ-
எழவெடுத்த கவிதைக்கு
நேரம் காலமே தெரிவதில்லை.

வன்முறை

தடித்த வார்த்தைகளில்
மெல்லிய மெளனங்களில்
பதிலுக்கு செய்யும் வீம்புகளில்
ஒன்றும் செய்யாத விலகலில்
முறைக்கும் பார்வைகளில்
அவைதம் புறக்கணிப்புகளில்
கோபமான தண்டனைகளில்
சாந்தமான மன்னிப்புகளில்
அறையப்பட்ட சிலுவைகளில்
அணிவிக்கும் மாலைகளில்
துருத்திக் கொண்டு தெரிகிறது
ரத்தருசி பிடித்த வன்முறை நாக்கு.

பேச்சு

அடுத்து வரப்போகும் ரயில் பற்றியோ
கடந்து சென்ற ரயில் தந்த வலி பற்றியோ
கொஞ்சமாய் வந்து விழுந்த
குழந்தையின் மலம் பற்றியோ
முழுக்க வருடுகின்ற குளிர்காற்றைப் பற்றியோ
-கேட்பதற்கு யாருமேயில்லை என்றாலும்-
தமக்குள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்
இணை தண்டவாளங்கள்.

நான்கு ஹைகூக்கள்

''நான்கு ஹைகூக்கள்''
என்று தலைப்பெழுதி
முதல் மூன்றுக்கு அப்புறம்
நான்காவதாக
"இன்னும்
எழுதப்படாமலிருக்கும்
ஒரு ஹைகூ"
என்று எழுத ஆசைதான்.
என்ன செய்வது?
முதல் மூன்றும்
இன்னும் முடிந்தபாடில்லை.

கற்பிதம்

"இந்த மேஜை என்ன சொல்கிறது?"
''அந்த மின்விசிறி என்ன சொல்கிறது?"
''காலை உரசிச் செல்லும்
என் பூனைக்குட்டி என்ன சொல்கிறது?"
யோசிப்பில் கிடைத்த பதில்கள்.
''ஒன்றுமே நாங்கள் சொல்லவில்லையே"
-கதறின அவைகளைப் புறந்தள்ளி விட்டு
என் கவிதையைப் பிரசுரிக்க விரைந்தேன்

October 4, 2007

எச்சம்

விழித்துத் தலை உலுக்கியும்
விலகாத கனவுகள்

உதைத்து விரட்டியும்
தொடரும் நிழல்

இறங்கிய பின்னும் தலைக்குள்
சுற்றும் குடை ராட்டினம்

ஒரு வேலையும் செய்யாவிடினும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்புள்

அஸ்தமனம் ஆனபோதும்
அணைந்திடாத வெளிச்சம்

ஆழச் செருமி உமிழ்ந்தபின்னும்
அடங்கிடாத கமறல்-
திறந்த வாய்ப் பிம்பத்தில்
உள்நாக்காய்ச் சிரிக்கும் முதற்காதல்.

ஒன்றும் செய்வதற்கில்லை

முகத்தில் வந்தறைந்து
விழி சிவக்க மண் வீசி
எடுப்பான கேசத்தை
ஏளனமாய்க் கலைத்து
இடுப்பு வேட்டியை
இழுத்து உருவிட,
ததும்பிய கோபம்
தலைக்கேறிப் போனாலும்,
ஒன்றும் செய்வதற்கில்லை-
குழந்தை,காற்று.

காத்திருத்தல்

பிரக்ஞயாய் வெளிப்படும் தகித்த பெருமூச்சு
குழப்பத்தில் தொங்கியபடி சிறகொடிந்த எண்ணங்கள்
எப்போதோ இழந்துவிட்ட வாய்
ஏளனமாய் வெறிக்கும் வெளி
சலித்துப் போன உணர்வு
என்னையே தின்னத் துவங்க,
கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?

முரண் முதன்மைகள்

கோப்பை வென்று, நாடு திரும்பும் வீரர்கள்-
ஆயிரம் பூக்கள் மனிதக் கூட்டங்களுடன்.
அடுத்த விமானம்.
எல்லையில் உயிர்நீத்த
வீரனின் சவப்பெட்டி-
வாடிய ஒற்றை ரோஜா தனிமையில்.

