January 11, 2011

ஸ்கூலுக்குப் போயிருந்தேன்

நிறைய வருடங்களுக்குப் பிறகு, நான் படித்த காந்தி நிகேதன் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.-அதுவும் குடும்பத்துடன். காந்தி நிகேதன் என்றால்    “காந்தி வாழும் இடம்” என்று பொருள்.




1940 இல், கோ.வேங்கடாஜலபதி என்னும் சுதந்திரப் போராட்ட்த் தியாகியால் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குட்டி ஒண்ணாப்பு முதல் டிப்ளமா வரை உள்ளது. உணவு,கதராடை அணிதல்,கூட்டுப் பிரார்த்தனை, தங்களது இட்த்தைத் தாங்களே துப்பரவு செய்வது,தும்முவது,இருமுவது என்று சகலமும் காந்தியம் தான்.ஆனால் இந்த காந்தியம்,அகிம்சை எல்லாம் மாணவர்களைக் கண்டிப்பதில் கடைப்பிடிக்கப்பட மாட்டாது.பிரம்படி,காதைக் கிள்ளுதல் முடியைப் பிடித்து ஆட்டி, கன்னத்தில் அறைதல் என்று ஒவ்வொரு ஐயா,அக்காவுக்கும் அவரவர் ஸ்டைல் வேறுபடும். ஆசிரியர்களை ஐயா,ஆசிரியைகளை அக்கா என்று கூப்பிடுவதுதான் எங்கள் பள்ளி வழக்கம்-அதில் ஐம்பது வயதான லில்லி ஜாய்ஸ் அவர்களும் எங்களுக்கு “அக்கா” தான்.


ஐம்பொன் காந்தி சிலை


காந்தியுடன் தற்போது கோ.வே.யின் சிலையும்

காந்தியின் கையெழுத்து

நாலாம் வகுப்பு வரை மதுரை கோ.புதூரில் ஆர்.சி ஸ்கூலில் படித்து விட்டு, என் அப்பா காலமானதால், பாட்டி ஊரான கல்லுப்பட்டியில் பிடுங்கி வைக்கப் பட்ட நாற்றாக காந்தி நிகேதனில் சேர்ந்தேன்.
கிராமிய சூழ்நிலையும்,வெள்ளந்தியான மாணவர்களும் மிகவும் பிடித்துப் போயின. அதை விட சந்தோஷமான விஷயம், “இங்க ஒழுக்கந்தான் முக்கியம்.நீ படிக்காமக் கூட இரு ,ஆனா,ஒழுக்கமா இருக்கணும்” என்று ஒவ்வொரு மீட்டிங்கிலும் தலைமை ஆசிரியர் சொல்லும் போதும், ஆஹா! அப்ப படிக்கவே வேணாம், ஒழுங்கா அமைதியா இருந்தாப் போதும் என்று நெஞ்சுக்கு நிம்மதியாக இருந்தது.ஆனாலும்,அவ்வப்போது மார்க்குகள் குறைந்தால் அடி வெளுத்து வாங்கியதால்,தப்பிக்க என்ன வழி என்று யோசித்த்தில், எங்கள் ஊரிலிருக்கும் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் சேர்ந்து படிக்கலாம் என்று தோன்றியது. விசாரித்துப் பார்த்த்தில், பாதி நாள்கள் வாத்தியார்கள் பள்ளிக்கே வரமாட்டார்கள், வேற எங்கேயும் சேர்க்க முடியாத தறுதலைப் பசங்கள தான் அங்க போய் சேர்ப்பாங்க என்கிற செவிவழிச் செய்திகளைக் கேட்ட்தும், அதுக்கு இது எவ்வளவோ மேல் என்று அடங்கி விட்டேன். அடி வாங்கினால் கையில் வலிக்காமலிருக்க எண்ணெய் தடவிக் கொள்வது, பரீட்சைக்கு முதல் நாளிரவில் அக்குளில் வெங்காயம் வைத்து செயற்கையாகக் காய்ச்சல் வரவழைத்துக் கொள்வது போன்ற முயற்சிகள் எல்லாம் அவ்வளவாக பலனளிக்காமல் போக, சரி,படித்துத் தொலைப்போம் என்று படிக்க ஆரம்பித்தேன்.

