June 29, 2008

கல்யாணமும் கயாஸ் தியரியும்


"வயசாயிட்டே இருக்கு. சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்க" என்று என்னிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருந்ததாலும்,எனக்கே கொஞ்சம் லேட்டாக உறைக்க ஆரம்பித்ததாலும் என் கல்யாணத்திற்குப் பெண் தேடும்
முயற்சியில் இறங்கினேன்.
"பொண்ணா கிடைக்கலே! பையன்கள் கிடைக்குறதுதான் குதிரக் கொம்பா இருக்கு" என்கிறவர்களின் பேச்சால் சீக்கிரம் பெண் கிடைத்து விடுவாள்
என்று அசாத்திய நம்பிக்கையுடன் இருந்தேன்.சில மாதங்கள் கழித்தே என் நம்பிக்கை "குருடு" என்பது தெரிய வந்தது.
என் வீட்டில் ஜோதிடத்தின் மேல் அவ்வளவு எல்லாம் நம்பிக்கை கிடையாது.இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே எங்கள் ஜாதகங்களை
எங்கள் ஆஸ்தான ஜோதிடரும்,உறவினருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்துப் பலன் கேட்பர்.
மற்றபடிக்கு,வாரத்துக்கு இரண்டு முறை ஏதேனும் தம்ளர் அல்லது பாத்திரங்கள் இடம் மாறி வைத்துக் காணோம் என்றால்
அது கிடைக்குமா,கிடக்காதா? அது வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறதா? எந்தத் திசையில் இருக்கிறது? என்றும்,அவ்வப்போது வரும் முழங்கால் வலி ஏன் வருகிறது? அது
முழுவதுமாக எப்போது குணமாகும் என்பதற்கு மட்டும் ஜாதகம் பார்ப்பார்கள்.

ஏழுகடல் தாண்டி,ஏழு மலைதாண்டி என்று சின்ன வயதில் படித்திருப்பீர்களே! கல்யாணம் என்பது அது போல.
எனக்கு ஏற்ற மணப்பெண் கன்னட மாத்வ குலத்தில்,காசியப கோத்திரம் அல்லாத வேறு கோத்திரத்தில் பிறந்தவளாகவும்,என் நட்சத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய 12 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பவளாகவும்,
அதையெல்லாம் தாண்டி,ஜாதகப் பொருத்தத்தில் பத்துக்கு ஏழு பொருத்தமேனும் உள்ளவளாகவும் இருக்க வேண்டும்.(குறிப்பாக நான் மிகவும் வலியுறுத்தும் "தமிழ் தெரிந்த" பெண்ணாக இருத்தல் மிக அவசியம்)அப்போது தான் அடுத்த கட்டமாக பெண்ணின் போட்டோவைக் கேட்டு,அது பரஸ்பரம்
பிடித்திருந்தால் நேரில் சென்று பெண்பார்க்க முடியும்.

தினமலர் மணமாலைப் பகுதியில் இலவச விளம்பரம் வெளியிட்டதில் ஒன்றிரண்டு ஜாதகங்கள் வந்தன.
இனி மளமள வென்று எல்லாம் நடந்தேறி விடும் என்றிருந்தேன்.ஆனால், ஜாதகப் பொருத்தம் என்னும் விஷயத்தால் இதோ அதோ என்று
இழுத்தடித்துக் கொண்டே போனது.வீட்டில் பெரியவர்கள் முயற்சிப்பது ஒரு புறம் தொடருட்டும்:
நாமும் முயற்சிக்கலாம் என்று இண்டர்நெட்டில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கும் கல்யாணத்தளங்களான சாதீ.காம்,பாரத்மேட்ரிமோனி.காம்,
ஜீவன்சாதி.காம்,கே.எம்.மேட்ரிமோனி.காம்,பரிவர்த்தன்.காம் என்று எல்லா தளங்களிலும் என் ப்ரொஃபைலை இட்டேன்.
இவைகளில் உள்ளாடை சைஸ் தவிர மீதி என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கேட்கிறார்கள்.
எப்படியாவது கல்யாணம் நடந்தால் சரி என்று என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கொடுத்தேன் - போட்டோ உட்பட.
அதே தளங்களில் என்னைப் போன்று இட்டிருந்த பெண்களின் ப்ரொஃபைல்களுல் எனக்குப் பிடித்ததைத் தேடி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

கொஞ்ச நாட்களாகியும் ஒன்றும் பதில் வரக்காணோமே என்று மீண்டும் என் ப்ரொஃபைலை சரி பார்த்ததில் "பார்ட்னர் ப்ரிஃபரன்ஸ்" என்றிருந்த,
என் வருங்கால மனைவி பற்றிய என் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தது தெரிய வந்தது.சரி என்று அதையும் முடித்து வைத்தேன்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய் சில பதில்களும்,புதிய விருப்பங்களும் என் இன்பாக்ஸிற்கு வர ஆரம்பித்தன.லவ்லி ரோஸ்,மீட்ரூபி,
நேச்சுரல்பியூட்டி,ஸ்வீட்டி இவைகள் எல்லாம் எனக்கு விருப்பம் தெரிவித்திருந்த பெண்களின் ப்ரொஃபைல் பெயர்களில் ஒரு சில.
நான் விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள் சிலபேர் என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.சரி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால்
சந்தா கட்டியிருப்பவர்கள் மட்டுமே அடுத்தவரது முகவரியையோ,தொலைபேசி எண்ணையோ பார்க்க முடியும் என்கிற விஷயம் தெரிய வந்தது.
அவர்களாவது என் விலாசம் பார்த்து என்னைத் தொடர்பு கொள்வார்கள் என்று சில வாரங்கள் காத்திருந்தேன். ம்ஹூம். என்னைப் போன்றே
அவர்களும் இலவச சந்தாதாரர்களாய் விருப்பம் தெரிவித்த எதிர்பாலினத்தவரின் போட்டோவையும்,மானிட்டரையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள் போலும்.
போனால் போகிறது என்று ஆறு மாத சந்தாவிற்கு என்று இரண்டு தளங்களுக்கு பணம் செலுத்தி என்னை அப்கிரேடு செய்து கொண்டேன்.
அதன் பின் எல்லோரது முகவரியையும் பார்த்து தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் என்றிருந்தவன் நினைப்பில் விழுந்தது மண்.
நிறையப் பெண்கள் தங்களது போட்டோ,தொடர்பு விபரங்களைப் பாஸ்வேர்டு கொடுத்துத் திண்டுக்கல்பூட்டு போட்டுப் பூட்டி வத்திருந்தார்கள்.
அவர்களது விருப்பம் இருந்தால் தான் நான் அவைகளைப் பார்க்க முடியும் என்கிற நிலை.