பிச்சைப் பொத்தான்

ரயில்டிக்கெட் வாங்கும் கூட்டம்.
அழுக்குப் பாவாடைசிறுமியின்
மடியில் சிரித்தமுகக் குழந்தை,
கிள்ளப்பட்ட வலியில்
உரத்து அழுதது.
அலுமினியத் தட்டில்
விழ ஆரம்பித்தன
சில்லறைக் காசுகள்.

உடையாத குமிழிகள்

உருண்டோடும் வருடங்கள் சின்ன வயது ஞாபகங்களை, பொக்கிஷங்களாக மாற்றி விடுகின்றன. அந்த வயது அறியாமை கூட இப்போது நினைத்துப் பார்க்கையில்,அனுபவித்து ரசிக்கத் தக்கவையாக பரிணாமம் எடுத்து விடுகின்றன. சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்
அப்போதைய எனது சாகசங்கள்.
அப்போது,என் வீட்டில் பாட்டிக்கு மட்டும் தான் நீச்சல் தெரியும்.
"நீச்ச தெரியுமாடா உனக்கு?" என்கிற என் வயதொத்தவர்களின் கேள்விக்கு,"தெரியாது" என்று பதிலளிக்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னும்.
ஞாயிற்றுக்கிழமையானால், பாட்டி,எல்லாத்துணிகளையும் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் (தே.கல்லுப்பட்டி) பஸ்ஸ்டாண்டுக்குப் பின்னால் இருக்கும் தெப்பக்குளத்திற்கு எங்களை கூட்டிச்சென்று,துணிகளைத் துவைத்தபின், கொஞ்ச நேரம் நீச்சல் கற்றுக் கொடுப்பார். என் அருணாக்கயிறை (அரைஞாண் கயிறு) பாட்டி பிடித்துக் கொள்ள, கை,கால்களை உதைத்து வட்டமிடும் ஒரு அரை நிமிட நேரத்திற்குள்
அரை லிட்டர் தண்ணீரை முழுங்கி விட்டிருப்பேன்.
அருணாக்கயிறு அறுந்து ,மூழ்கி விடுவேனோ என்கிற பயத்தினாலும், பாட்டியுடன் தெப்பத்திற்கு போகும் பாக்கியம் எப்போதாவதுதான் கிடைத்ததாலும்,சைக்கிள் டியூபின் உதவியை நாடினேன்.
காற்றடிக்கப்பட்ட சைக்கிள் டியூபை இரண்டாக வளைத்து,
உடம்பில் போட்டுக் கொண்டு தண்ணீரில் மிதப்பேன்.
இவ்வாறு,கல்லுப்பட்டி தெப்பம், தேவன்குறிச்சி(பக்கத்து ஊர்) தெப்பத்தில்
ஓரளவு நீச்சல் பழகிய பின்,எங்கள் ஊர் "சதுரக்கிணற்றில்"
கால்வைக்கும் தைரியம் எனக்கு வந்தது. சதுரக்கிணறு, பெயருக்கு ஏற்ப சச்சதுரமாக இருக்கும். எவ்வளவு ஆழம் என்று யாருக்கும் தெரியாது.
அதிலும், கற்றுக்குட்டிகளான என்னைப் போன்றவர்கள்
உள்ளே இறங்கவே யோசிப்பர்: இதில் எங்கிருந்து முங்கி ஆழம் எல்லாம் பார்ப்பது? "ஒரு பனைமர ஆழம் இருக்கும்" என்று ஊர்ப் பையன்கள் சொல்வார்கள். கிணற்றுக்குள் இறங்கும் படிக்கட்டு கீழ் நோக்கி சென்று, சுவருக்கு சற்று முன்பாகவே முடிந்து விடும்.
கடைசி இரண்டு மூன்று படிகள் இல்லாமல் அந்த மூலை, வட்டமாய், வெறுமையாய் இருக்கும்.இரண்டு,மூன்று பேர் நிற்கும் அளவு மூலையில் இடம் இருக்கும். அதை "பணியாரக்குழி" என்று அழைப்போம்.
கைலி கட்டிக் கொண்டு, ஈரக்கைலியை காற்றுள்ள பலூன் போலக் கட்டிக்கொண்டு பணியாரக்குழிக்குப் பக்கத்திலேயே நீச்சலடிப்பேன்.மற்ற நண்பர்கள் கிணறு முழுவதும் நீந்தி வருவதும், மோட்டார் ரூமிற்கு மேலிருந்து"சொர்க்" அடிப்பதும் எனக்கு ஏக்கப் பெருமூச்செரியும் விஷயங்கள்.அதிகபட்சம் என்னால், கிணற்றின் மேலிருந்து நேராகக் குதிக்கத் தான் தெரியும்.சதுரக்கிணற்றில் நன்கு நீச்சல் பழகிய பின்,சைக்கிள்டியூப்,கைலி உதவியின்றி எங்கு வேண்டுமானாலும் நீச்சலடிக்கும் தைரியம் வந்தது.