அந்தக் காலத்தில் என் அம்மாவும்,பெரியம்மாவும் பத்தாம் வகுப்பு வரை படித்தது காந்தி நிகேதனில் தான்.

எங்கள் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகளும் மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆளுக்கொரு வகுப்பில் அங்கேயே படித்துக் கொண்டிருந்ததால், எல்லா ஐயாக்களுக்கும் எங்கள் குடும்பத்தை நன்கு தெரியும்.ராஜேஸ்வரி மகந்தானடா நீ? ஒழுங்காப் படிக்க மாட்டியா என்று ராஜேஸ்வரி மகனாகப் பிறந்ததற்காகவே கூடுதல் சிறப்பு அடிகள் விழும்.

ராஜேந்திரப் பிரசாத் கேட் வழியே நுழைந்து கொடிமர மைதானத்தைக் கடந்தோம்.(அன்றைய ஜனாதிபதி ராஜேந்திரப் பிரசாத் வந்து திறந்து வைத்த வாயில் அது). ஒவ்வொரு திங்கள்கிழமை காலையும் கொடிவணக்கத்தில் (அன்றைக்கு மட்டும் “இன்” செய்த சட்டை) யாராவது ஒரு ஐயாவோ, அக்காவோ சுதந்திரப் போராட்ட்த் தியாகிகளைப் பற்றி ஒரு குட்டி சொற்பொழிவாற்றுவர். மண்டையைப் பிளக்கும் வெயிலில் தண்டி யாத்திரையில் பிரிட்டிஷ் காவலர்களிடம் அடிபட்டுக் கீழே விழும் தியாகிகள் போல ஒன்றிரண்டு மாணவர்கள் வெயிலில் மயங்கி கீழே விழுவர்.

கொடிமரத்தை அடுத்து காந்தி மண்டபத்திற்கு சென்றோம்.


வெறும் கூரையுடன் இருந்த காந்தி மண்டபம்,தற்போது முழுமையாகக் கட்டப்பட்டு, எல்.சி.டி.புரொஜக்டர் வசதியுடன்,கூடவே நிறுவனரான கோ.வே. அவர்களது சிலையுடன் அழகாக,விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளது. உள்ளே,பல சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள்-எங்கள் ஆசிரமத்தில் தன் கடைசிக் காலத்தைக் கழித்த ஜே.சி.குமரப்பா,குருசாமி ஐயா அவர்கள் உள்பட.

காந்தி மண்டபத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட,காந்தியின் மார்பளவு இருக்கும் சிலை உண்டு. அதற்கு ஒரு பெருமை என்னவென்றால், அது காந்தி கையெழுத்திட்ட சிலை.வழக்கம் போல கதர் மாலையுடன் ,ஓட்டைக் கண்ணாடியுடன் ஊழல்கள் மலிந்து விட்ட இந்தியாவில் கஷ்டப்பட்டு சிரிக்கும் முயற்சியில் இருந்தார் காந்தி.

லாங் பெல்


பாட்டுக் குழுவினரின் தம்புரா

பிரார்த்தனையில் பயன்படுத்தப் படும் அரிக்கேன் விளக்கு

மண்டபத்தை விட்டு வெளியே வந்தால்,அதனருகிலேயே, லாங் பெல் (ஆராய்ச்சி மணி போல இருக்கும் மணி) முன்பை விட இன்னும் சற்று உயரமாக்கப் பட்டிருந்தது..காலை ஐந்து மணிக்கு ஆசிரம ஹாஸ்டலான நேரு இல்லத்தில் இருக்கும் மாணவர்களை எழுப்பி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது இந்த மணி தான்.மேலும், காலை , மாலை பிரார்த்தனை நேரங்கள் தவிர மற்ற அசாதாராண நேரங்களில் இந்த மணி அபாயமறிவிக்கும் மணியாகவும் இருந்திருந்தது. ஒருமுறை இரவு பதினோரு மணிக்கு பேப்பர் செக்‌ஷனில் தீப்பிடித்து எரிகையில் இந்த மணியை விடாது அடித்த்தும், ஊர்மக்களில் சிலர் விரைந்து வந்து தீயை அணைக்க உதவினர்.