ஒரு ஞாயிறு காலையில் உமா என்ற பெண்ணிடம் இருந்து பாஸ்வேர்டு எனக்கு வந்திருந்தது.பாஸ்வேர்டை உபயோகித்து
அவரது போட்டோவைப் பார்த்து அதிர்ந்து போனேன். மானிட்டர் கொள்ளாத அளவு ஃபோட்டோவில் பெரிய உடல்வாகு.என்னை விட இருபது கிலோ எடை கூட.
சுமோ என்று பெயரிருந்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
சரி அந்த லவ்லி ரோஸ் என்னவாயிற்று என்று போய்ப் பார்த்தால் அந்தப் ப்ரொஃபைல் நீக்கப்பட்டிருந்தது.நான் பார்த்து வைத்திருந்த ரோஸை
யாரோ பறித்துச்சென்று விட்டார்கள்.கல்யாணம் ஆகி விட்டிருக்கும் போல.

பரிவர்த்தன்.காம் இல் ஒரு நூற்றைம்பது பெண்களின் விபரங்களை அலசி,அதில் பொருத்தமாக உள்ள ஐந்தாறுக்கு என் விபரங்களை அனுப்பி வைத்தேன்.
ஜாதகம் இணைக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணின் முழுவிபரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு,ஜோதிடம் தெரிந்த என் உறவினர் ஒருவரிடம் அப் பெண்ணின்
ஜாதகதைக் காட்டியதில்,இது எனக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது என்றார்.
பெண்வீட்டாரை ஃபோனில் அழைத்து ஜாதகப் பொருத்தம் பற்றி எடுத்துக் கூறிய போது, அப்பெண்ணிற்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டதாகவும்,
தற்போது முழுகாமல் இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறினார்.

மற்ற பெண்களின் விபரங்களை வைத்துத் தொடர்பு கொண்டதில்,வத்றாயிருப்பில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை இப்படி ஆரம்பிக்கிறார்.
"என் பெண்ணிற்கு நான் - ட்ரான்ஸ்ஃபரபிள் டீச்சிங் ஜாப்.உங்கள் பையன் இந்தப்பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருவாரா?"
துரதிர்ஷ்டவசமாக நான் பணியிலிருக்கும் மும்பை பயோ-டெக் கம்பெனிக்கு வத்றாயிருப்பிலோ,அதற்கருகிலோ கிளைகள் ஏதுமில்லாததால்,வத்றாயிருப்புப் பெண்ணைக் கல்யாணம்
செய்து கொண்டு அருகிலிருக்கும் பிளவக்கல் அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்க்கை முழுவதும் ரசிக்கும் பாக்கியம் எனக்கு ப்ராப்தியாகவில்லை.

என் கஸின் ஒருவரது வற்புறுத்தலின் பேரில் த ஹிந்து நாளிதழில் ஞாயிறு அன்று வெளியாகும் வரிவிளம்பரத்தில் நான்கு வாரங்களுக்கு விளம்பரம் செய்ததில்
நிறைய பெண்வீட்டாரிடமிருந்து ஃபோன்களும்,இ-மெயில்களும் வந்திருந்தாலும்,எல்லாம் ஜாதகப் பொறுத்த டகாஸிஸ் கேஸ்சிலில் அடிபட்டு விழுந்தன.விளம்பரத்தின் சைடு எஃபெக்டாக
ஏகப்பட்ட தனியார் திருமண ஏஜென்சிகளிடமிருந்தும் மெயில்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெயில்கள்.அவர்களிடம் உறுப்பினராகச் சேரச் சொல்லி வற்புறுத்தி.

இருந்தாலும் அவ்வப்போது சாதியிலோ,ஜீவன் சாதியிலோ,கன்னட மேட்ரிமோனியிலோ தினசரி விருப்பம் தெரிவித்த, பதில் கேட்டு மெயில்கள் பல வந்து கொண்டுதானிருக்கின்றன.
எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது.உலகில் 99.5 சதவீத பெண்கள் அழகானவர்கள்;மீதமுள்ள 0.5 சதவீத பெண்கள் என் க்ளாஸ் மேட்ஸ் என்று. அது போல, எனக்கு எல்லா விதங்களிலும்
பொருத்தமுள்ளதாக, நன்கு லட்சணமாக இருக்கும் அநேகமாக எல்லாப் பெண்களும் நான் பிறந்த அதே காசியப கோத்திரத்தில் பிறந்து(த் தொலைத்து) என் பாச மலர்களாகி விட்டார்கள்.வேறு கோத்திரத்தில் பிறந்து
நிறையப் பொருந்தி வரும் சில பெண்களிடமிருந்தும் எனக்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்தன.
சாம்பிளுக்கு சில.

32 வயதாகும் பி.எச்.டி.படிக்கும் ஒரு பெண் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவரைப் பற்றி மேலும் தகவலறிய அவர் ப்ரொஃபைலைப் படித்ததில்,ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
ஆராய்ச்சியில் ஈடுபடுவாராம்.ஆராய்ச்சி பற்றிய இன்ன பிற விபரங்கள்... அவர் வசிக்கும் அந்தச் சின்ன டெஸ்ட் ட்யூபுக்குள் நான் ஒண்டி வாழ்வது கஷ்டம் என்று நாசூக்காக மறுத்து விட்டேன்.

மும்பையில் இருந்து இன்னோரு பெண்...29 வயது.அட்வர்டைசிங் துறையில் பணி.சரி.பரவாயில்லை என்று முழுக்கப் படித்ததில் "ட்ரிங்" என்கிற கட்டத்துக்கு அருகில் "எப்போதாவது"
என்று பூர்த்தி செய்திருந்தார்.எனக்குப் பின் புலத்தில் பழைய பாட்டான "குடி மகனே.... ஹே ஹே ஹே. பெருங்குடிமகனே...நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு...
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...ஓடியது."

28 வயதாகும் மைசூர்ப் பெண்,சைன் டிஸ்ட்,குரூப் -ஏ பணியிலிருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க -மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எழுதியிருந்தார்.

இது போக டாக்டர் பெண்கள் எல்லோரும் "டாக்டர்கள் மட்டும் விண்ணப்பிக்க" என்று சிரிஞ்சோடு எழுதியிருந்தார்கள்.(சொந்தமாக க்ளினிக் வைத்திருந்தால் சாலச்சிறந்தது என்றும் பின்குறிப்புகள்)
நானும் டாக்டர் தான்,ஆனால் மாட்டு டாக்டர் என்று எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள மனம் வரவில்லை.(பின்னால் க்ளினிக் வைத்து மாடு,மனிதர் இருவரையும் ஒரே க்ளினிக்கில்
மருத்துவத்திற்கு வரவழைப்பதில் சில ப்ராக்டிகல் டிஃபிக்கல்ட்டீஸ் உள்ளன)

மேற்கண்ட முயற்சிகள் தவிர தனியாக இது போன்று திருமண அரேஞ்மெண்ட் செய்பவர்களாக ,ஜாதகப் பரிவர்த்தணை செய்யும் சிலரிடம்
(நங்க நல்லூர்,வியாசர்பாடி,நுங்கம்பாக்கம்,ஸ்ரீரங்கம்,மதுரை) தலா முன்னூறு ரூபாய் கொடுத்து என் விபரங்களையும் ஜாதகத்தையும் பதிந்து உள்ளேன்.
அவர்களிடமிருந்தும் அவ்வப்போது தகவல்கள் வரும்.
ஆனால் ஜாதகப் பொறுத்த முதலை வாயில் கஜேந்திர கதி மோட்சம் தான்.

