Showing posts with label சொந்தக்கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை. Show all posts

March 15, 2011

விடாது கணக்கு



எனக்கும், சுப்ரமண்ய பாரதிக்கும் ஒரு விஷயத்தில் பொருத்தம். இருவருக்குமே, கணக்கு பிடிக்காத பாடம். கணக்கு, பிணக்கு ஆமணக்கு என்று பாரதி எழுதியதைப் பள்ளியில் படித்ததும் கணக்கு எனக்கு வராமல் இருப்பதை ஒரு பெருமையாகவே எண்ணத் தொடங்கினேன். எனக்கும்,கணக்குக்கும் ஏழரை என்றெல்லாம் சொல்லக் கூடாது.ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்து ஏழரை என்று தான் சொல்லவேண்டும்.அவ்வளவு தொலைவில் நான் கணக்கை வைத்திருந்தேன்.

பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்று தெரிந்ததும் நம் மீதே எனக்குக் கோபம் வந்த்து. அரேபியர்கள் அல்ஜிப்ராவையும்,கிரேக்கர்கள் ஜியோமெட்ரிக்கையும் கண்டுபிடித்திருந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.எனக்கு சுத்தமாகப் புரியாத விஷயங்களைப் பற்றி நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களோடு சண்டை போடும் போது மட்டும்தான் நான் ஜியாமெட்ரிக் பாக்ஸைத் திறந்திருக்கிறேன்-அந்தக் கூரான இரண்டு ஆயுதங்களுக்காக.

எப்படியோ பத்தாம் வகுப்பில் கணக்குக் கண்டத்தைக் கடந்து, பதினொன்று,பன்னிரண்டாம் வகுப்புகளில்,கணக்கு இல்லாத வொகேஷனல் குரூப்பை எடுத்து ஹாயாகப் பாஸ் பண்ணி வந்து விட்டேன். பி.வி.எஸ்.சியிலும்,எம்.பி.ஏவிலும் கணிதம் வரும் பாடங்களில் பரீட்சைக்கு முன் கம்பைன் ஸ்டடியோ, பரீட்சைகளில் (!!) கம்பைன் டிஸ்கஷனோ (!!) நட்த்தி ஒருமாதிரி ஒப்பேத்தி விட்டிருந்தேன்.


கணக்கைப் பற்றி இனி நினைத்துக் கூடப் பார்க்கத் தேவையில்லை என்று வசந்தமாகப் போய்க் கொண்டிருந்த என் வாழ்வில் போனமாதம் புயல் வீசியது. மார்க்கெட்டிங் துறை சீனியர்களுக்கான பகுதி நேரமாக ஒரு வருட அட்வான்ஸ்டு ப்ரோக்ராம் ஒன்றைப் பயில ஐ.ஐ.எம் கல்கத்தா வில் விண்ணப்பித்திருந்தேன். அதற்காகப் பெங்களூர் சென்டரில் போய் ரிஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்டி விட்டு வரும்போதுதான் நுழைவுத் தேர்வைப் பற்றிச் சொன்னார்கள். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு ஒன்று வைக்கப்படும். அதில் வெற்றி பெற்றால் தான் உங்களை சேர்த்துக் கொள்வோம்.இல்லையென்றால் நீங்கள் முன்பணமாக்க் கட்டிய பன்னிரண்டாயிரத்தில் அப்ளிகேஷன் தொகையான ஆயிரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மீதியைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என்றார்கள். நான், வடை போச்சே என்று ஃபீல் பண்ணும் வடிவேலுவைப் போல என்னை உணர்ந்தேன். இதில் புயல் எங்கு வந்ததென்றால் அந்தப் பரீட்சையில் பெரும்பகுதி கணக்குக் கேள்விகள் என்பதுதான்.

வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் விபரம் சொன்னதும், சட்டென்று, ப்ரியாகிட்ட ஹெல்ப் கேக்கலாம் என்றாள். ப்ரியா, என் மனைவியின் பத்து வருடத்தோழி.கணக்கில் புலி. எவ்வளவு கடினமான கணக்கையும், சும்மா இடது கையாலேயே அநாயாசமாகப் போட்டு ஊதித் தள்ளி விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ப்ரியாவின் வீட்டுக்கு சென்றோம்.முன்கூட்டியே போன் செய்திருந்ததால், தயாராகவே இருந்தார்.டிவியில் டிஸ்கவரி சேனல் ஓடிக் கொண்டிருந்த்து. வால்யூமைக் கொஞ்சம் குறைத்தார், அவர் கணவர்.

சாம்பிள் கொஸ்சன் பேப்பரை வாங்கிப் பார்த்தவர் கேட் எக்சாம் மாடல்ல இருக்கே. நெகடிவ் மார்க்கெல்லாம் இருக்குமே என்று பீதியைக் கெளப்பினார். வாழ்க்கையில் முதன் முதலாக மைனஸில் மார்க் ரிசல்ட் வாங்கும் கோரக் காட்சி என் கண்முன்னால் விரிந்தது. கால்குலேட்டர் எல்லாம் அலவ் பண்ண மாட்டாங்களே! என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டார்.அலவ் பண்ணினாலும் பெரிதாக ஒன்றும் நான் கிழித்து விடப்போவதில்லை என்பது வேறு விஷயம்.


க்வாண்டிடேடிவ் ஆப்டிடியூடுக்கு அகர்வால் தான் பெஸ்ட், ஆனா, அது இப்ப இல்லையே என்று அங்கலாய்த்தார்.டி.வி.யில் டிஸ்கவரி சேனலில் மான் ஒன்றைப் புலி கணக்குப் பண்ணிக் கொண்டிருந்த்து.பின்,அதனாலென்ன, ”கேட்” எக்ஸாமுக்காகப் பிரிப்பேர் பண்ற கைட்ஸ் இருக்குது. இது ஹெல்ப் பண்ணும் என்று சொல்லி, ஷெல்ஃபில் இருந்து ஒரு ஐந்தாறு புத்தகங்களை என்னிடம் கொடுத்தார்.