ஃபேஷன் பெக்னாலஜி




தேன்செக்‌ஷன்,பேக்கரி செக்‌ஷன்,ஃபேஷன் டிசைனிங் (டெய்லரிங்கைத் தான் அப்படி எழுதி வச்சிருக்காங்க) எல்லாம் தாண்டி,பிள்லையார் கோவிலருகே சென்றேன்.கோடை விடுமுறையில் ஒன்றிரண்டு வாரங்கள் தேன் செக்‌ஷனில் லேபிள் ஒட்டும் வேலைக்கு செல்வோம்.காலையும்,மாலையும்,இலவசமாக சுத்தமான தேன் கலந்த  ஜீஸும்,மாத இறுதியில் பத்தோ,இருபதோ ரூபாயும் கிடைக்கும்.அரசமரத்தடியில் சிறியதாக இருந்த பிள்ளையார் கோவில் சில வருடங்களுக்கு முன் பெரிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.மார்கழி மாதம் முழுவதும் சுடச்சுட பொங்கல் பிரசாதம் சாப்பிட்டது நினைவுக்கு வந்த்து.ஒவ்வொரு பரீட்சைக்கு முன்பும் பிள்ளையாரிடம் வந்து வேண்டிக் கொள்வது வழக்கம். “நீ நல்லாப் படிக்காம பரீட்சையில மட்டும் எப்படியாவது பாஸ் பண்ண வச்சிருனு வேண்டுறது எந்த வகையில நியாயம்?” என்று அவர் கேட்டது எங்கள் ஒருவர் காதிலும் விழாது.
கோ.வே.சமாதி


10 ஆம் வகுப்பு ஓடுகள் வரைந்த மழைக் கோட்டுச் சித்திரம்
பரீட்சையில் பாஸாக்கும் பிள்ளையார்

நேரு ஹாஸ்டல்,காதி வித்யாலயா,ஆசிரம நிறுவனர் கோ.வேங்கடாஜலபதி சமாதி,குமரப்பா குடில் என்று எல்லா இடங்களிலும் மரங்களின் எண்ணிக்கை கூடியிருந்த்து.நாங்கள் செல்வதற்கு முன் சில நாள்களாக தொடர்ந்து பெய்த  மழையினால்,எப்போதுமே பச்சைப் பசேலென இருக்கும் எங்கள் பள்ளி,இன்னும் பசுமையாக இருந்தது.பெயர் தெரியாத புதுப் புது மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.வித விதமான  செடி கொடிகள் வளர்ந்து கொண்டிருந்தன.நாங்கள் படிக்கையில் மெயின் ரோடின் இருபுறங்களிலும் இருந்த பன்னீர் மரங்கள் இப்போது ஒன்று கூட இல்லை.அதிகாலை வேளையில் வழியெங்கும் உதிர்ந்து கிடக்கும் பன்னீர் பூக்களினூடே நடப்பது ஒரு அற்புதமான அனுபவம்.
ஆறாப்பு,ஏழாப்பு

உலக மேப்



ஆசிரியர் குடியிருப்பு வழியாக எட்டாம் வகுப்புகள் இருக்கும் இடம் வந்தோம். சண்முகநாதன் ஐயா கம்பைன் கிளாஸ் எடுக்கும் மரத்தடி சிமெண்ட் பெஞ்ச் அவர் அவ்வப்போது அடிக்கும் ஜோக்குகளை நினைவூட்டியது. (What is the name of your class teacher? னு கேட்டா, Jamukku Nathan னு எழுதியிருக்கான்)எட்டாம் வகுப்பின் வெளிப்புறச் சுவரில் இருக்கும் உலக வரைபடம்தான் எனக்கு மற்ற நாடுகளையும், கண்டங்களையும் அறிமுகம் செய்து வைத்தது. விடுமுறைகளில் அங்கு அடிக்கடி வந்து, மேப்பின் எல்லா இடங்களையும் ஞாபகமாக மனதில் ஏற்றிக் கொள்வேன்.யாருடனாவது செல்கையில் ஏதாவது ஒரு இடத்தைக் கேட்க வைத்து விநாடிகளில், அந்த இட்த்தை மேப்பில் காட்டி சந்தோஷமடைவேன்.


இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுத் தூண்



திரு.அரியநாயகம்,திரு.ஜே.சி.குமரப்பா,திரு.ரா.குருசாமி

லக லக பாய்ஸ்


பெயர் தெரியாத பூ

ஒன்பது,பத்து வகுப்பறைகள் சின்னச் சின்ன மாற்றங்களுடன் இருந்தன.நான் ஒன்பதாவது படித்த கூரை வகுப்பு இருந்த இடம் காலியாக இருந்த்து. பதினோராம் வகுப்பு எங்களுக்கு முக்கால்வாசி மரத்தடியில் தான் நடந்தது.கொஞ்ச நாள் ஆடிடோரியத்தில் நடந்தது.ஆடிட்டோரியம் அருப்புக் கோட்டை ஜெயவிலாஸ் பஸ் ஓனர் கொடுத்த இருபதாயிரத்தில் துவக்கப்பட்டு,அவ்வப்போது கிடைக்கும் நன்கொடைகளால், மின்விசிறிகள், மணல் தரையிலிருந்து சிமெண்ட் தரை என்று படிப்படியாக முன்னேறிய கட்டிடம்.அது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, வகுப்பறைக்கு சம்மாக நாங்கள் அதிக நேரம் இருந்த இடமும் அதுவே.ஆடிட்டோரியம் மிக முக்கியமான இடம்.கூட்டுப் பிரார்த்தனை,க்விஸ் புரொக்ராம், பேச்சு,பாட்டு,கவிதைப் போட்டிகள் போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் எல்லாவிதமான கூட்டங்களும் ஏன் ப்ப்ளிக் பரீட்சைகளும் நடைபெறும் இடம். நிறைய மாணவர்களுக்கு அது குட்டித் தூக்கம் போடும் இடமும் கூட. .(மீட்டிங்கின் போது)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை.காலையில் முதல் பீரியட் கட். எங்கள் பள்ளி ஒரு மியூசியம் மாதிரி; அடிக்கடி அதை யாரேனும் வந்து பார்த்துக் கொண்டேயிருப்பர். சமயத்திற்கேற்றார்ப் போல, ராமகிருஷ்ண மடத்திலிருந்தோ, காந்தி கிராமத்திலிருந்தோ,அல்லது தேசிய அளவில் புகழ் பெற்ற பாபா ஆம்தே போன்ற சமூக ஆர்வலர்கள், சிலசமயம் வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து பார்த்துப் போவர்.. அப்போதுதான் ரைம்ஸ் சொல்லக் கற்றுக் கொண்ட குழந்தையை ஒவ்வொரு விருந்தினர் வருகையிலும் திரும்பத் திரும்ப அதே ரைம்ஸை சொல்ல வைத்துப் புளகாங்கிதமடையும் பெற்றோர் போல, ஒவ்வொரு விருந்தினர் வரும் நாளும்,எங்களது கூட்டுப்பிரார்த்த்னையில் அவர்களைப் பங்கேற்க வைத்துப் புளகாங்கிதமடைவார் எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்.
வருகிற விருந்தினர்களும்,எங்களது அடக்கத்தையும்,குருபக்தியையும் பார்த்து விட்டு,இது போன்ற மாணவர்களை நான் என் வாழ்நாளில் எங்குமே பார்த்த்தில்லை; இனி பார்க்கப் போவதுமில்லை.உங்களையெல்லாம் பார்க்கையில் வருங்கால இந்தியாவைப் பற்றி எந்தக் கவலையும் எங்களுக்கு இராது என்கிற ரேஞ்சுக்கு எங்களைப் பாராட்டி விட்டுப் போவர். எங்கள் மனமெல்லாம், ஐயா,இன்னும் ஒரு பத்து நிமிஷம் பேசிக்கிட்டே இருங்க அப்பதான்,செகண்ட் பீரியட் வச்சிருக்கிற டெஸ்ட் கட்டாகும் என்று வேண்டுவதிலேயே இருக்கும்.