பொருந்தி இருந்த ஒரே ஒரு பெண் ஜாதகத்தை வேறு ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கப் போய்,அதற்கு அவர்,"இதில் ஒன்று சுத்த ஜாதகம்,
இன்னொன்று,தோஷம் வந்து நிவர்த்தியான ஜாதகம்.இவைகளை சேர்த்தால் சண்டை சச்சரவுகள் வரும்:அதிகபட்சம் ஆளையே காலி பண்ணி விடும்" என்று
ஆட்டோ அனுப்பாத குறையாய் அச்சுறுத்தினார்.

இது இப்படியிருக்க, சமீபத்தில் கயாஸ் தியரி பற்றிக் கால்வாசிப் (பார்த்துப்)புரிந்து கொண்டு எதைச் செய்தால் அதனுடைய பின் விளைவாக என் திருமணத்திற்குத் தக்க பெண் கிடைப்பாள்
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மும்பையில் பட்டாம்பூச்சிகள் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து சென்னை வரும்போது மொத்தமாகப் பட்டாம் பூச்சிகள் வாங்கி செலக்டிவ்வாக
நங்கநல்லூர், மயிலாப்பூர்,மாம்பழம் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் பறக்க விடத் திட்டமிட்டுள்ளேன்.அவைகள் பறந்து அந்த ஏரியாக்களில் இருக்கும் எனக்கேற்ற பெண்களை/அவர்களின் பெற்றோர்களை
என் இன்பாக்ஸிற்கு மெயில் அனுப்ப வைக்கும் என்று கயாஸ் தியரியின் படி திடமாக நம்புகிறேன்.அதுவரை என் அறையில் இருக்கும் டேபிள்,டி.வி.போன்ற பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டு
அதனால்,ஏதேனும் குறுகிய கால கயாஸ் விளைவுகள் நிகழலாமோ என்கிற எண்ணத்தில் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

இப்படிக்கு
கயாஸ் தியரியால் கல்யாணம் நடக்கக் காத்திருப்பவன்.

March 25, 2008

கலை உண(ர்)வு

சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது உணவு சம்பந்தமான AAHAR-2008 பன்னாட்டுக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில செல்படங்கள்








March 22, 2008

முசுடு சங்கரலிங்கமும்,புக்ஃபியஸ்டாவும்

உலகின் கடைசி மனிதனாக தனியே வாழத் தயாரா? என்று என்னிடம் யாராவது கேட்டால்,
"-என்னுடன் புத்தகங்களும் இருக்கும் பட்சத்தில்-சரி" என்று சொல்வேன்.அந்த அளவுக்கு, புத்தகங்கள் என் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன..
சின்ன வயதில் கோடை விடுமுறைகளில் பாட்டி சொல்லும் ராஜா கதைகளில் லயித்த மனம் வருடம் முழுவதற்கும் அதற்காக ஏங்கி ரத்னபாலா, அம்புலிமாமாக்களை இரண்டாம் வகுப்புப் படிக்கையிலேயே எழுத்துக்கூட்ட ஆரம்பித்திருந்தேன்.

வீட்டில் எல்லோரும் சினிமாவிற்கு சென்று திரையின் காட்சிகளில் தங்களை மறந்திருக்கையில் எனக்கு மட்டும் ஆபரேட்டர் அறை ஓட்டை வழியே வரும் வண்ணப்புகை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.(முழுசா ஒரு ரூபா குடுத்து இவன படத்துக்குக் கூட்டிட்டு வந்தது வேஸ்ட் என்று எனது மூத்த அக்கா திட்டுவாள்)
அதற்கடுத்த சமயங்களில் என் டிக்கட் காசு காமிக்ஸ் புத்தகங்களாகிப் போனது(விஷ ஊசி வேங்கப்பா, ஸ்பைடர்மேன்,இரும்புக்கை மாயாவி)

கொஞ்சம் வளர்ந்து நான்காம், ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முழுப்பரீட்சை விடுமுறையில் வீட்டில் உக்கிரான அறை என்னால் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு,கொலு வைப்பதற்கென்று பாட்டி பத்திரப்படுத்தியிருந்த பொம்மைகளை (ஆதிசேஷன் நாகம், மச்ச அவதாரம், ஆந்தை, குப்புறப்படுத்திருக்கும் சீனப்பாப்பாக்கள்)வெளியே விளையாடக் கொண்டு போவதைப் பொறுக்க முடியாத பாட்டி, கோபத்துடன்"வாசகசாலைக்குப் போடா" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்.வேறு வழியின்றி தே.கல்லுப்பட்டி நூலகம் அடைக்கப்படும் வரை அங்கேயே கிடந்து மஞ்சரி,அ.மாமா என்று எதையாவது வாசித்துக்கொண்டிருப்பேன்.
எட்டாம் வகுப்புப் படிக்கையில் கஷ்டப்பட்டு நூலகத்தில் உறுப்பினரானேன்.அதற்கு ஹெட்மாஸ்டரிடமெல்லாம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது.

அப்போதைய லைப்ரரியன் முசுடு சங்கரலிங்கம் (பட்டம்-உபயம்: நானும் என் நண்பன்ஜெயக்குமாரும்)லைப்ரரியை ஒரு மியூசியம் போலப் பாதுகாத்து வந்தார்.(புத்தகங்கள் படிப்பதற்கு அல்ல-பாதுகாப்பதற்கே என்பது அவர் பாலிசி)
அதிலும் நான் புத்தகம் எடுக்க வந்தால் என் மீதே கண்கொத்திப் பாம்பாய் இருப்பார்.
அவருக்கு சவால் விடும் வகையில் காலையில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு எட்டரைக்கு உள்ளே நுழைந்து தேட ஆரம்பித்தால்,பதினொன்றரைக்கு நூலக நேரம் முடிந்து அவர் என்னைக் குறிப்பாக முறைத்துக் கொண்டே,மேசைமணியை கடுப்பாக அழுத்தும் வரை
நிதானமாகத் தேடி விட்டு போனால் போகட்டும் என்று ஒரு புத்தகத்தை அவரிடம் நீட்டுவேன்.(சி.ஐ.டி.சங்கர்லால்,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்)
"வெலைக்கா வாங்கப் போற? ஏதாவது ஒண்ண எடுத்துட்டுப் போய்ட்டு, நல்லா இல்லாட்டி நாளைக்கு வந்து மாத்திக்க வேண்டியதுதான" என்று முணுமுணுப்பார்.அதையும் நான் மதியமே படித்து விட்டு சாயங்காலம் போய் வேறு புத்தகம் கேட்டு அவரால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறேன்."நாளைக்குத் தான் புத்தகத்தை மாத்த முடியும்" என்பது ரூல்.
மு.ச இல்லாத நாட்களில் உதவி நூலகர் விவேகானந்தனிடம் (இவர் மிகவும் சாது: எங்களுக்கு கருணை காட்டுபவர்)சொல்லிவிட்டு அன்அக்கவுண்டில் ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வேன்.வருடாந்திர ஆடிட்டிங்கில் கல்லுப்பட்டி நூலகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எண்வரிசைப்படி அடுக்கி வைக்க என் உதவி தேவைப்பட்டதால் சில மாதங்களிலேயே மு.ச. என் வழிக்கு இறங்கி வந்தார்.
விடுமுறைகளில் சாப்பிடுவது, தூங்குவது,பாத்ரூம் போகும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும் நூலகத்திலேயே பழியாய்க் கிடந்ததால் இரண்டு வருடங்களில் பைண்டிங் அட்டையை வைத்தே அது என்ன புத்தகம் என்று சொல்லுமளவுக்குத் தேறியிருந்தேன்.
மு.ச கூட குறிப்பாய் ஏதேனும் புத்தகம் தேட என்னிடம்தான் கேட்கும் நிலை வந்தது.

