December 30, 2007

ஏழிமலா-கேரளா கடற்கரையில் ஒரு மாலைப்பொழுதில்



















நடைமேடை எண்-2

நீண்ட பெருமூச்சுடன் கடக்கும்
ஒரு பழைய எஞ்சின்
பளிச்சிடும் கேமரா வெளிச்சத்திற்குப் பின்
இயல்புக்குத் திரும்பும் மனித முகங்கள்
சரக்கு ரயிலென்று தெரிந்ததும்
ஏமாற்ற முகப் பிச்சைக்காரன்
ரயில் புறப்படும் நேரத்தில்
விலகுவதற்குள் இறுகப் பற்றப்படும்
புதுத் தம்பதிக் கைகள்
அடுத்த ரயிலுக்காக அம்மாவுடன்
காத்திருக்கும் குழந்தை விடும்
பபிள்கம் முட்டையில்
திரும்பத் திரும்ப உடையும்
என் உலகம்

வெடிகுண்டு மிரட்டல்


அனாமதேயத் தொலைக்குரல் ஒன்று
அவசரமாய் நிறுத்தியது
புறப்படும் என் ரயிலை.
தொடையுயர மோப்பநாய்
முகர்ந்து பார்க்கவே பிறவியெடுத்ததாய்
ஏஸி, ஸ்லீப்பர் எல்லாமும் ஏறி
இருக்கையின் கீழ், பயணியர் பைகள்
எல்லா இடத்திலும்
அதன் மூச்சும்,வழியும் எச்சிலும்
எதுவும் இல்லை என்று உற்சாக விசிலடிக்கப்பட
தேடியது கிடைக்காமல்
சோகமாய் அமர்ந்தது ப்ளாக்கி..

December 29, 2007

சொற்கள்

கைக்குள்ளிருந்து விடுபட்ட பறவையாய்
எதிர்பாரா இலக்கு நோக்கி
எங்கெங்கோ சேரும் சில
எனக்குள் சிறைவைத்தும்
தப்பியோடித் தப்பர்த்தம் தரும்
சொல்லப்படாத சில
தவறான பொத்தான் மேல்
வெகுநாட்களாய் அழுத்திக் கொண்டு
பெரிதாய் பாரமூட்டும் பளுவுடன் சில
எந்தக் காதாலும் உரிமை கொண்டாடப்படாது
அனாதையாய் அலையும் சில
ஆள்மாறாட்டமாய், "எள் என்றால்
எண்ணெய்"யைப் பொருள் கூறி
எரிச்சலூட்டும் இன்னும் சில
ஒடுங்கிப் போய் உறைந்து ஆழத்தில்
பயன்படுத்தப் படாமலேயே இருக்கும் சில.
எவ்வளவு முயற்சித்தும் நினைவில் வராத
கடவுளின் சொற்கள்
பிரியத்தை வெளிப்படுத்தும்
அத்தனை சொற்களும்
அதிகப் பயன்பாட்டில் தேய்ந்து
உருவம் இழந்திருக்க
புதிய அகராதியை உருவாக்குகிறேன்
யாருக்கும் தெரியாத சொற்களுடன்.