சாம்பிள் பேப்பரில் இருந்த ஒரு சில கணக்குகளை எனக்கு சொல்லித்தர ஆரம்பித்தார். உங்களுக்கு எல்.சி.எம் தெரியும்ல!என்றதும், மி.சி.ம.தானே, தெரியும் என்றேன்.(நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்) என் மனைவி முறைத்து, தமிழ் மீனிங் தெரியுமான்னு கேக்கல, எல்.சி.எம் போடத்தெரியாமானு கேக்குறா என்றாள். இல்லங்க.. மறந்து போச்சு என்றதும், மட மடவென்று ஒரு நோட்டில் மி.சி.ம. போடுவது எப்படி என்று விளக்கினார்.எல்.சி.எம் முடித்துப் பார்க்கையில் ஜோடி ஜோடியாக எண்கள் ஒன்றன் கீழ் ஒன்றான ஊஞ்சலில் ஆடி நின்றதாய் எனக்குத் தோன்றியது. அவர் போட்ட வேகத்துக்கு இவர் இடது கையால் அல்ல,இடது காலால் கூட கணக்கை அநாயாசமாகப் போடுவார் என்று தோன்றியது.

அடுத்த கணக்கைப் போட்டவர், இதுக்கு வெக்டார் யூஸ் பண்ணிப் போடுங்க என்றார். வெக்டார்— என் பள்ளியில் அதைத் தமிழில் என்ன சொன்னார்கள் என்று யோசித்தேன். வெண் திரையில் ஒன்றுமே ஓடவில்லை.

அடுத்ததாக வந்த ஒரு புரியவே புரியாத ஒரு கணக்குக்கு, இத x னு வச்சிக்குங்க. இத Y னு வச்சிக்குங்க என்று வலப்புறமும் இடப்புறமுமாக எண்களைப் பந்தாடிக் கொண்டிருந்தார். கடைசியில் விடை வந்ததும் புரிந்தது போலவும், புரியாதது போலவும் குழப்பமாக இருந்தது. புரியலன்னா, கேளுங்க என்றார். கணக்கு தானே சொல்லிக் குடுக்குறீங்க, அதுல எதுக்கு ஏ,பி,சி, எக்ஸ்,ஒய் எல்லாம் வருது என்று கேட்க நினைத்து, பின் புரியுது என்று தலையை ஆட்டினேன்.என் மனைவியின் கைக்கெட்டும் தூரத்தில் என் கன்னம் இருந்ததும் ஒரு காரணம்.கல்யாணமாகி இந்த ஒன்றரை வருடத்தில் சேஃப்டி ஃபர்ஸ்ட் என்பது பசுமரத்தாணியாக ஆழ்மனதில் நன்றாகப் பதிந்து விட்டிருந்த்து.

இரண்டு மூன்று கணக்குகளை மட மட வென்று போட்டவர், அதற்கடுத்து நான்காவது, ஐந்தாவது செல்கையில், கொஞ்சம் யோசித்து,இது ரொம்ப அட்வான்ஸ்டு லெவலா இருக்கு,எனக்கே எப்பிடி சால்வ் பண்றதுன்னு தெரியல என்று தலையை சொறிந்தார். .அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, ஏமாற்றமாய் உதட்டைப் பிதுக்கி, இதெல்லாம் மேத்ஸ்ல பி.ஜி. பண்ணவங்க தான் தொடவே முடியும் என்று நிராயுதபாணியாக அல்கொய்தா குரூப்புடன் சண்டையிடப் போகிறவனைப் பார்ப்பது போல் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.

சரி விடுங்க! சாய்ஸ்ல விட்டுர்றேன் என்றேன்.டிவியில் மானைக் கெளவிப் பிடித்தது புலி.


கணக்குகள் எல்லாம் கஷ்டமாக இருப்பதைப் பார்த்து என்னை விட ப்ரியா அதிகம் டென்ஷன் ஆனார். பரீட்சை எழுதப் போவது நானா, இல்லை அவரா என்று ஒரு கணம் எனக்கு சந்தேகம் வந்தது. எனது ஐஸ் கூல் ஆட்டிடியூடைக் கண்டு என் மனைவியும் டென்ஷன் ஆனார். நாளைக்குப் பரீட்சை இருக்கேனு கொஞ்சம் கூட கவலையே இல்லாம எப்பிடி இருக்கார் பாரு என்று ஆற்றமாட்டாமல் சொன்னாள்.நான் டென்ஷனாய் முகத்தை மாற்றிக் கொள்ள முயன்று அந்த மானைப் போல தோற்றுக் கொண்டிருந்தேன்.

சட்டென்று ஞாபகம் வந்தவராய்,ஹே, நம்ம சந்திரப்பிரபா எம்.எஸ்ஸி ஸ்டாடிஸ்டிக்ஸ். அவங்களப் பிடிச்சா போதும். ஒரு ஒன்னவர் டூ அவர்ஸ்ல கோச்சிங் குடுத்துருவாங்க என்று எக்ஸாம் கொஷ்சன் பேப்பரே அவுட் ஆனது போல குதூகலித்தார்.ஆனா, அவங்க நம்பர் என்கிட்ட இல்லையே... என்றவர், இரு .சிவநாதன்கிட்ட இருந்து வாங்குறேன் என்று அவருக்கு ஃபோன் செய்தார்.நம்பர் வாங்கி, சந்திரப்பிரபா லைனில் கிடைத்து அவரிடம் கேட்ட போது, மறு நாள் காலை அவருக்கு முக்கிய வேலைகள் இருப்பதால் தன்னால் சொல்லித்தர முடியாதென வருந்தினார்.என் களிமண் மூளை ஒரே நாளில் ராமானுஜனின் கணித மூளையாக உருமாறும் பரிணாமச் சங்கிலியின் தொடர்ச்சி, விட்டுப் போனதாய் உணர்ந்தேன்.