எவ்வளவு நாளைக்குத் தான் இரவல் புத்தகங்களைப் படிப்பது?நமக்கென்று சொந்தமாக (அ.மாமா, காமிக்ஸ் தவிர) புத்தகங்கள் வேண்டாமா? என்று ஏங்க ஆரம்பித்தேன்.ராணியில் வந்த விளம்பரம் ஒன்றைப்பார்த்து,வி.பி.பி.யில் அனுப்பச் சொல்லி கார்டில் எழுதிப்போட்டு, முதன்முதலாக நான் வாங்கிய நவமணியின்"வெளிநாட்டுக்குப் போவது எப்படி?" எனக்கு வந்த போது எனக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.(நீங்கள் வாங்கிய முதல் புத்தகம் எது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?)

அப்போதெல்லாம் கிருஷ்ணா காஃபி, வெண்ணெய் இன்னும் சில சாமான்கள் வாங்க நாற்பது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மதுரைக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவிட்டு,காவேரி மஹாலுக்கு எதிரில் இருக்கும் வெண்ணெய்க் கடையில் நான்கு கிளாஸ் மோர் குடித்துவிட்டு மாடர்ன்ரெஸ்டாரண்டில் மதியம் சாப்பிட வீட்டில் கொடுத்த பணத்தையும் கால்சியம் சாண்டோஸ் நாய்பொம்மை உண்டியலில் இருந்து எடுத்த என் சிறுசேமிப்பையும் சர்வோதய இலக்கியப்பண்ணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், காலேஜ்ஹவுஸ் புக் ஷாப் என்று சுற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குவேன்.

இப்படியாகத் தொடர்ந்த பழக்கம் இப்போதும் சம்பளத்தில் ஐந்து சதவீதம் புத்தகங்களுக்காக செலவிடும் வரை நீடித்திருக்கிறது.
இதை ஒரு மூலதனம் என்றுதான் சொல்ல வேண்டும்.இருப்பினும், ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ போன்ற விலையுயர்ந்த மாத இதழ்களையெல்லாம் எப்படியாவது (இலவசமாக)படிக்க முடியாதா என்னும் தேடலுடன் அலைந்த நான் ஒரு நாள் இணையத்தில் கூகுள் அருளால் தற்செயலாக புக்ஃபியஸ்டா என்னும் தளத்திற்கு விஜயம் செய்தேன்.அறிவியல் முதல் ஆன்மிகம் வரை, ஆங்கில மொழித் தேர்ச்சி முதல் மேலாண்மை, தலைமைப் பண்பு, புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்று இன்னும் ஏராளமான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கும் இணையதளம் அது.
ஸ்டீஃபன் கோவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆடியோ புத்தகங்கள் கூட உண்டு
சில நிமிடங்களிலேயே உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொண்டு,
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.முதலில் ப்ளாக்ஸ்பாட்டாக இருந்த இத்தளம் இப்போது அதிக வசதி மற்றும் சிறப்புகளுடன் www.bookfiesta4u.com மாக வளர்ந்துள்ளது.
வெறும் வதந்திகளையும், இந்த மெயிலை ஒன்பது பேருக்கு ஃபார்வர்டு செய்யாவிடில் ஒன்பது நாட்களுக்குள் ரத்தம் கக்கிச் செத்து விடுவீர்கள் என்பது போன்ற மிரட்டல் மெயில்களையும் அனுப்பாமல் புக்ஃபியஸ்டா போன்ற நல்ல பயனுள்ள இணையதளம் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து அவர்களது அறிவை வளர்க்கவும் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கவும் உதவுங்கள்.