December 28, 2007

கனவுகள் செய்வோம்-1

நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கனவே வருவதில்லை என்று நீங்கள் சொன்னால் அது சும்மா உடான்ஸ்.நம் எல்லோருக்குமே கனவுகள் வருகின்றன.நம் தூக்கத்தில் சுமார் 25% நேரம் கனவு காண்பதில் செலவிடுகிறோம். கனவு காண்பது வலதுபக்க மூளையின் செயல்பாடு.ரெம் (REM-Rapid Eye Movement) நிலையிலே தான் நமக்குக் கனவுகள் வருகின்றன.ஒவ்வொருவரின் ஆளுமைக்கேற்ப கனவுகள் வேறுபடுகின்றன.பொதுவாக,உணர்ச்சிகளின் உந்துதல்கள்,நிறைவேறாத ஆசைகள்,வருங்காலத்தைப் பற்றின ஊகங்கள்,மனதை மிகவும் பாதித்த விஷயங்கள் என கனவுகளுக்கான கருக்கள் நிறைய உண்டு.
கனவுகள் எகிப்து போன்ற பண்டைய மரபுகளில் மிக முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.
இன்னும் நிறைய மரபுகளில், கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்தியாகக் கூடக்
கருதப்படுகின்றன.
அறிவியல் முன்னேற்றத்திற்குக் கனவுகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.பெரிதும் உதாரணமாய் சொல்லப்படும் பென்சீன் வளைய மூலக்கூறு அமைப்பு கெக்கூல் என்கிற விஞ்ஞானியின் கனவில் தோன்றியது தான்.ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையையும்,எலியாஸ் தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததும் அவர்களின் கனவுகளின் உதவியால் தான்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியின்
பெரும்பகுதி அவரது கனவுகளில் கண்டறியப்பட்டதே.
சிக்மண்ட் ஃப்ராய்டு அதற்கு முன்பிருந்த கனவுகள் பற்றிய எல்லாக் கோட்பாடுகளிலிருந்தும் விலகி,"ஒடுக்கப்பட்ட நம் ஆசைகளின் வெளிப்பாடே கனவுகள்:அவைகள் பெரும்பாலும்
காமத்தை அடிப்படையாகக் கொண்டவைகளே" என்றார்.
என் அம்மாவிற்கோ, பாட்டிக்கோ ஏதேனும் துர்சொப்பனங்கள் வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே யாரேனும் தூரத்து அல்லது பக்கத்து உறவினரின் மரணச்செய்தி வந்து விடும்.
எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் தேவன்குறிச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாறையின் மேல் இரவில் உறங்குகையில் வரும் கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று என் நண்பனின் தாத்தா சொல்வதுண்டு.
எனக்கு வரும் கனவுகள் கொஞ்சம் விசித்திரமானவைதான்.என் கனவுகளில் நான் எழுதும் மிக நல்ல கவிதைகள் கண்விழித்ததும் ஒரு வரி கூட நினைவில் இல்லாமல் போவது என் வாசகர்களின் துரதிருஷ்டமே.சின்ன வயது முதல் அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு, ஒரு பிரம்மாண்டமான நூலகத்தில் நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பது தான்.திரும்பத் திரும்ப வரும் இந்தக் கனவால், அந்த நூலகத்தில் எந்த இடத்தில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பது கூட எனக்கு மனப்பாடமாய் ஆகியிருந்தது.
சில கனவுகளின் தொடர்ச்சி இன்னொரு நாளில் வேறொரு கனவாய்த் தொடரும்.
நிறைய முறை மாடி அல்லது உயரமான இடங்களிலிருந்து குதித்துப் பறப்பதைப் போல அடிக்கடி கனவு வரும் (இதனால் பயந்து போய் சின்ன வயதில் மொட்டை மாடியில் உறங்குவதை நிறைய முறை தவிர்த்திருக்கிறேன்)
90களின் இறுதியில் என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணிடம் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் மொத்த சாராம்சமும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய கனவாக வந்து, அதை என் டைரியில் எழுதியும் வைத்திருக்கிறேன். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து எங்காவது ரயிலையோ, பஸ்ஸையோ பிடிக்கப் போக வேண்டுமென்றால், சொல்லி வைத்தாற் போல் 2.58க்கு ஏதேனும் ஒரு பயங்கரக் கனவு வந்து 2.59க்கு என்னை எழுப்பிவிடும் விசித்திரம் பல வருடங்களாக எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நம் ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும் முயற்சியே கனவுகளின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம்.

சிறிது உறக்கத்திற்குப் பிறகு... தொடரும்.

December 22, 2007

3.5 கவிதைகள்

1.ரயிலின் வழியே

ரயில் வராத தண்டவாளத்தை
இருபுறமும் பார்த்துக் கடக்கையிலும்
பதட்டமாய் சிறுமியின் முகம்
உணவைக் கொட்டுபவர்களுக்கு
மன ஆறுதல் தரும் காக்கைகள்
ஸ்டேசனில் சண்டையிட்டு
சிறிது பயணித்தவுடன் விட்டுக் கொடுத்து
கைகோர்க்கும் தண்டவாளங்கள்
விரும்பினாலும் தொடரமுடியா
"நகர்வது நம்முடையதா, பக்கத்து ரயிலா
என உணர முடியா" மாய கணங்கள்
கீழே பயணிக்கத் தயாராய்
ஜன்னல் கண்ணாடியில்
பனித்துளி.