அதற்கப்புறம் தோழிகள் இருவரும் யார் யாருக்கோ ஃபோன் செய்து, என் மண்டையில் கணக்குக்காக எமர்ஜென்ஸி பூஸ்டர் பொருத்த, செய்த முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை.ஒரு அருமையான ஞாயிறு காலைப்பொழுதை கணக்குத் தெரியாதவனிடம் போராடிக் கழிப்பதற்கு யாருக்குத்தான் மனமிருக்கும்?

இப்படி அலுவலக நண்பர்கள், அவர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் என ஃபோன் மேல் ஃபோன் செய்ததில் இந்நேரம் பெங்களூரில் முக்கால்வாசிப் பேருக்கு நான் கணக்கில் கையாலாகாதவன் என்று தெரிந்து போயிருக்கும். இவள் ஏன் இப்படிப் பண்ணுகிறாள்? கழுதை பாஸோ ஃபெயிலோ, காதும் காதும் வச்ச மாதிரி பரீட்சையை எழுதிட்டு நாம பாட்டுக்க இருக்கலாம்னா, அது முடியாது போலருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.

இதில் பாதிப் பேராவது ஞாபகம் வைத்திருந்து கேட்பார்கள்- “என்ன ஆச்சு உங்க ஹஸ்பெண்ட் எழுதின எக்ஸாம்?” என்று. எனக்கென்ன? கேவலப்படப்போவது நானில்லையே! கொஞ்ச நாளைக்கு ஃபுட்வேர்ல்ட்,ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற, அவர்கள் எல்லோரும் வந்து போகும் பொது இடங்களுக்குப் போகாமலிருந்தால் இதைப் பற்றி மறந்து போக வாய்ப்பு இருக்கிறது.

சரி.நான் கணக்கு தவிர மத்த போர்ஷனுக்கு பிரிப்பேர் பண்றேன் என்றேன்.

எவ்வளவு ஃபீஸ் கட்டினீங்க?

பன்னண்டாயிரம். செலக்ட் ஆகலன்னா, ஆயிரம் ரூபா போக மீதியத் திரும்பக் குடுத்துருவாங்க என்றேன்.ஆயிரம் ரூபாயை காந்திக் கணக்கில் கட்டிய மனநிலை என் மனைவியின் முகத்தில் தென்பட்ட்து.

மறுநாள் காலை வழக்கத்தை விட தாமதமாக எழுந்தேன். குளித்து, சாப்பிட்டு விட்டு ஒரு மூன்று மணிநேரம் எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்த்து இந்த மாதிரித் தேர்வுக்கெல்லாம் ஒரு ஒருமாத காலத்திற்காவது பயிற்சி செய்திருக்க வேண்டுமென்று.

மதிய சாப்பாட்டின் போது, எக்ஸாம் எழுதிட்டு வர நைட்டு 10 மணிக்கு மேல ஆகும். அதனால நல்லா சாப்பிடுங்க என்று அன்புத் தொல்லையில் ஒன்றரை மடங்கு சாப்பாடு உள்ளே சென்றது.சாப்பிட்டு விட்டு சோஃபாவில் சாய்ந்து படித்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. என் மொபைல் ஒலித்ததும் முழித்துக் கொண்டு எடுத்தேன். என் தோழி கவிதா, ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு, ராகு காலத்துக்கு முன்னாலயே கெளம்பிரு என்றாள்.


ஃபுட்வேர்ல்ட் போய்விட்டுத் திரும்பிய என் மனைவி, என்ன, நல்லாப் பிரிப்பேர் பண்ணீங்களா என்றவள், என் முகத்தைப் பார்த்ததும்,தூங்கினீங்களா? என்று அதிர்ச்சியானாள்.இன்னும் கொஞ்ச நேரத்தில் பரீட்சைக்குக் கிளம்ப இருக்கையில் எனக்குத் தூக்கம் வந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.இல்ல..கொஞ்ச நேரம் மூளைக்கு ஓய்வு குடுத்தா, பரீட்சை எழுதறப்ப ஃப்ரஷ்ஷா யோசிக்க முடியும் என்கிற என் பதில் திருப்தி அளிக்கவில்லை போலும். நல்ல வேளையாக, போன ஞாயிற்றுக் கிழமைதான் ஹாலை சுத்தம் செய்திருந்தோம். அதனால் கைக்கு வசதியாக சிக்கக் கூடிய பல பொருள்கள் பரணில் போயிருந்தன.தவிரவும் நான் மண்டையில் கட்டுப் போட்டுக் கொண்டு பரீட்சை எழுதுவதை என் மனைவியே விரும்பவில்லை போலும். இன்றைக்கு ராசிபலனில் என் ராசிக்கு கிரேட் எஸ்கேப் என்று போட்டிருக்கும் போல.

ஊரெல்லாம் சந்தோஷமாக இருக்கும் ஒரு ஞாயிறு மாலையில் நான் மட்டும் பரீட்சை எழுதச் சென்றேன்.இந்தாங்க என்று பேனா,இரண்டு மூன்று பென்சில்கள்,ஷார்ப்னர்,அழிரப்பர் என்று ஒரு ஸ்டேசனரி மூட்டையையே என்னிடம் கொடுத்தாள்.அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு அம்பத்தெட்டு அரிவாள்கள் என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

மணி நாலேகால் என்பது எனக்கு எண்களாகத் தெரியாமல் பின்னத்தில் தெரிந்தது.சாலையில் செல்கையில் பார்க்கின்ற வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் கூட நான்கு இலக்கக் கணித எண்களாகவே தோன்றின.ஆறரை மணி பரீட்சைக்கு ஐந்தரைக்கே போய் விட்டிருந்தேன்.நான் தான் முதல் பலியாடு.ஒரு ஹாலில் பத்துப் பதினைந்து மேஜைகள்.ஒவ்வொரு மேஜையிலும் உடல் மெலிந்ததாய் திசைக்கொன்றாய் நான்கு கம்ப்யூட்டர்கள்.நான் இருப்பதிலேயே ஓரமாக இருந்த ஒரு கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தேன்.பின்னே! யாரும் என்னைப் பார்த்து, காப்பி அடிக்கக் கூடாதல்லவா!