February 4, 2008

பஸ்ஸில் பறிபோன இருபதாயிரம் ரூபாய்

அலுவலக வேலை காரணமாக மூன்று நாட்கள் பெங்களூருக்கு சென்றிருந்தேன்.போன சனிக்கிழமை மாலை,பீன்யாவிலிருக்கும் என் அலுவலகத்திலிருந்து மெஜஸ்டிக் வந்து என் நண்பர்கள் இருக்கும் திப்சந்திரா செல்ல BEML Gate போகும் வண்டி (ஒன்றுக்கு இருமுறை விசாரித்து விட்டுத்தான்) ஏறினேன்.முன்பு ஒருமுறை BEML போகுமா என்று கேட்டு
ஏறி, கொஞ்ச நேரம் கழித்து வண்டி பழக்கப்படாத ரூட்டில் போவதை கவனித்து (அடடா! ஒரு மாசத்துல பெங்களூரு எவ்வளவு மாறிப் போயிருச்சு என்று பராக்குப் பார்த்து)பின் தாமதமாக முழித்து, அருகில் இருப்பவரிடம் இது திப்சந்திரா BEML Gate போகுமா? என்று கேட்டேன்.அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு"கேட்டு ஏர்றதில்லையா? இது அந்த BEML போகாதுங்க, இந்த ஊர்ல அஞ்சு BEML இருக்கு என்று என்னை அசரவைத்தார்.மீண்டும் மெஜஸ்டிக் வந்து நண்பர்கள் வீடுபோவதற்குள் மொத்தமாக 3 மணிநேரம் ஸ்வாகா.
சரி.விஷயத்திற்கு வருகிறேன்.கடைசி சீட் கிடைத்து "அப்பாடா! இனி பெங்களூரு ட்ராஃபிக்கில் பஸ் ஆமை மாதிரியோ நத்தை மாதிரியோ எப்படி வேணும்னாலும் போகட்டும், "ஏதோ!உட்கார இடம் கிடைத்ததே புண்ணியம்" என்று பாதியில் விட்டிருந்த
துக்ளக்கைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.கூட்டம் நெருக்கிக் கொண்டு வண்டியில் நிற்பதற்குக் கூட இடமில்லை.வண்டி நகரத்துவங்கி கொஞ்ச நேரம் கழித்து முன்பக்கமிருந்து யாரோ ஒரு பெண்மணி சத்தம் போட ஆரம்பித்தார்.அவர் வைத்திருந்த இருபதாயிரம் ரூபாயைக் காணவில்லையென்றும் வண்டியை நிறுத்தி உடனடியாக எல்லாரையும்
செக் பண்ணவேண்டும் என்றும் சத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.பஸ்ஸில் இருக்கும் எல்லோரும் தங்களைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.கோடு போட்ட கருப்பு பனியன், ஏற்றிக் கட்டப்பட்ட லுங்கி சகிதமாக திருட்டுக் களையுடன் யாராவது ஏறினார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
வண்டியை மெதுவாக ஓரம் கட்டி அசோகா நகர் போலிஸ் ஸ்டேசன் முன்பு நிறுத்தி போலிசார் வந்து ஒவ்வொருவரையாய் சட்டை,பேண்ட் பாக்கட், உள்பாக்கெட் பின் பாக்கெட் எல்லாம் தடவி பேண்ட்டை அவிழ்க்காத குறையாய் சோதனை செய்தனர்.
என் முன்னால் நின்றிருந்த மஞ்சக் கலர் சட்டை ஆசாமி, நேரம் ஆகிக்கொண்டிருக்கிறதே என்பது போல் உச் கொட்டினார். "இருபதாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பஸ்ஸில் வரலாமா?"
"எவனுக்கு இன்னிக்கி லாட்டரியோ?" எடுத்தவன் இந்நேரம் எங்கேயாவது எறங்கி ஓடியிருப்பான்" "அந்தப் பணத்துல மூணு மாசத்துக்கு குடும்பத்தை ஓட்டிரலாம்" பலவிதமான குரல்கள் (கன்னடத்தில் தான்)பேருந்துக்குள் ஒலித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஞாபகம் வந்து,கீழே வைத்திருக்கும் என் பையில் பணத்தை வைத்துவிட்டுப் போய்விடுவானோ என்று எனது பையை எடுத்து மடிமேல் இருக்கும் லேப்டாப் பை மீது வைத்துக் கொண்டேன்.
'போலீஸ்காரர் ஒவ்வொருவராய் சோதனையிட்டு,என் முறை வந்ததும்,என்னை முழுவதும்
சோதனை போட்டு விட்டு,என் பைகளையெல்லாம் திறந்து காட்டச் சொல்லி பார்த்துவிட்டு முன்னால் நின்று கொண்டிருந்தவர்கள் பக்கம் சென்றார்.எனக்குத் தேவையில்லாமல் இதயம் பட படத்து மெதுவாக இயல்புக்கு வந்தது.(அன்று அதிர்ஷ்டவசமாக என்னிடம்
இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே பணம் இருந்தது.)என் பக்கத்தில் அமர்ந்திருந்தகல்லூரி மாணவன் மூன்றாவதாக யாரிடமோ,தன் செல்ஃபோனில் பஸ்ஸில் நடந்த திருட்டை லைவ் ரிலே செய்து கொண்டிருந்தார்.எனக்காகக் காத்துக் கொண்டிருந்த என் நண்பன் ஜெயராமன் பொறுமையிழந்து ஃபோன் செய்தான்.
"டாக்டர்? (என் எம்.பி.ஏ. நண்பர்கள் அப்படித்தான் என்னை அழைப்பார்கள்)என்ன ஆச்சு? வர்றீங்களா? இல்லையா?"
"வந்துக்கிட்டே இருக்கேன் ஜெயராமன், ஆனா, ஒரு சிக்கல் ஆகிப்போச்சு."
"என்னது? வழக்கம்போல பஸ் மாறி ஏறிட்டீங்களா?"
"இல்ல. இந்த வாட்டி புது மாதிரிப் பிரச்னை.இருபதாயிரம் ரூவாய ஆட்டயப் போட்டாய்ங்க, நான் வந்த பஸ்சில."
"அய்யய்யோ! இருபதாயிரம் ரூவாயா? யாரோடது?"
"ஒரு அம்மாவோடது."
அப்புறம் என்ன ஆயிற்று என்று அவனை மாதிரியே நீங்களும் கேட்பது புரிகிறது.சில வினாடிகளில் எனக்கு முன்னால் ஒரு பரபரப்பு ஏற்பட்டு"பிடிச்சாச்சு, மாட்டிக்கிட்டான்" என்று குரல்கள் கேட்டன.செக் பண்ணின போலிசார் எனக்கு முன்னால் நின்றிருந்த அந்த மஞ்சச் சட்டை ஆசாமியின் காலரைக் கொத்தாகப் பிடித்து போலிஸ் ஸ்டேசனுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்.இரண்டொரு நிமிடங்களில் போலிஸ் ஸ்டேசனுக்குள் இருந்து வந்த ஒரு போலிஸ் இன்னும் பஸ்ல வேற யார் பையிலயாவது பணம் கிடக்குதான்னு பாருங்க என்றார்.நிறையப் பேர் பஸ்ஸிற்குள் கலவரத்துடன், கொஞ்சம் நப்பாசையுடன் அவரவர்
பைகளைத் திறந்து பார்த்தனர்.என்னருகில் நின்று கொண்டு இருந்த இன்னொருவர், அதற்குள் விஷயத்தை சேகரித்து, "மொத்தம் மூணு பேரு வந்திருக்காங்க, இந்த அம்மாவ, பேங்க்குல இருந்து ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்காங்க.முன்னால இருந்த ரெண்டு பேரு பணத்தை அந்த அம்மா பேக்குல இருந்து எடுத்து, இவன்கிட்ட பாஸ் பண்ணிட்டாங்க.செக்கிங் பண்ணினதும் அவங்க மெதுவா கீழ இறங்கி நழுவிட்டாங்க. பணம் வச்சிட்டு இருந்த இவன் மாட்டிக்கிட்டான்.நமக்கு முன்னாலதான் நின்னுட்டு இருந்தான் சார், பாக்குறதுக்கு உங்களை மாதிரியே இருந்தான் சார்! நீங்க பாத்தீங்களா? நல்லவேளை! அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சதோ?உழைச்சு சம்பாதிச்ச காசு திரும்பக் கெடச்சுருச்சு"என்றார் மூச்சு விடாமல். பெம்மல் கேட் வந்ததும் கீழே இறங்கி, ஒரு இரண்டு நிமிடத்திற்குள் ஜெயராமன் வந்து என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டு சாய்த்த கழுத்துடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஓட்டினான்.ஜோஸப் வீட்டில் நண்பர்களுடன் டின்னர் சாப்பிடுகையில் ஜெயராமன் "டாக்டர அசோகா நகர் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு." என்றான்

January 19, 2008

செயப்பாட்டுப் புகை

சின்ன வயதில் அப்பா
கல்லூரி விடுதியில்
அறை நண்பர்கள்
ரயிலின் கழிவறையில்
எனக்கு முன் சென்ற பயணி
டீக்கடையில் முகம் தெரியாதவர்கள்
-ஒருமுறையேனும் சிகரெட்
அறிந்திரா உதடுகளெனினும்-
அடிக்கடிப்
புகைத்துக் கொண்டிருக்கிறேன்.