ஒருநாள் காலை முதல் பீரியட் பாட்டனி ஐயா பரீட்சை வைத்திருக்க, ஒரு கண்டெசா கார் வந்து இருந்ததைப் பார்த்து, யாரோ பிரமுகர் வந்துள்ளார், இன்னிக்குக் கூட்டுப் பிரார்த்தனை தான், பரீட்சை கட்டாகி விடும் என்று நாங்கள் சந்தோசத்தில் திளைத்திருக்க, அன்று கூ.பி.நடைபெறவில்லை. பெருத்த ஏமாற்றத்தில் வந்த எங்களை, பாட்டனி ஐயா க்ளாஸ் டெஸ்ட் வைத்து,உடனடியாக திருத்திக் கொடுத்து உடனடியாக வெளுத்தும் வாங்கினார்.கூ.பி. நடக்காத சதி பற்றி விசாரித்துப் பார்த்த்தில்,நல்லி சில்க்ஸ் முதலாளி குப்புசாமி வந்து முதல்வரைப் பார்த்து விட்டு,ஆசிரமத்திற்கு ஏதோ நன்கொடை கொடுத்துவிட்டு,உடனே சென்று இருக்கிறார்.

ஜனவரி முதல் டிசம்பர் வரை குடியரசு தினம் முதல் கிருஸ்துமஸ் வரை வரும் எல்லா தலைவர்களின்,பிறந்த,வளர்ந்த நாள்கள் ஒன்றையும் விடாது கொண்டாடுவோம்.சிலசம்யம்,புதிது புதிதாக தீர ர் சத்தியமூர்த்தி, சரோஜினி நாயுடு என்று வருடா வருடம் நாங்கள் கொண்டாடும் தலைவர்கள் என்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கும்.சுதந்திர தினம்,குடியரசு தினம்,காந்தி ஜெயந்தி தினத்தில் மட்டும் ஊரெல்லாம் சுற்றி, வரிசையாக கோஷமிட்டு ஊர்வலம் வருவோம். மற்ற கொண்டாட்டங்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை, பின்னர், பேச்சுப் போட்டி,பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று அடக்கமாக எங்களுக்குள்ளேயே கொண்டாடுவோம். மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்குப் பின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் பேசுவார். சில சமயம் குருசாமி ஐயாவும் சிறப்புரை ஆற்றுவார்..அவர் பேச ஆரம்பித்தால் போதும். அன்றைக்குக் காலை வகுப்புகள் அத்தனையும் கோவிந்தாதான்.இரண்டு மணி நேரப் பேச்சில் ஒன்றே முக்கால் மணி நேரம் பக்கிஸ்தான் பக்கிஸ்தான் என்று பாகிஸ்தானைத் தாக்கிப் பேசுவார். இடையிடையே விடுதலைப் போராட்ட வரலாறு சமகால அரசியல் எல்லாம் தொட்டுக் கொள்வார்.ஒரு கிழட்டு சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஆண்டு விழா வருகையில்,அதற்கென நடைபெறும் முன்னேற்பாடுகளில் ஒரு இரண்டு வாரம் ஹோகயா தான். மீட்டிங் போட்டு, ஊர் வாரியாக ஒவ்வொரு மாணவரிடமும், அழைப்பிதழ்களைக் கொடுத்து, அந்தந்த ஊரில் இருக்கும் சுதந்திரப் போராட்ட்த் தியாகிகள்,ஊர்ப்பெரியவர்,ஆசிரமத்திற்கு நன்கொடை அல்லது ஏதேனும் உதவி செய்தோர், இப்படி,ஒருவர் விடாது எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பி ஆண்டுவிழாவிற்குப் பங்கேற்க அழைப்போம். பெரிசுகள் எல்லாம் வந்தால், சுதந்திரப் போராட்ட நினைவுகளை அசைபோட்டுப் பெருமூச்செரிய இரண்டு நாள்களாகும். ஆண்டு விழாவிற்கு ஒருமுறை, எல்லா ஆசிரியர்களும் சேர்ந்து,வாரக் கணக்கில் பயிற்சி செய்து,மிகப் பிரம்மாண்டமாக,சம்பூர்ண ராமாயணம் நாடகம் போட்டார்கள். செட்டிங்,உடைகள், வேடப் பொருத்தம், வசனம், காலச்சக்கரத்தின் மிரட்டும் குரல்,இசை என்று அச்சு அசலாக ராமாயண நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதை ஊரே ரசித்து மகிழ்ந்த்து..எங்களுக்கெல்லாம் ஒரு மாத்த்திற்கு பரீட்சை,வீட்டுப்பாடத் தொந்தரவுகளில் இருந்து விடுதலை.