லாக் இன் பண்ணி எழுத ஆரம்பிங்க என்றார்கள்.எப்போது ஆரம்பிக்கிறோமோ, அதிலிருந்து தொண்ணூறு நிமிடங்கள் பரீட்சை நேரம். சீக்கிரம் ஆரம்பித்தால் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்றெண்ணிக் கொண்டேன்.ஐந்து நாற்பதுக்கே, சரியான ராகு காலத்தில் நான் என் பரீட்சையை எழுத ஆரம்பித்தேன்.

நெகடிவ் மார்க் இருக்கா? என்கிற மில்லியன் டாலர் கேள்வியைக் கேட்டேன்.இல்லை என்று பதில் வந்ததும், என் கால் நடுக்கம் நின்றதை உணர்ந்தேன்.

சுண்டக்கா கால்பணம்,சுமை கூலி முக்கால் பணம் என்பது போல, கேள்விகள் ஆறேழு வரிகளிலும், அதற்கான இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பத்துப் பனிரெண்டு வரிகளிலும் இருந்தன.

கொஞ்சமே கொஞ்சமாக இருக்கும் என் மூளைத் திறனை முதலிலேயே கணிதக் கேள்விகளுக்கு செலவழித்து வீணாக்க விரும்பாத நான் முதலில் மற்ற பகுதிகளை விடையளிக்க ஆரம்பித்தேன். வெர்பல் எபிலிட்டி,அனலிட்டிகல் எபிலிட்டி,ரீடிங் காம்ப்ரிஹென்ஷன் என்று ஒவ்வொன்றாக விடையளித்தேன்.அவையும் கணக்குக்குக் கொஞ்சமும் சளைக்காமல் இருந்தன.

மாதிரிக்கு ஒன்று...

நவீன தலைமைப் பண்புக் கோட்பாட்டின் படி கீழ்கண்ட எந்த செயல் மிகவும் மோசமானது?

ஒரு பணியாளர் வேலைக்கு வராமல் ஆப்சென்ட் ஆனால்

a)அவரை அநாகரீகமாகத் திட்டுவது

b)அவரைப் பணியில் இருந்து நீக்குவது

c)அவர் மீது வன்முறையைப் பிரயோகிப்பது

d)அவரை சக பணியாளர்கள் முன்பு அவமானப் படுத்துவது



மேலும் இதைப் போலவே கேள்வியும், நான்கு ஆப்சன்களும் கொடுத்து அதற்கடுத்து மேற்கண்ட செயல்களை எந்த வரிசைப் படி செய்வாய் என்று

1)adcb

2)bcad

3)dacb

4)dcab

என்றும் கேட்டு திக்கு முக்காட வைத்தனர். இவைகளை எல்லாம் முடித்து விட்டு,ஒரு வழியாகக் கடைசியில் கணிதத்திற்கு வந்தேன்.முதல்முறை படித்தாலே புரியும்படி எத்தனை கேள்விகள் இருக்கின்றன என்று பார்த்தேன். விரல் விட்டு எண்ணி விடலாம் போல.ஒவ்வொரு கேள்வியும் அதில் இருந்த நான்கு ஆப்சன்களும் என்னைப் பார்த்து சிரித்தன. எந்தக் கேள்விக்கு எந்த மெத்தட் பயன்படுத்தி விடைகளைக் கண்டறிவது என்று கூடத் தெரியவில்லை. அடுத்தமுறை அதையும் ஃபார்முலா போல மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.நேரமாகிக் கொண்டிருந்தது.நெகடிவ் மார்க் இல்லையென்பதால்,எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து விட வேண்டும்.நம்ம அதிர்ஷ்ட்த்திற்கு ஒன்றிரண்டு சரியாக இருக்கும் என்று, கன்னா,பின்னாவென்று மெளஸை நகர்த்தி கடைசியில் கர்சர் எந்த விடையில் நிற்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்தேன்.பூவா, தலையா போட்டுக் கூட விடையைக் கணிக்க முடியாது-ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு ஆப்சன்கள் கொடுத்திருந்தார்கள்.

ஆறரை மணிக்கு அந்த ஹாலில் பத்துப் பன்னிரெண்டு பேர் அமர்ந்திருந்தோம்.வந்தவர்களில் பெரும்பாலானவர்களின் முகம் பேயறைந்ததைப் போல இருந்தது. சிலர் முகத்தில் கேள்விக்குறிகளும் அதிர்ச்சி ஸ்மைலிகளும் தாண்டவமாடின.சிலரைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்தது- ட்ரிக்னாமெட்ரி,அல்ஜிப்ரா,வெக்டார்களை எல்லாம் சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு வந்திருந்தவர்கள் போல இருந்தார்கள்...மானிட்டரைப் பார்ப்பதும், ரஃப்ஷீட்டில்,கணக்கைப் போடுவதும், தகுந்த விடையைக் கிளிக் செய்தும், அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போய்க்கொண்டும் பிசியாக இருந்தார்கள்.. அறுபது கேள்விகளுக்கு, தொண்ணூறு நிமிடங்களில் விடையளித்தாக வேண்டும்.

