1.கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு
***************************************
2.புது வருடம்
எப்போதும் போல் கடலுக்குள்
தலை மறைத்த சூரியன்.
ஏராள வெளிச்சத்தை
இனம் புரியாது பார்க்கும் சந்திரன்
மருண்ட கண்களுடன்
ஒடுங்கின பறவைகள்
பழக்கப் படாத இரைச்சலில்
சற்றுப் பயத்துடன் இரவு
எண்ணங்களின் ஏராள பாரத்தில் ஈதர்
கடிகார முட்கள் 12 காட்ட
நியான் விளக்குகளில் ஒளிர்ந்த
2008 பார்த்து மெலிதாய்
சிரித்தது பல கோடி வயதான காலம்.
*************************************
3.மூன்று ஐநூறு ரூபாய்த் தாள்கள்
ஒரு காட்பரீஸ் சாக்லேட் உறை
இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்
பழைய ரயில் டிக்கெட்
கொஞ்சம் சில்லறை
"K" எழுத்தில் சாவிக்கொத்து
குட்டித் தொலைபேசி டைரி
உள்ளங்கையளவு கண்ணாடி
பூப்போட்ட கர்ச்சீப்
இவ்வளவுடன்
பைக்கொள்ளா அளவு எனக்கான
சுதந்திரமும் பிரியத்தையும்
தன்னுள் வைத்திருக்கும்
தோழியின் கைப்பை.
**********************************
4.அடக்கி வைக்கப்பட்ட அன்பை
வெளிப்படுத்தும் உன் உதடுகளின் மொழிகளில்
வெடித்துக் கொப்பளித்தது என் புத்தாண்டு
சொற்களின் இடைவெளிகள் சொல்லாமல் தரும்
கிறக்கத்தைப் பற்றும் முயற்சியில்
இன்னொரு முறை
உன் எண்களை அழுத்திடும்
பிடிவாத விரல்கள்
************************************
5.மெதுவாய்க் கடலிறங்கும் அஸ்தமன சூரியன்
தூரத்துப் படகில் அசையும் இருவர்
தவற விட்ட நொடியில்
முழுதாய் மறைந்த சூரியன்
ஆயிரம் மணற்கண்கள்
என்னையே வெறித்துக் கொண்டு
***********************************
January 1, 2008
வெளிதனில் புன்னகைக்கும் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
2ம் 4ம் அருமை. வாழ்த்துகள்
நன்றி பிரசன்னா
//கடிகார முட்கள் 12 காட்ட
நியான் விளக்குகளில் ஒளிர்ந்த
2008 பார்த்து மெலிதாய்
சிரித்தது பல கோடி வயதான காலம்.//
அருமை. மிக நல்ல கற்பனை.
//.அடக்கி வைக்கப்பட்ட அன்பை
வெளிப்படுத்தும் உன் உதடுகளின் மொழிகளில்
வெடித்துக் கொப்பளித்தது என் புத்தாண்டு
சொற்களின் இடைவெளிகள் சொல்லாமல் தரும்
கிறக்கத்தைப் பற்றும் முயற்சியில்
இன்னொரு முறை
உன் எண்களை அழுத்திடும்
பிடிவாத விரல்கள்//
நல்ல கவிதை. நல்ல கவிஞனாகி வருகிறிர்கள் பிரகாஷ். மிக நல்ல கவிதைகள்.
வாழ்த்துக்களுடன்,
ஜெயக்குமார்
நன்றி ஜெயக்குமார்.
Post a Comment