ஆடிட்டோரியத்திற்கு எதிரே நாங்களே மூன்றடி அகலம்,மூன்றடி ஆழத்திற்குக் குழி வெட்டி, நட்டு வைத்த வேப்பங்கன்றுகள் இன்று,பரந்து விரிந்து பெரிய மரங்களாக வளர்ந்திருந்ததைப் பார்க்கையில் மனதுக்கு நிறைவாகவும், முற்றிலும் புதுவிதமான உணர்வாகவும் இருந்தது. ஆசிரமத்தில்,இப்போது எப்படியும் ஒரு இரண்டாயிரம் மரங்களாவது தேறும்.

காந்திய நெறிப்படி, பொய்சொல்லாமை,நேர்மை போன்ற குணங்களை மாணவர்களிடம் வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த எங்கள் பள்ளி, ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியது.அதாவது, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளில், கண்காணிப்பாளர்கள் ஒருவரும் இல்லாமல், தேர்வுகளை நட்த்துவது என்பதுதான்.துணைத்தாள்கள் எனப்படும் அடிஷனல் ஷீட்கள் தேவைப்படுவோர், மேஜையில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் போன்ற டப்பாவில் அதற்குரிய பத்துக் காசுகளைப் போட்டு விட்டு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப் பட்ட்து.வினாத்தாள்களைக் கொடுத்து விட்டு,கண்காணிப்பாளர் வெளியேறியதும் எல்லோரும் சற்று சிரிப்புடனே,பரீட்சை எழுத ஆரம்பித்தோம்.

முதல் சில நிமிடங்கள் எங்கேயிருந்தாவது யாராவது பார்த்துக் கொண்டிருப்பார்களோ என்று பயந்து யாரும் யாருடனும் ஒற்றை வார்த்தைக்கு மேல் பேசவில்லை.கொஞ்சநேரம் கழித்து சிலருக்கு தில் வந்து நீண்ட நீண்ட சம்பாஷணைகளுடன் விடைகளைப் பரிமாற ஆரம்பித்தனர்.எனக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண் என்னிடம் கேட்டுப் பார்த்து, நான் தர மறுத்ததால், என் கிராஃப் ஷீட்டை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அதைக் காப்பியடித்து விட்டு, அப்படியே சர்குலேஷனுக்கு விட்டு விட்டாள்.மணியடிக்க சற்று நேரம் இருக்கையில், கண்காணிப்பாளர் பழனிச்சாமி ஐயா (இவர் பரம சாது, அப்பாவி) வந்து எல்லாரும் நூலைக் கட்டி, பேப்பரைக் குடுங்க என்று அறிவிக்கையில், நான் அப்பாவியாக எழுந்து நின்றேன். “மணியடிக்கப் போகுது,பேப்பர் வேணுமா? என்று கேட்டவரிடம், ஐயா, என்னோட கிராஃப் ஷீட்டைக் காணோம்யா என்று முறையிட்டேன். “யாருப்பா, இவனோட கிராஃப் ஷீட்டை வச்சிருக்கிறது?” என்று கெஞ்சிக் கூத்தாடி, மூன்றாம் வரிசையில் இன்னொருவனிடம் இருந்த என் கிராஃப் ஷீட்டை வாங்கிக் கொடுத்தபடியால்,காணாமல் போக இருந்த என் 20 மார்க் கைக்கு வந்தது.கொஞ்ச காலத்திற்கு நடைமுறையில் இருந்த இந்த கண்காணிப்பாளரில்லாத் தேர்வு முறை மெல்ல மெல்ல ஊத்தி மூடப்பட்ட்து.ஆனாலும்,பரீட்சைக்கு அடுத்து நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனை மீட்டிங்கில்,எல்லா தேர்வறைகளில் இருந்தும் வந்த துணைத்தாள் காசுக் கணக்கு மிகச்சரியாக இருந்ததென்று தலைமையாசிரியர் மிகவும் சிலாகித்துக் கொண்டார்.