முழுப் பரீட்சை லீவுக்கு,பெரியம்மா ஊரான ஒ.கோவில்பட்டிக்குப் போவேன். என் பெரியம்மா மகன் சதீஷ் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து,
மதிய உணவுக்குப் பிறகு, ஒரு மூன்று மணி நேரம் அந்த ஊரில் இருக்கும் எல்லா கிணறுகளிலும் ஊறிக்கிடப்போம். வேப்பம்பட்டியார் கிணறு, சீனிநாயக்கர் கிணறு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிணறு।ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒவ்வொரு விதமான சாமுத்ரிகா லட்சணங்கள். வேப்பம்பட்டியார் கிணறு குறுகலாக வட்டமாக இருக்கும்: அதன் தண்ணீர் கண்ணாடி மாதிரி இருக்கும்.சூரிய வெளிச்சத்தில், கீ..ழே தரையில் கிடக்கும் கற்கள் பளிச்சென்று தெரியும்.சீனிநாயக்கர் கிணறு ஷங்கர் படக் கிணறு போல, மிக பிரம்மாண்டமாக இருக்கும்.கிணற்றுக்கு மேலே, தரை வழியாக கிணற்றை சுற்றி ஓடிவரவே முழுதாக மூன்று நிமிடங்கள் தேவை.இதில் வேறு, "உள்ள முதலை எல்லாம் இருக்குடா" என்று அந்த ஊர்ப் பையன்கள் சொல்கையில்,"ஒரு வேளை இருக்குமோ?" என்கிற சந்தேகம் வயிற்றில் புளியைக் கரைக்கும்.உள்ளே நீந்திக் கொண்டிருக்கையில் காலில் படும் எந்தப் பொருளும் முதலையின் பற்களோ என்கிற கிலியை ஏற்படுத்தும்.
படித்து முடித்து,சென்னைக்கு வேலைக்கு வந்த பின் கிணறு எல்லாம் கிடைக்கவில்லை.சரி,கடல் இருக்கையில் கிணறு எதற்கு? என்று,ஆளில்லாத காந்தி பீச் போய் நண்பர்களுடன் சேர்ந்து அரிதாக எப்பொழுதேனும்ஒரு இரண்டு மணி நேரம்கடலில் ஆட்டம் போட்டு வருவேன்.
இப்பொழுது மும்பையில், இருக்கும் வேலைப்பளுவில் அதெல்லாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்கள்.
சென்ற வருடம் கல்லுப்பட்டிக்கு சென்றிருந்த போது,கத்தாரில் வேலைபார்க்கும் என் நண்பன் ஜெயக்குமார் விடுமுறையில் வந்து இருந்தான்.வெகு நாள் கழித்து வந்து இருந்ததால்,ஊரின் நிறைய இடங்களை சென்று பார்த்தோம். "வாடா! சதுரக்கிணறு வரைக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துரலாம்டா" என்று அவனை வலுக்கட்டாயமாக அழைத்துப் போனேன்.
சதுரக்கிணறு, சற்று வயதாகி, பொலிவிழந்து காணப்பட்டது.
அதைப் பார்த்தால், இப்போது உள்ள சிறுவர்கள் யாரும் அடிக்கடி போய் நீந்தும் இடம் போலத் தெரியவில்ல. தடுத்து வளர்ந்திருந்த முட்செடிகளை கவனமாக விலக்கி, படிகளில் இறங்கினேன்।பணியாரக்குழிக்கு வெகு கீ॥ழே தூசி படிந்த, கலங்கலான நீர்மட்டம் தென்பட்டது.
அதிகம் பயன்படுத்தாததால் சற்றுப் பாழடைந்து போனசதுரக்கிணறைப் பார்க்க மனதுக்கு என்னவோ போல இருந்தது. "வாடா! போகலாம்" என்கிற ஜெயக்குமாரின் கூவலுக்கு பதில் ஏதும் சொல்லாமல்
கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.