கொடுக்கப் பட்டிருந்த ரஃப் ஷீட்டில் எல்லோரும் கணக்கு செய்து விடையை வருவித்துக் கொண்டிருக்க என் ரஃப் ஷீட் மட்டும் புத்தம் புதியதாய், ஒரு புள்ளி கூட இல்லாமல் வெறுமையாய் இருந்தது.மானிட்டரின் ஒரு மூலையில் டைம் பாம்-இன் டிக் டிக் போல இறங்கு வரிசையில் மீதமிருந்த நிமிடங்கள் குறைந்து கொண்டே வந்தன.எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து விட்டு, மீண்டும் முதலில் இருந்து விடைகளை சரிபார்க்கத் துவங்கினேன்.ஒரு சில கேள்விகளுக்கு வேறு பதில்களைத் தேர்வு செய்யலாமோ என்கிற குழப்பம் வந்ததால், வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டேன்.

சரியாக மூன்று நிமிடங்கள் இருக்கையில்  சப்மிட் பட்டனை அழுத்தினேன்.

மானிட்டரில், நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பரீட்சையை முடித்து விட்டீர்கள் வாழ்த்துகள் என்று வந்தது.எல்லோரும் பரீட்சையில் மும்முரமாக இருந்தனர். பயத்தை மறைத்தபடி, எப்போது ரிசல்ட் வரும் என்று கேட்டேன். மார்ச் முதல் வாரத்தில் வரும். ஐஐஎம் மில் இருந்து அவர்களே உங்களைத் தொடர்பு கொள்வர் என்றார் மைய உதவியாளர்.

சீக்கிரமே வீடு திரும்பின என்னைப் பார்த்து என் மனைவி,எக்ஸாமுக்குப் போனீங்களா போகலையா? என்று கிட்ட்த்தட்ட அலறினாள்.நான் நடந்ததை சொன்னேன்.சரி,அதுவும் நல்லதுக்குத் தான் சீக்கிரமே எழுதி, சீக்கிரமே வந்துட்டீங்களே என்றாள்.எப்பிடிப் பண்ணினீங்க என்ற கேள்விக்கு, கணக்கு மட்டும் கொஞ்சம் டஃப்பா இருந்தது. மத்ததெல்லாம் நல்லா இருந்துச்சு. ஆனா நிறைய கேள்விக்கு நாலு ஆப்சனுமே சரியா பொருந்தற மாதிரியே இருந்தது என்று மழுப்பலாக மையமாக ஒரு பதில் சொன்னேன். ரிசல்ட் எப்படி வந்தாலும் நான்தான் அன்னிக்கே சொன்னேனே என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்காக!

ஒரு சோம்பேறித் தனமான சனிக்கிழமை மாலையில் என் மொபைலுக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்த்து.உங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டோம். எங்கள் வலைத் தளத்தில் வந்து பாருங்கள் என்று. சரிதான்! டிஜிட்டல் ஆப்பு நமக்கு என்று எண்ணிக் கொண்டேன்.வலைத் தளம் போனால் என் ஐடி எண்ணைக் கேட்டது. எனக்குத் தான் எண்கள் என்றாலே பிடிக்காதே. அதெல்லாம் யார் நினைவில் வைத்திருந்தார்கள். எனது ஏ.டி.எம் பாஸ்வேர்டைக் கூட நான் ஒவ்வொரு முறையும் என் மனைவியிடமோ, அல்லது கால் சென்டருக்கோதான் போன் செய்து கேட்பேன்.  :) எவ்வளவு ஞாபகப் படுத்தினாலும் என் மொபைல் நம்பரையே நானே மறந்து விடுவதால் நான்கே நான்கு டிஜிட் எண்களும்,மீதி ஆறு டிஜிட்டுக்கு பூஜ்யங்களும் இருக்குமாறு ஒரு மொபைல் நம்பர் வைத்திருக்கிறேன்.(பார்ப்பவர்களுக்குப் படா ஃபேன்ஷியாகத் தெரியும் இந்த நம்பருக்குள் இத்தனை ஓட்டைகள் இருப்பது எனக்குத் தான் தெரியும்) அப்படியிருக்கையில் இந்த ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணை எல்லாம் நான் எதற்காக நினைவு வைத்திருக்கிறேன்? சென்டருக்கு போன் செய்து ரிசல்ட் வந்து விட்டதாமே என்றேன். அதற்கு , நீங்கள் பாஸாகி விட்டீர்கள் தானே என்று என்னிடமே கேட்டார். இல்லை. என் நம்பர் மறந்து விட்ட்து, என்றவுடன் இருங்கள்! என்னிடம் இருக்கிறது , நான் பார்த்துச் சொல்கிறேன் என்றார். கொஞ்ச நேரம் கனத்த மெளனம். ”ஸாரி சார், நீங்க செலக்ட் ஆகவில்லை” என்கிற பதிலை எதிர்பார்த்து, அதற்கு எப்படி பதிலளிப்பது என்று பதட்டமாக நான் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். கங்கிராஜுலேஷன்ஸ் நீங்க செலக்ட் ஆயிட்டீங்க என்றார். சரி. ஐடி நம்பரை மாற்றிப் போட்டு விட்டாரோ என்று நினைத்து, கொஞ்சம் கன்ஃபர்ம் பண்ணுங்க என்றேன். சரியாகத் தான் போட்டிருக்கிறேன். நீங்க பிரகாஷ் ராஜகோபால் தானே என்றார். ஆமாம் என்று அதிசயித்தேன்.அடுத்த வாரத்திற்குள் வந்து அடுத்த தவணையான ஐம்பதாயிரத்தைக் கட்டிவிடுங்கள் என்று நன்றி சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.