காந்தி நிகேதன் படிப்பு மட்டுமல்லாது,வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு அளித்தது.

அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து எங்கள் பள்ளி நிறைய கண்மருத்துவ முகாம்களை நட்த்தியுள்ளது.

என்.எஸ்.எஸ் மாணவர்கள் பத்து நாட்கள் முகாமிட்டு, அருகிலுள்ள தேவன்குறிச்சி என்னும் மலைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் வழியிலுள்ள கோபால்சாமி கோவிலுக்கும் மலைப் பாதை அமைத்தோம்.

அவ்வப்போது, அருகிலுள்ள குக்கிராமங்களுக்கு சென்று நாடகம், கலைநிகழ்ச்சிகளை நடத்தி, கல்வி,சுகாதாரம்,பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.இப்படி,தலைமைப் பண்பு,கலையுணர்வை வெளிப்படுத்தும் திறன், மற்றும் பல நல்ல பழக்க வழக்கங்கள் கிட்டின.

நேரமாகிவிட்டதால்,மெதுவாக, பள்ளியை விட்டு வெளியே நடந்தோம்.
வெளியே வருகையில் கண்ணில் தென்பட்ட அம்மாபட்டி பசங்களை அவர்கள் அணிந்திருந்த “லக லக பாய்ஸ்” க்காக புகைப்படம் எடுத்தோம்.

என் மனைவிக்கு இந்தப் பள்ளி மிகவும் பிடித்திருந்த்து என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். நான் செமத்தியாக அடி வாங்கிப் படித்ததாலோ என்னவோ!

“ஏ!அப்பா! நம்மப் பள்ளிக்கூடம் எவ்வளவோ மாறிப்போச்சு” என்று 50 வருடங்களுக்கு முன்னால் படித்த, எங்கள் பள்ளியின் பழைய மாணவியான என் பெரியம்மா மிகவும் ஆச்சரியப்பட்டார். அவருக்கு, பள்ளியை சுற்றிப் பார்த்த்து மிகவும் மனதிருப்தி அளித்தது.

எங்கள் பள்ளியில் படித்து எத்தனையோ மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள்,பொறியியல் வல்லுநர்கள்,ஆராய்ச்சியாளர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.இதில் ஒரு பத்துப் பதினைந்து பேராவது பள்ளியுடன் தொடர்பில் இருந்து தங்களால் ஆன உதவியை செய்தும் வருகிறார்கள்.எங்கள் பள்ளியில் படித்து,அங்கேயே ஆசிரியர்களாக இருக்கும் பேறு பெற்றவர்களும் இருக்கிறார்கள்.பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு ஒன்றை, பெரிய அளவில் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டு,அதற்கான முயற்சியை செய்து வருகிறார்கள்.விடுமுறை நாளில் சென்ற படியால்,ஆசிரியர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.இப்போதைய காந்தி நிகேதன் மாணவர்கள் நிச்சயம் எங்களைப் போல இருக்க மாட்டார்கள்.தலைமுறை இடைவெளி.

அடுத்தமுறை பள்ளிக்கு செல்கையில் மாணவர்களோடு கலந்துரையாடல் செய்ய வேண்டும்.ஆசிரியர்களை எல்லாம் சந்தித்து இன்னமும் அடித்து தான் படிக்க வைக்கிறீர்களா என்று கேட்கவும் ஆசை :))

புகைப்படங்கள்:ராகா