விடியற்காலை

புரண்டு படுத்ததால் பூமிப்பந்தின்
முதுகு பார்த்திருந்தவெளிச்சம்
இப்போது முகம் நோக்கி.

விழித்த உடனேயே அன்றைய இருத்தலை
உறுதி செய்து கொள்ளும் ஜீவராசிகள்.

மீண்டும் வெளிச்சக் கண்ணாடி
பொருத்திக்கொண்டஇருள் கண்கள்.

தான் மெளனமாகி,
பிற சப்தங்களை கடத்தும்காற்று.

பொய்கள் சுமக்கும் நாளிதழ்கள்
போலியான வெட்கத்தில் வீட்டு வாசலில்.

அன்றைய காலைக் கடனுக்கான
காத்திருப்பில் நாட்காட்டி.

உறக்கம் கலைந்த எரிச்சலில்
மனிதர்களை எழுப்பும் அலாரம்.

மதயானை

வழிபாட்டுத்தலங்களில் பகைப்புகை.
சிலுவை சுமந்த கிருஷ்ணனும்
குழலூதும் அல்லாவும்
வெண்ணை உண்ணும் கிருஸ்துவும்
நெடி தாளாது விரைந்து வெளியேறினர்.
யாருமில்லை இப்போது அங்கு-
வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.

அர்த்தமுள்ள கேள்விகள்.

தரமான சிந்தனைக்கு அடையாளம்-கேள்விகள் கேட்பது தான்.
கேள்விகள் நமது சிந்தனையைத் தூண்டுகின்றன.
நமது கருத்துக்கள் சரியா,தவறா என்று இனம் கண்டறிய உதவுகின்றன.
சில கேள்விகள் நமது வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை.நம் வாழ்வில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரியும்(தெரியாவிட்டால் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்)
நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது திருடனாகவோ (அல்லது இரண்டும் சேர்ந்தவராகவோ) இல்லை என்றால்,தாராளமாக உங்களை எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொள்ளுங்கள்.இது போன்ற கேள்விகளை கேட்பதால் கிடைக்கும் நன்மைகளை விட,அவைகளை கேட்காமல் போவதால் அதற்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம்.

கீழ்காணும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்।இவைகள் எந்த அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படாதவை.ஆரம்பத்தில் இவைகளுக்கான உங்களின் பதில்கள் மேம்போக்காகப் பட்டாலும்,மீண்டும்,மீண்டும் கேட்கப்படுகையில் அவை அர்த்தம் பொதிந்த பதில்களை கொடுக்கின்றன.

What do I want to achieve with my life?
What should I want?What matters to me at this time in my life?
Why do I want what I want?Does it really matter?
Who am I living my life for?What don't I know?
What do I not question about myself?
What can I learn from this?
What are my plans for the next year?
What support do I need in order to ...?
Who can help me?How ambitious am I these days?
Am I still learning and growing?
What needs my attention today/this week/this month/ this year?
If i died tomorrow,whatwould be missing from my obituary that I would like to see there?
What can I do about it?What am I afraid of losing?
What am I afraid of gaining?
What would I like to overhear people saying about me?
What would I not like to hear said about me?
Why is my best friend my best friend?
Would winning the lottery be a blessing or a curse?
What would I do if I knew I could not fail?
Is that all there is to this?
How do I know this to be true?
In what way am I causing or reinforcing this behaviour?
If I had a year to live,what would I do with the time?
How do I feel when I get up in the morning?
When have i felt most alive?
Does my reputation work for or against me?
What would I like to be able to do in one year's time that I can't currently do?
Or five years from now?Ten years? Twenty years? Fifty years?
What action can I take rather than worrying?
What am I prepared to give up in order to ...?
What is the best outcome in this situation? And the worst?
What could affect my plans?
What do I need to do to make sure that I get what I want?
What do I need to find out before I go any further?
Why not?
What is the best thing I've done in the last year and why?
What aspects of my life do I enjoy the most? And the least?
What could other people learn from me?