January 18, 2008

1

நாள்


பல்துலக்கியதிலிருந்து படுத்தது வரை
என்றும் போல அதே அரவையொலி
வித்யாசங்களே இல்லாத சீட்டுக்களில்
ஒன்றை
வீசியெறிந்தது காலம்
பூவிலிருந்து எடுக்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சியாய்
பார்வை பறித்த உறக்கம்
பொக்கிஷப்படுத்தப்
புதிதொன்றும் நிகழாமல்
நினைவுக்கு அகப்படாத
அடுக்குகளில் நழுவும்
நாள்.

****************************************

அநித்தியம்


நகர வழியின்றி
விடாத அவலக்குரலில்
அவசர ஊர்தி
வாகன நெரிசலில்
கேட்கும் செவிகளில்
அடர்ந்து விரிகிறது
அவரவர்க்கான
அநித்தியத்தின் காட்சிகள்

***********************************

1

உனக்கும் எனக்குமான உலகில்
ஒன்றைத் தவிர
வேறெந்த எண்ணும் இல்லை.

**********************************

January 15, 2008

புதியன புகுதலும்


வடக்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் சூரியனை இந்த மகர சங்கராந்தி தினத்தில் வணங்குகிறேன்.சமஸ்கிருதத்தில் "சங்க்ரமன" என்றால்,"நகரத் துவங்குதல்" என்று அர்த்தம்.
தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர்.கிராமங்களில்,புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர்.பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில்,வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர்.எஜமானர் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாட்களுக்கும் உணவு,புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பை கௌரவப்படுத்துவர்.பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் சடங்குகள்.
காலண்டரில் நல்லநேரம் பார்த்து, துளசி மாடம் பக்கத்தில்,பொங்கல் படைத்து,கரும்புடன் சூரியனுக்கு படையலிட்டு,என் பாட்டி கொடுக்கும் பொங்கலை சாப்பிடுகையில் நம் வீட்டுப் பெரியவர்களின் நுண்ணறிவும்,இயற்கை சார்ந்த அவர்களின் எளிய வாழ்வும் எனக்கு உன்னத உணர்வைத் தரும்.பொங்கலன்று திருமணமான சகோதர, சகோதரிகளின் வீடு சென்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களை பரிசளிப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். திருநெல்வேலியிலிருந்து காலையில் தொலைபேசியில் "ஹேப்பிப் பொங்கல்" சொன்ன என் அக்கா மகள் உரிமையுடன் என்னிடத்தில்"பொங்கப் படி" கேட்டாள்.சின்ன வயதில் வீட்டுப் பெரியவர்களிடம் "பொங்கல்காசு" வாங்கி இஷ்டப்பட்ட பொருள்களை வாங்கி மகிழ்ந்தது
நினைவுக்கு வருகிறது.கணுக்கள் சீவப்பட்ட அடிக்கரும்புகளை சுவைத்து அதிகக் கரும்புகளை முதலில் தின்பவர் யார் என்று போட்டியில் தொடர்ச்சியாய்க் கரும்பு தின்று, பேசுவதற்கும் சிரமப்பட்டிருக்கிறோம்.பொங்கலின் தொடர்ச்சியாய் வரும் மாட்டுப்பொங்கலன்று,மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டுடன் விதவிதமாய் உணவளிக்கப்படுவது,நிலத்தைப் பண்படுத்துவது முதல், அறுவடை நெல்லை சுமந்து வந்தது வரை அவைகள் ஆற்றிய அரும்பணிக்கு ஒரு சிறிய நன்றியின் வெளிப்பாடு.பகிர்தல் வாய் பேசும் மனிதர்க்கு மட்டுமன்றி இயற்கையின் அனைத்து உயிர்களுக்கும் என்று அடுத்த கட்டம் போகுமிடம் இது.
இன்னும் பழைய மரபுகளில், மீன்களுக்கும்,குளக்கரையில் காகங்களுக்கும்,உணவுப் பதார்த்தங்களை இப்பண்டிகையின் போது அளிக்கும் பழக்கம் சில கிராமங்களில் உண்டு.ஜல்லிக்கட்டு அன்று,நான் வளர்ந்த கோ.புதூரில் கொம்பு சீவப்பட்ட
கோபக்கார காளைகளுடன் கலர்கலராய் அலங்கரிக்கப்பட்ட இளங்கன்றுகள், ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு மிரண்டுபோய் எங்கள் தெருப்பக்கம் ஓடிவருகையில் அவைகளைப் பிடித்துக் கொண்டு எங்கள் சிறார் பட்டாளம் "பொதுவாக எம்மனசு தங்கம்"என்று வெற்றிக் கூக்குரலிடும்.
சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம்.பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார்.
பொங்கலின் முதல் தினமான "போகி"யில் வீடு, தெருக்களை வெள்ளையடித்து அலங்கரித்து
பழைய, தேவையில்லாத பொருட்கள்,குப்பைகளை எரித்துத் தூய்மையைக் கொள்வர். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான ஒன்று.அழுக்கான எண்ணங்களையும், வேண்டாத பழைய பழக்கங்களையும் உதறித் தள்ளி, சூரியனின் குணங்களை உள்வாங்கும் இனிய தருணமே பொங்கல் திருநாள்.சூரியன் ஞானத்தின் சின்னம்:ஒளிவடிவானவன்;சூரியன் இல்லாது இவ்வுலகுஇல்லை.எனினும்,சுயநலமில்லாது,பிரதிபலன் பாராது, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடின்றி காலம் தவறாது தன் கடமை செய்பவன். இருளை அகற்றி இவ்வுலகைத் தன் அருளால் ஒளிர்விப்பவன்.உயிர்கட்கு சக்தியைக் கொடுப்பவன்.கர்மயோகத்தின் சிறந்த உதாரணபுருஷன்.
பொங்கலோ, சங்கராந்தியோ, இவ்விதம் உணர்ந்து கொண்டாடினால், நம் மனதின் மதிப்பீடுகள் மாறத்துவங்கும்.உண்மையான சந்தோஷம் பகிர்தலும், பலன் கருதாது உதவுதலுமே;நீடித்த செல்வம் அன்பான நண்பர்களும் மனமொருமித்த சுற்றமுமே.இந்த மகர சங்கராந்தி நாளில்,நண்பர்கள், உறவினர்கள் மீது மட்டுமல்லாது ஏனைய எல்லா உயிர்கள் மீதும் நம் அன்பும் மதிப்பும், பன்மடங்கு பெருகட்டும்.உள்ளத்தில் ஒளியூட்டும் புதிய பல எண்ணங்கள் பிறக்கட்டும்."இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்".

January 5, 2008

வசதிகளற்ற மெளனம்

வசதி

"என் மெளனத்தைப் புரிந்து கொள்ளாவிடில்
வார்த்தைகளையும் முடியாதென்றாய்"
எவ்வளவு தகிப்பாய் இருப்பினும்
ஒண்டிக்கொள்ள இடமிருக்கும்
பாலையிலோ பள்ளத்தாக்கிலோ
வீசியெறியும் உன் வார்த்தைகளை விட
ஈர்ப்பு விசையற்ற வானில்
பிடிமானமின்றி அலைக்கழிக்கும்
உன் மெளனம்
வசதிகள் அற்றதே.