நான் சந்தோஷத்துடன் என் மனைவிக்கு ஃபோன் செய்தேன். நான் செலக்ட் ஆன விபரத்தை சொன்னவுடன், அடப்பாவமே என்றாள். அவளாலும் நம்பமுடியவில்லை.ப்ரியாவிற்கு போன் செய்து சொல்லி அவருக்கு நன்றி சொன்னபோது, அவரும் ,நம்பவே முடியல, நீங்க என்னவோ சுமாரா பண்ணியிருக்கிங்கன்னு சொன்னீங்க ஆனா, செலக்ட் ஆகிட்டிங்க என்றார்.மறுநாள் சென்டருக்கு நேரில் சென்று ஆஃபர் லெட்டரைக் கைகளில் வாங்கிப் படித்ததும் தான் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை வந்தது.

Go down deep enough into anything and you will find mathematics என்று எங்கோ படித்திருக்கிறேன்.

கணக்கை இனிமேலாவது ஒழுங்காகக் கற்க வேண்டும் என்று ஆழமாக நினைத்துக் கொண்டேன்.



படங்கள் : இணைய தளத்திலிருந்து...

June 29, 2008

கல்யாணமும் கயாஸ் தியரியும்


"வயசாயிட்டே இருக்கு. சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்க" என்று என்னிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருந்ததாலும்,எனக்கே கொஞ்சம் லேட்டாக உறைக்க ஆரம்பித்ததாலும் என் கல்யாணத்திற்குப் பெண் தேடும்
முயற்சியில் இறங்கினேன்.
"பொண்ணா கிடைக்கலே! பையன்கள் கிடைக்குறதுதான் குதிரக் கொம்பா இருக்கு" என்கிறவர்களின் பேச்சால் சீக்கிரம் பெண் கிடைத்து விடுவாள்
என்று அசாத்திய நம்பிக்கையுடன் இருந்தேன்.சில மாதங்கள் கழித்தே என் நம்பிக்கை "குருடு" என்பது தெரிய வந்தது.
என் வீட்டில் ஜோதிடத்தின் மேல் அவ்வளவு எல்லாம் நம்பிக்கை கிடையாது.இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே எங்கள் ஜாதகங்களை
எங்கள் ஆஸ்தான ஜோதிடரும்,உறவினருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்துப் பலன் கேட்பர்.
மற்றபடிக்கு,வாரத்துக்கு இரண்டு முறை ஏதேனும் தம்ளர் அல்லது பாத்திரங்கள் இடம் மாறி வைத்துக் காணோம் என்றால்
அது கிடைக்குமா,கிடக்காதா? அது வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறதா? எந்தத் திசையில் இருக்கிறது? என்றும்,அவ்வப்போது வரும் முழங்கால் வலி ஏன் வருகிறது? அது
முழுவதுமாக எப்போது குணமாகும் என்பதற்கு மட்டும் ஜாதகம் பார்ப்பார்கள்.

ஏழுகடல் தாண்டி,ஏழு மலைதாண்டி என்று சின்ன வயதில் படித்திருப்பீர்களே! கல்யாணம் என்பது அது போல.
எனக்கு ஏற்ற மணப்பெண் கன்னட மாத்வ குலத்தில்,காசியப கோத்திரம் அல்லாத வேறு கோத்திரத்தில் பிறந்தவளாகவும்,என் நட்சத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய 12 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பவளாகவும்,
அதையெல்லாம் தாண்டி,ஜாதகப் பொருத்தத்தில் பத்துக்கு ஏழு பொருத்தமேனும் உள்ளவளாகவும் இருக்க வேண்டும்.(குறிப்பாக நான் மிகவும் வலியுறுத்தும் "தமிழ் தெரிந்த" பெண்ணாக இருத்தல் மிக அவசியம்)அப்போது தான் அடுத்த கட்டமாக பெண்ணின் போட்டோவைக் கேட்டு,அது பரஸ்பரம்
பிடித்திருந்தால் நேரில் சென்று பெண்பார்க்க முடியும்.

தினமலர் மணமாலைப் பகுதியில் இலவச விளம்பரம் வெளியிட்டதில் ஒன்றிரண்டு ஜாதகங்கள் வந்தன.
இனி மளமள வென்று எல்லாம் நடந்தேறி விடும் என்றிருந்தேன்.ஆனால், ஜாதகப் பொருத்தம் என்னும் விஷயத்தால் இதோ அதோ என்று
இழுத்தடித்துக் கொண்டே போனது.வீட்டில் பெரியவர்கள் முயற்சிப்பது ஒரு புறம் தொடருட்டும்:
நாமும் முயற்சிக்கலாம் என்று இண்டர்நெட்டில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கும் கல்யாணத்தளங்களான சாதீ.காம்,பாரத்மேட்ரிமோனி.காம்,
ஜீவன்சாதி.காம்,கே.எம்.மேட்ரிமோனி.காம்,பரிவர்த்தன்.காம் என்று எல்லா தளங்களிலும் என் ப்ரொஃபைலை இட்டேன்.
இவைகளில் உள்ளாடை சைஸ் தவிர மீதி என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கேட்கிறார்கள்.
எப்படியாவது கல்யாணம் நடந்தால் சரி என்று என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கொடுத்தேன் - போட்டோ உட்பட.
அதே தளங்களில் என்னைப் போன்று இட்டிருந்த பெண்களின் ப்ரொஃபைல்களுல் எனக்குப் பிடித்ததைத் தேடி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