2.பிச்சை

சிக்னலில் குறையும்
ஒற்றை இலக்க எண்கள்
கொஞ்ச நஞ்சமிருக்கும்
மனிதாபிமானத்தையும்
பூஜ்யமாக்கும்

3. Vth C

மழைக்கு வழிவிடா
புது ஓடுகள்
சிமெண்ட் தரையில்
காணாமல் போன நாங்கள் செதுக்கிய
இந்திய வரைபடம்
வீட்டுக்கு விடும் மணி கணக்கிட
வெயில் வட்டங்கள் மீது தெளித்த மை
வெள்ளையின் வயிற்றில்
எண்ணிக்கையில் அதிகரித்து விட்ட
பொம்பளப் புள்ளைங்க.
வசந்தா டீச்சரின் கணக்கைக்
கவனிக்காமல்
வெளியே வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நான்.

3.5 என் பெயர் பொறித்த
அரிசியை எடுத்து உண்ணுகையில்
காலம் கெளவிப் போனது
அதன் பெயர் எழுதியிருந்த
என் தலையை.

December 14, 2007

சாயங்கால வானமும், ரயில் நிலையமும்

விருப்பப்படி வண்ணக்காட்சிகளை
நொடிக்கொருமுறை மாற்றும்
சாயங்கால வானம்
ஸ்கூட்டரின் பின்
அம்மா மடிக் குழந்தை
ரசித்து மழலையில் பகிர முயல
அந்த உலகின் சாவியைத்
தொலத்தவளின் மனம்
ஹாரன் ஒலிக்குப்பைகளால்
நிரம்பி வழிந்தது.

* * * * * *

ரயில் நிலைய நீண்ட படிகளில்
சத்தமாக ஒண்ணு, ரெண்டு எண்ணும்
பிஞ்சுப் பாதங்கள்
பொறுமையின்றித் தவிப்பில்
கடைசிப் படி.

* * * * * *

கடப்பவர் பார்வை படும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் உடையும்
என் முடமான கை.