ம்.எப்படி உணர்கிறீர்கள்?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை எழுதி வைத்துப் படிக்கவும்-முடிந்தால் வாய் விட்டு.அப்போதுதான் நாம் எந்த அளவுக்கு நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக (அல்லது இல்லாதவர்களாக)இருக்கிறோம் என்பது புலப்படும்.

மேலும்,இந்த கேள்விகளோடு,கிளைக் கேள்விகளையும் கேட்கையில்,(Eg: "Can you be more specific?"or "Do you have anything else to say on this subject?") அவை இன்னும் அதிக பயனுள்ள பதில்களை தரும்.
நினைவிருக்கட்டும்:மோசமான பதில்கள் இருக்கலாம்;ஆனால்,மோசமான கேள்விகள் என்று எதுவும் இல்லை.நம்மை நாம் கேட்கவில்லை என்றால், வேறு யாரும் நம்மைக் கேட்கப்போவதில்லை.என்ன? சரிதானா நான் கேட்பது?


(John Middleton எழுதிய Upgrade Your Brain என்னும் புத்தகத்தின் உதவியுடன்...)

Xpress

காத்திருப்புகளுக்குப் பின்
அதிவேக முத்தங்கள்;
உச்சக்கட்டம் நிகழும் முன்பே
துரிதமாய் விலகி விட...
தண்டவாளம் மட்டும்
தனியே,விரகத்தில்.

கோவில் திருவிழா


"நன்றாக உடைய வேண்டுமே"
தேங்காய்க் கூடையுடன்
பயம் கலந்த பக்தியில் பெண்கள்।

சின்னவயது பள்ளித்தோழிகளை
பார்வையால் தேடும் இளசுகள்।

அழும் குழந்தைக்கு அருகிலேயே
வந்து விற்கும் பலூன்காரன்।

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன்
சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள்।

திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த
குதூகலத்தில் சிறுமிகள்।

கோவில் மணி ஓசையையும்,
சிலரது சாராய நெடியையும்
பாரபட்சமின்றி சுமந்து திரியும் காற்று।

புதிதாய் முளைத்த வெளிச்சத்தில்
சற்றே கலவர முகத்துடன் இருள்

எப்போதும் போல் எதுவும் பேசாமல்
மெளனமாய் அமர்ந்திருக்கும் சாமி।

பயணம்

இது...
ஜன்னல் வழி உலகின் என் பார்வைப் பதிவுகள்
உள்ளக் கரையில் எண்ண அலைகள் தரும் அதிர்வுகள்
பயணத் தேடலுக்கான என் ஆட்காட்டி விரல் பதில்
பல்சுவை கருத்தினை எடுத்துரைப்பேன் இதில்
தத்தித் தவழ் மழலையின் விரல் பிடிக்கா முதல் நடை
தனக்குள்ளே எழுகின்ற வினாக்களின் பல விடை
வானம் தொட, நான் ஏறும் என்னாலான ஒரு ஏணி
வாழ்வுத் தோட்டத்தில் உதிக்கும் வலைப்பூக்கள் இனி
வழிப்போக்கர்கள் அனைவரும் வருக வருக
இடித்துரைப்பு, பெரு ஊக்கம் எல்லாம் தருக
இளைப்பாறல்,பயணித்தல் இரண்டும் நிகழும் ஒரு விந்தை இடம்
தலை பாரம் இறக்கிட தன் முனைப்பு வெல்லும் உலக சந்தை இடம்
கடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்
நான் கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு
கடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்.