கொஞ்ச நாட்களாகியும் ஒன்றும் பதில் வரக்காணோமே என்று மீண்டும் என் ப்ரொஃபைலை சரி பார்த்ததில் "பார்ட்னர் ப்ரிஃபரன்ஸ்" என்றிருந்த,
என் வருங்கால மனைவி பற்றிய என் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தது தெரிய வந்தது.சரி என்று அதையும் முடித்து வைத்தேன்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய் சில பதில்களும்,புதிய விருப்பங்களும் என் இன்பாக்ஸிற்கு வர ஆரம்பித்தன.லவ்லி ரோஸ்,மீட்ரூபி,
நேச்சுரல்பியூட்டி,ஸ்வீட்டி இவைகள் எல்லாம் எனக்கு விருப்பம் தெரிவித்திருந்த பெண்களின் ப்ரொஃபைல் பெயர்களில் ஒரு சில.
நான் விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள் சிலபேர் என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.சரி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால்
சந்தா கட்டியிருப்பவர்கள் மட்டுமே அடுத்தவரது முகவரியையோ,தொலைபேசி எண்ணையோ பார்க்க முடியும் என்கிற விஷயம் தெரிய வந்தது.
அவர்களாவது என் விலாசம் பார்த்து என்னைத் தொடர்பு கொள்வார்கள் என்று சில வாரங்கள் காத்திருந்தேன். ம்ஹூம். என்னைப் போன்றே
அவர்களும் இலவச சந்தாதாரர்களாய் விருப்பம் தெரிவித்த எதிர்பாலினத்தவரின் போட்டோவையும்,மானிட்டரையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள் போலும்.
போனால் போகிறது என்று ஆறு மாத சந்தாவிற்கு என்று இரண்டு தளங்களுக்கு பணம் செலுத்தி என்னை அப்கிரேடு செய்து கொண்டேன்.
அதன் பின் எல்லோரது முகவரியையும் பார்த்து தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் என்றிருந்தவன் நினைப்பில் விழுந்தது மண்.
நிறையப் பெண்கள் தங்களது போட்டோ,தொடர்பு விபரங்களைப் பாஸ்வேர்டு கொடுத்துத் திண்டுக்கல்பூட்டு போட்டுப் பூட்டி வத்திருந்தார்கள்.
அவர்களது விருப்பம் இருந்தால் தான் நான் அவைகளைப் பார்க்க முடியும் என்கிற நிலை.

ஒரு ஞாயிறு காலையில் உமா என்ற பெண்ணிடம் இருந்து பாஸ்வேர்டு எனக்கு வந்திருந்தது.பாஸ்வேர்டை உபயோகித்து
அவரது போட்டோவைப் பார்த்து அதிர்ந்து போனேன். மானிட்டர் கொள்ளாத அளவு ஃபோட்டோவில் பெரிய உடல்வாகு.என்னை விட இருபது கிலோ எடை கூட.
சுமோ என்று பெயரிருந்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
சரி அந்த லவ்லி ரோஸ் என்னவாயிற்று என்று போய்ப் பார்த்தால் அந்தப் ப்ரொஃபைல் நீக்கப்பட்டிருந்தது.நான் பார்த்து வைத்திருந்த ரோஸை
யாரோ பறித்துச்சென்று விட்டார்கள்.கல்யாணம் ஆகி விட்டிருக்கும் போல.

பரிவர்த்தன்.காம் இல் ஒரு நூற்றைம்பது பெண்களின் விபரங்களை அலசி,அதில் பொருத்தமாக உள்ள ஐந்தாறுக்கு என் விபரங்களை அனுப்பி வைத்தேன்.
ஜாதகம் இணைக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணின் முழுவிபரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு,ஜோதிடம் தெரிந்த என் உறவினர் ஒருவரிடம் அப் பெண்ணின்
ஜாதகதைக் காட்டியதில்,இது எனக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது என்றார்.
பெண்வீட்டாரை ஃபோனில் அழைத்து ஜாதகப் பொருத்தம் பற்றி எடுத்துக் கூறிய போது, அப்பெண்ணிற்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டதாகவும்,
தற்போது முழுகாமல் இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறினார்.

மற்ற பெண்களின் விபரங்களை வைத்துத் தொடர்பு கொண்டதில்,வத்றாயிருப்பில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை இப்படி ஆரம்பிக்கிறார்.
"என் பெண்ணிற்கு நான் - ட்ரான்ஸ்ஃபரபிள் டீச்சிங் ஜாப்.உங்கள் பையன் இந்தப்பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருவாரா?"
துரதிர்ஷ்டவசமாக நான் பணியிலிருக்கும் மும்பை பயோ-டெக் கம்பெனிக்கு வத்றாயிருப்பிலோ,அதற்கருகிலோ கிளைகள் ஏதுமில்லாததால்,வத்றாயிருப்புப் பெண்ணைக் கல்யாணம்
செய்து கொண்டு அருகிலிருக்கும் பிளவக்கல் அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்க்கை முழுவதும் ரசிக்கும் பாக்கியம் எனக்கு ப்ராப்தியாகவில்லை.

என் கஸின் ஒருவரது வற்புறுத்தலின் பேரில் த ஹிந்து நாளிதழில் ஞாயிறு அன்று வெளியாகும் வரிவிளம்பரத்தில் நான்கு வாரங்களுக்கு விளம்பரம் செய்ததில்
நிறைய பெண்வீட்டாரிடமிருந்து ஃபோன்களும்,இ-மெயில்களும் வந்திருந்தாலும்,எல்லாம் ஜாதகப் பொறுத்த டகாஸிஸ் கேஸ்சிலில் அடிபட்டு விழுந்தன.விளம்பரத்தின் சைடு எஃபெக்டாக
ஏகப்பட்ட தனியார் திருமண ஏஜென்சிகளிடமிருந்தும் மெயில்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெயில்கள்.அவர்களிடம் உறுப்பினராகச் சேரச் சொல்லி வற்புறுத்தி.