மார்கழி மகிமை

எல்லா மாதங்களுமே நல்லவைதான் என்றாலும் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கும்
மார்கழிக்கென்று சில விஷேசங்களுண்டு.
டிசம்பரின் மத்தியில் தொடங்கி, ஜனவரியின் மத்தியில் முடியும் இந்த மாதம் உலகம்
முழுவதும் உள்ள மக்களை நல்ல விதமாய் பாதிக்கிறது.இஸ்லாத்தில்,ஆபிரகாம், தன் மகன்
இஸ்மாயிலை அல்லாவிற்காக திருப்பலி கொடுத்துக் காணிக்கையாக்கும் "ஈத் பெரு நாள்" வருவது இந்த மார்கழியில் தான்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் இந்த நாளில் புத்தாடை அணிந்து தங்களுக்கு பிரியமான வீட்டு விலங்குகளை அல்லாவிற்குப் படைத்து தங்களின் தியாகத்தை வெளிப்படுத்துவர்.
கிறிஸ்தவர்களது முக்கியமான பண்டிகையான இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் வருவதும் இந்த மாதத்தில் தான்.
பகவத்கீதையில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம்,"மாதங்களில் நான் மார்கழி" என்கிறார்.
இந்து சமயத்தின் வேதங்களும், ஆகமங்களும், மார்கழி மாதத்தை இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகக் குறிப்பிடுகின்றன.சொல்லப் போனால், இறைவழிபாடு தவிர மற்ற எல்லாவற்றையுமே ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த மாதம் முழுவதுமே ஆன்ம வளர்ச்சியில் ஈடுபடும் வழக்கமும் இங்கு உண்டு.எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில்,மதுரைக்கு அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த கோதை நாச்சியார் மார்கழியில் தான் திருப்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பிருந்து,
"நெய்யுண்ணோம்,பாலுண்ணோம்,கண்ணுக்கு மையிடோம்" என்று,இறைநிலை உணர்வுக்கெதிரான எல்லாவற்றையும் ஒதுக்கி, எம்பெருமான் பாதம் சேர்ந்தாள். (இன்றும் மார்கழியில் திருமணம் போன்ற எந்த விஷேசங்களும் நிறைய சமூகங்களில் நடைபெறுவதில்லை)
வைணவர்களுக்குத் திருப்பாவை என்றால், சைவர்களுக்கு மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை.
நமக்கு பிரம்ம முகூர்த்தம் அதிகாலை நான்கு மணிமுதல் ஆறு மணி வரை.அது போல, தேவர்களுக்கு மார்கழி மாதம் முழுவதுமே பிரம்ம முகூர்த்தம் தான். இந்த மார்கழியில்,சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக ஐதீகம்.சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாருக்காக, நந்தியை சற்றே தலையைத் திருப்பச் சொல்லிக் காட்சியளித்து நந்தனாரை ஆட்கொண்ட "திருவாதிரைத் திருநாள்" வருவதும் மார்கழியில் தான்.இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.மார்கழி ஏகாதசியில் விரதமிருந்து,இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனது நாமம் சொல்லி, விடியலில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் வழியே பக்தர்கள் பிரவேசித்துப் பரவசமடைவர்.விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், மார்கழியில் அதிகாலைப் பொழுதில்,வளி மண்டலத்தில்தூய்மையான ஒஸோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருவதாகவும், அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதாலேயே நம் முன்னோர்கள் அதை இறைவழிபாடு என்ற பெயரில் நாம் கேள்விகள் கேட்காமல் பின்பற்றும் சடங்குகளாக்கி விட்டனர் என்பதும் நிரூபணமாகாத உண்மையே.
மார்கழி பஜனையில் ஆண்கள் சத்தமாகப் பாடல்கள் பாடி,(அப்போது நன்றாக மூச்சு விட்டு ஓஸோனை உள்ளிழுத்து)ஊர் முழுவதும் சுற்றி வருவர்.பெண்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யும் வண்ணம் பெரிய பெரிய கோலங்களை விடியற்காலையில் போடும் போதும் அதே நல்ல விளைவுகள்.(இப்போது முன்னிரவு பதினோரு மணிக்குக் கோலம் போட ஆரம்பித்து ஒரு மணிக்கு முடித்து காலையில் எட்டு மணி வரை உறங்கும் இந்தக் காலத்துப் பெண்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை)
எங்கள் ஊரில் அதிகாலையில் எழுந்து, குளிரில் குளித்து பஜனை பாடி, ஊர் வலம் வந்த என் பள்ளி நாட்கள் மனதை வருடிச் செல்லும் மயிலிறகுக் காலங்கள் (என் மூன்றாம் வகுப்புக் காலங்களில் குளிக்காமல்,பல் மட்டும் துலக்கி (பிரசாதம் வாங்க)பஜனைக்குச் சென்று இருக்கிறேன்.)
கார்த்திகையில் மாலை போட்டு, விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சரணம் சொல்லி, இருமுடி தாங்கி, ஒருமனதாகி சபரிமலை யாத்திரை செண்று விரதம் முடிப்பது இந்த மாதத்தில் தான்.(எங்கள் தெருவில் உள்ள ஐயப்பன் கோவிலில் துண்ட ராமசாமி (தொண்டர் ராமசாமி தான் அப்படித் தேய்ந்து விட்டது) மார்கழி முழுவதும் போட்ட மைக் செட் பாடல்கள் நான் ஒவ்வொரு அரைப் பரீட்சையிலும் குறைவாய் மார்க்குகள் எடுத்ததற்கு ஒரு சாக்கு சொல்ல ரொம்ப காலம் பயன்பட்டது)
மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் அடுத்து வரும் வருடம் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும். இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும்,நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணையாய் இருக்கட்டும்.