************************************

சில்லறைக் கேள்வி

கொடுத்து வைத்தது போல்
ஒவ்வொருவர் முன் வந்தும்
கையேந்தும் பிச்சைக்காரன்
மூன்று நொடிகளில் முகம் படித்து
நகர்ந்திடும் கை வேறொரு முகம் நோக்கி
ஒன்றில் செருப்பும்,மறுகாலில் பூட்சும்
கவனம் ஈர்த்து,யோசனையில்
பிச்சைக் கணத்தைத் தவறவிட்ட
என்னைப் பற்றி
என்ன நினைப்பான்?

**************************************

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது

********************************

January 4, 2008

மாற்றம்

மாற்றம்

ஒட்டிக்கொண்டுவிட்ட
ஒருவருடப் பழக்கம்
அரைநொடிக்கப்புறமே
எழுத வரும் '08.

********************************
உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவு இறகுகள்
ஒவ்வொன்றாய் என்னை விட்டு
எழுநூற்றி எட்டாவது வேலையாய்
இதையும் செய்யும் காலம்
கடைசி இறகும் உதிர்ந்ததும்
பறக்க முடிகிறது இப்போது.

January 3, 2008

ராஜராஜன் எம்.ஏ.

பெயர்ப்பலகை செய்து விற்கும்
பிளாட்பாரக் கடையொன்றை
அனுதினமும் கடந்திடுவேன்
அலுவலகம் செல்கையில்
மாறிக்கொண்டேயிருக்கும்
வேறு வேறு பெயர்களில்
வெகு நாட்களாய் கண்ணில் படும்
ராஜராஜன் எம்.ஏ.
மறக்கப்பட்ட பலகையோ
பிழையுள்ளதென்று
மறுதலிக்கப்பட்டதோ
தொணத்தும் பலநாள் கேள்விக்கு
முழுக்குப் போடலாம் என்று
பாதித் தயக்கத்தில் இழுத்தேன்
ராஜராஜன் எம்.ஏ....
நிமிர்ந்தென் கண்களில் எதையோ தேடி
தீர்க்கமாய்க் கேட்டான் என்னிடம்
"நாந்தான் என்ன வேணும்?"

January 2, 2008

இணையத்தில் விஷவிருட்சம்

வேண்டாத பார்த்தீனியங்களை
உரம் போட்டு வளர்த்து
விளைநிலத்தை வீணடிக்கும் விஷமிகள்
குரோமோசோம் குறையுள்ள மூளையர்களின்
நபும்சகக் குறிகளின் அழுக்குத் திரவத்தில்
நசிந்துபோன சில வலைப்பக்கங்கள்
இஸங்கள் பெயரால்,மதங்கள் பெயரால்
மலப்பந்து எறியும் மூர்க்கர்கள்
வெறியுடன் வீசிக் கெக்கலிப்பவன் வாய்நோக்கி
வரிசையாய் வரும் எதிர்த்திசைப் பந்துக்கள்
பொறியால் பிடித்திட பெரியார் வார்த்தைகளை
வெறியாய்ப் பயன்படுத்தும் கொரில்லாக் கனவான்களின்
தடித்த பூட்சுகளின் அடியில் நசுக்கப்படும் இலக்கியப் பூக்கள்
ஒவ்வொரு சுட்டிலும்,ஒவ்வொரு இடுகையிலும்
மருந்தேதும் கிடையாத எய்ட்ஸ் கிருமிகளாய்
அயனவெளியில் கலக்கின்ற நச்சுச்சொற்கள்
இயேசுநாதர் சொன்னபடி
பதில் முத்துக்களை பன்றிகள் முன்பு போடாமல்
நாற்றம் தாங்காத மலப் பக்கங்களை
மூக்கைப் பொத்தித் தாண்டி
தொடர்கிறேன் பயணத்தை

January 1, 2008

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

1.கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

***************************************

2.புது வருடம்

எப்போதும் போல் கடலுக்குள்
தலை மறைத்த சூரியன்.
ஏராள வெளிச்சத்தை
இனம் புரியாது பார்க்கும் சந்திரன்
மருண்ட கண்களுடன்
ஒடுங்கின பறவைகள்
பழக்கப் படாத இரைச்சலில்
சற்றுப் பயத்துடன் இரவு
எண்ணங்களின் ஏராள பாரத்தில் ஈதர்
கடிகார முட்கள் 12 காட்ட
நியான் விளக்குகளில் ஒளிர்ந்த
2008 பார்த்து மெலிதாய்
சிரித்தது பல கோடி வயதான காலம்.

*************************************

3.மூன்று ஐநூறு ரூபாய்த் தாள்கள்
ஒரு காட்பரீஸ் சாக்லேட் உறை
இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்
பழைய ரயில் டிக்கெட்
கொஞ்சம் சில்லறை
"K" எழுத்தில் சாவிக்கொத்து
குட்டித் தொலைபேசி டைரி
உள்ளங்கையளவு கண்ணாடி
பூப்போட்ட கர்ச்சீப்
இவ்வளவுடன்
பைக்கொள்ளா அளவு எனக்கான
சுதந்திரமும் பிரியத்தையும்
தன்னுள் வைத்திருக்கும்
தோழியின் கைப்பை.


**********************************

4.அடக்கி வைக்கப்பட்ட அன்பை
வெளிப்படுத்தும் உன் உதடுகளின் மொழிகளில்
வெடித்துக் கொப்பளித்தது என் புத்தாண்டு
சொற்களின் இடைவெளிகள் சொல்லாமல் தரும்
கிறக்கத்தைப் பற்றும் முயற்சியில்
இன்னொரு முறை
உன் எண்களை அழுத்திடும்
பிடிவாத விரல்கள்

************************************

5.மெதுவாய்க் கடலிறங்கும் அஸ்தமன சூரியன்
தூரத்துப் படகில் அசையும் இருவர்
தவற விட்ட நொடியில்
முழுதாய் மறைந்த சூரியன்
ஆயிரம் மணற்கண்கள்
என்னையே வெறித்துக் கொண்டு