இருந்தாலும் அவ்வப்போது சாதியிலோ,ஜீவன் சாதியிலோ,கன்னட மேட்ரிமோனியிலோ தினசரி விருப்பம் தெரிவித்த, பதில் கேட்டு மெயில்கள் பல வந்து கொண்டுதானிருக்கின்றன.
எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது.உலகில் 99.5 சதவீத பெண்கள் அழகானவர்கள்;மீதமுள்ள 0.5 சதவீத பெண்கள் என் க்ளாஸ் மேட்ஸ் என்று. அது போல, எனக்கு எல்லா விதங்களிலும்
பொருத்தமுள்ளதாக, நன்கு லட்சணமாக இருக்கும் அநேகமாக எல்லாப் பெண்களும் நான் பிறந்த அதே காசியப கோத்திரத்தில் பிறந்து(த் தொலைத்து) என் பாச மலர்களாகி விட்டார்கள்.வேறு கோத்திரத்தில் பிறந்து
நிறையப் பொருந்தி வரும் சில பெண்களிடமிருந்தும் எனக்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்தன.
சாம்பிளுக்கு சில.

32 வயதாகும் பி.எச்.டி.படிக்கும் ஒரு பெண் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவரைப் பற்றி மேலும் தகவலறிய அவர் ப்ரொஃபைலைப் படித்ததில்,ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
ஆராய்ச்சியில் ஈடுபடுவாராம்.ஆராய்ச்சி பற்றிய இன்ன பிற விபரங்கள்... அவர் வசிக்கும் அந்தச் சின்ன டெஸ்ட் ட்யூபுக்குள் நான் ஒண்டி வாழ்வது கஷ்டம் என்று நாசூக்காக மறுத்து விட்டேன்.

மும்பையில் இருந்து இன்னோரு பெண்...29 வயது.அட்வர்டைசிங் துறையில் பணி.சரி.பரவாயில்லை என்று முழுக்கப் படித்ததில் "ட்ரிங்" என்கிற கட்டத்துக்கு அருகில் "எப்போதாவது"
என்று பூர்த்தி செய்திருந்தார்.எனக்குப் பின் புலத்தில் பழைய பாட்டான "குடி மகனே.... ஹே ஹே ஹே. பெருங்குடிமகனே...நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு...
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...ஓடியது."

28 வயதாகும் மைசூர்ப் பெண்,சைன் டிஸ்ட்,குரூப் -ஏ பணியிலிருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க -மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எழுதியிருந்தார்.

இது போக டாக்டர் பெண்கள் எல்லோரும் "டாக்டர்கள் மட்டும் விண்ணப்பிக்க" என்று சிரிஞ்சோடு எழுதியிருந்தார்கள்.(சொந்தமாக க்ளினிக் வைத்திருந்தால் சாலச்சிறந்தது என்றும் பின்குறிப்புகள்)
நானும் டாக்டர் தான்,ஆனால் மாட்டு டாக்டர் என்று எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள மனம் வரவில்லை.(பின்னால் க்ளினிக் வைத்து மாடு,மனிதர் இருவரையும் ஒரே க்ளினிக்கில்
மருத்துவத்திற்கு வரவழைப்பதில் சில ப்ராக்டிகல் டிஃபிக்கல்ட்டீஸ் உள்ளன)

மேற்கண்ட முயற்சிகள் தவிர தனியாக இது போன்று திருமண அரேஞ்மெண்ட் செய்பவர்களாக ,ஜாதகப் பரிவர்த்தணை செய்யும் சிலரிடம்
(நங்க நல்லூர்,வியாசர்பாடி,நுங்கம்பாக்கம்,ஸ்ரீரங்கம்,மதுரை) தலா முன்னூறு ரூபாய் கொடுத்து என் விபரங்களையும் ஜாதகத்தையும் பதிந்து உள்ளேன்.
அவர்களிடமிருந்தும் அவ்வப்போது தகவல்கள் வரும்.
ஆனால் ஜாதகப் பொறுத்த முதலை வாயில் கஜேந்திர கதி மோட்சம் தான்.

பொருந்தி இருந்த ஒரே ஒரு பெண் ஜாதகத்தை வேறு ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கப் போய்,அதற்கு அவர்,"இதில் ஒன்று சுத்த ஜாதகம்,
இன்னொன்று,தோஷம் வந்து நிவர்த்தியான ஜாதகம்.இவைகளை சேர்த்தால் சண்டை சச்சரவுகள் வரும்:அதிகபட்சம் ஆளையே காலி பண்ணி விடும்" என்று
ஆட்டோ அனுப்பாத குறையாய் அச்சுறுத்தினார்.

இது இப்படியிருக்க, சமீபத்தில் கயாஸ் தியரி பற்றிக் கால்வாசிப் (பார்த்துப்)புரிந்து கொண்டு எதைச் செய்தால் அதனுடைய பின் விளைவாக என் திருமணத்திற்குத் தக்க பெண் கிடைப்பாள்
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மும்பையில் பட்டாம்பூச்சிகள் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து சென்னை வரும்போது மொத்தமாகப் பட்டாம் பூச்சிகள் வாங்கி செலக்டிவ்வாக
நங்கநல்லூர், மயிலாப்பூர்,மாம்பழம் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் பறக்க விடத் திட்டமிட்டுள்ளேன்.அவைகள் பறந்து அந்த ஏரியாக்களில் இருக்கும் எனக்கேற்ற பெண்களை/அவர்களின் பெற்றோர்களை
என் இன்பாக்ஸிற்கு மெயில் அனுப்ப வைக்கும் என்று கயாஸ் தியரியின் படி திடமாக நம்புகிறேன்.அதுவரை என் அறையில் இருக்கும் டேபிள்,டி.வி.போன்ற பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டு
அதனால்,ஏதேனும் குறுகிய கால கயாஸ் விளைவுகள் நிகழலாமோ என்கிற எண்ணத்தில் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

இப்படிக்கு
கயாஸ் தியரியால் கல்யாணம் நடக்கக் காத்திருப்பவன்.