***********************************

கனவுகள் செய்வோம்-2

உறக்கத்தின் போது மூளை முழுவதுமாக ஃப்ளாட் ஆகி விடுகிறது என்கிற முந்தின
கோட்பாட்டைத் தவறென்று தன் ஆராய்ச்சிகள் மூலம் டாக்டர் நத்தானியெல் நிரூபித்து,
மூளை, தூக்கத்தில் ரெம் (Rapid Eye Movement) நிலையில் இயங்குவதை உறுதிப் படுத்தினார்.1950களில் டாக்டர் வில்லியம் மற்றும் சார்லஸ் ஃபிஸ்சர் நியூயார்க்கில்,ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட குழுவினரை எலெக்ட்ரோ என்செபலோகிராஃப் உதவியுடன் அவர்கள் உறக்கத்தில் கனவுகள் தோன்றும் ரெம் நிலையை அடையும் போதெல்லாம் (கண்டறிந்து)இரவு முழுவதும் எழுப்பி விட்டனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு இப்படி அவர்களுக்கு கனவு நேரம் தவிர்த்து உறக்க நேரம் மட்டும் அளித்து சோதனை செய்ததில்,கனவுகளற்ற 5 தினங்களுக்குப் பின் சிடுசிடுப்பு,அதீதப் பதட்டம்,
மனம் ஒருமைப்படுத்துவதில் சிரமம் போன்றவைகளை வெளிப்படுத்தினர்.இதே போல் இன்னொரு குழுவை,முதல் குழுவினரை எழுப்பிய அதே தடவைகள் -ஆனால் அவர்கள் கனவு
காணாதிருக்கும் போது- எழுப்பி விட்டதில் முதல் குழுவினருக்குத் தோன்றிய எந்த பாதிப்பும் இவர்களிடம் தோன்றவில்லை.இந்த பரிசோதனை முதல் முறையாக ஆரோக்கியமான உடற்செயலியலுக்குக் கனவு காண்பது மிக முக்கியம் என்று நிரூபித்தது.இதன் மூலம் தொடர்ந்து போதுமான உறக்கமின்றி ஷிஃப்டில் இயங்கும் ஒருவரோ அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டுபவரோ எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவு.
கனவுகளின் வெளிப்பாட்டில் சுற்றுப்புறம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.புதிய இடத்திலோ,அல்லது ஹோட்டல் போன்ற பழக்கப்படாத இடங்களில் நமக்கு வித்தியாசமான கனவுகள் தோன்றுகின்றன.மற்ற காரணிகளாக கனவு காண்பவரது கடந்த கால நினைவுகள்,அந்த வார அல்லது அந்த நாளின் எஞ்சிய நினைவுகள்,உறங்குவதற்கு முந்தைய எண்ணங்கள் போன்றவை இருக்கின்றன.கனவு காணும் நேரம் ஒரு சர்ச்சைக்குரிய
ஒன்றாகவே இருக்கிறது.சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு நொடிகள் தான் நாம் கனவு காண்கிறோம் என்கின்றனர்.ஆனால், சிலசமயம் நமக்குத் தோன்றும் சில மெகா சீரியல் கனவுகள் இதை சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
கனவுகள் சிக்கலான பல முடிச்சுகளை அவிழ்க்க விஞ்ஞானிகள், கலைப்படைப்பினருக்கு பெரிதும் உதவியிருக்கிறன. 1902ல் ஒட்டோ லெவி, நியூயார்க் யுனிவர்சிடியில், தான் 17 வருடங்களுக்கு முன் தவறென்று ஒதுக்கி வைத்த ஒரு கோட்பாட்டைத் தன் கனவைப் பின்னொற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது உடற்செயலியலில், தசைத் தூண்டுதல்களுக்கும் அசிடைல்கோலைன் என்கிற வேதிப் பொருளுக்குமான தொடர்பைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசை வென்றார்.மேலும், உறக்கத்தின் போது ஒரு மனதிலிருந்து இன்னொரு
மனதிற்கு எண்ணங்கள் பயணிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டது.ஆனால்,தான் சாகும் வரை இந்த அசிடைல் கோலைன் பற்றிய ஒரு எண்ணம் எங்கிருந்து, யாரிடமிருந்து
வந்தது என்பதற்கு ஒட்டோ லெவியிடம் பதிலில்லை.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தங்களது சிக்கலான பிரச்சனைகளுக்குக் கனவுகள் மூலம்
விடை கண்டறிந்து வெற்றியடைகின்றனர். உறங்கும் முன் ஏதேனும் பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டேயிருந்தால், உறக்கத்தில் ஆழ்மனம் அதற்கு நல்ல தீர்வுகளை முன்வைக்கிறது.இதற்கு வேண்டியதெல்லாம் உத்வேகமும்,தொடர்ந்த முயற்சியும், சிறிது மனப்பயிற்சியுமே.
கனவுகளில் நாம் காணும் பொருள்கள் முழுக்க முழுக்க தனிநபருக்கே உரித்தான தனிப்பட்ட
அர்த்தமுடையது என்றாலும் கனவுலக ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் ஒத்துக் கொண்ட கனவுகளில் தோன்றும் சில அடையாளப் பொருள்களும் அவைகளின் பொதுவான அர்த்தங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தேவதை: அறிவு, ஞானம்,சத்தியம், உயர்ந்த ஆத்மாக்களுடன் உள்ள தொடர்பு.

குளித்தல்: ஆத்ம சுத்தி, அல்லது ஆத்ம சுத்திக்கான அவசியம்.

பூனை: உலகம் முழுவதும் கனவில் வரும் பூனை பெண்களைக் குறிப்பதாகப் படுகிறது.வம்பு பேசுதல்,வம்பு தவிர்த்தல், மர்மம்.தனித்திருத்தல்

கோவில், சர்ச்: உள்ளுணர்வு,ஆன்மீகத் தேவை.

பாலைவனம்: ஆன்மீக வெறுமை,மலட்டுத்தன்மை,உணர்ச்சிகளற்ற நிலை.

சாத்தான்: வெறுக்கத்தக்க மனிதர்,தடை செய்யப்பட்ட விஷயம்,மோசமான குழந்தைப் பருவமென்றால் பெற்றோர் உருவம்

கீழே விழுதல்: இயற்கையான(குழந்தைகளின்) பயம், தோல்வி, உயர் நிலையிலிருந்து கீழே விழுதல்

தலைமுடி:
ஆரோக்கியமான சுத்தமான கேசம்:ஆன்மீக அழகு
சிக்கலான அழுக்கான கேசம்: தூய்மையற்ற மனம்
வழுக்கை: வயதைக் குறித்த பிரக்ஞை

நீதிபதி: சுய கட்டுப்பாட்டுத் தேவை,உள்ளார்ந்த குற்ற உணர்வு

சாவி: பிரச்சனைக்குத் தீர்வு, புதிய வாய்ப்புகள்

ஏரி:(அமைதியான நீர் எனில்) அமைதி

கண்ணாடி: தன்னைக் குறிப்பது, இல்லாத ஒன்று.

(தையல்)ஊசி: பழைய பிழைகளை சரி செய்தல்

கடல்:ஆத்மா, கடவுள்,அமைதி.

பன்றி:சுயநலம்

சுற்றத்தார்:கனவு காண்பவரின் ஒரு பகுதி

பெட்டி: வளமை, பயணத்திற்கு விருப்பம்,சுயகெளரவம்.

சூரியன்:ஆன்மீக ஒளி, விழிப்பு நிலை

பல் இழத்தல்:மதிப்பு மிகுந்த ஒன்றை இழத்தல்

தண்ணீர்:வாழ்க்கையின் ஆதாரம்,ஆன்மா, கடவுள்

தொடரும்.