January 19, 2008

செயப்பாட்டுப் புகை

சின்ன வயதில் அப்பா
கல்லூரி விடுதியில்
அறை நண்பர்கள்
ரயிலின் கழிவறையில்
எனக்கு முன் சென்ற பயணி
டீக்கடையில் முகம் தெரியாதவர்கள்
-ஒருமுறையேனும் சிகரெட்
அறிந்திரா உதடுகளெனினும்-
அடிக்கடிப்
புகைத்துக் கொண்டிருக்கிறேன்.

January 18, 2008

1

நாள்


பல்துலக்கியதிலிருந்து படுத்தது வரை
என்றும் போல அதே அரவையொலி
வித்யாசங்களே இல்லாத சீட்டுக்களில்
ஒன்றை
வீசியெறிந்தது காலம்
பூவிலிருந்து எடுக்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சியாய்
பார்வை பறித்த உறக்கம்
பொக்கிஷப்படுத்தப்
புதிதொன்றும் நிகழாமல்
நினைவுக்கு அகப்படாத
அடுக்குகளில் நழுவும்
நாள்.

****************************************

அநித்தியம்


நகர வழியின்றி
விடாத அவலக்குரலில்
அவசர ஊர்தி
வாகன நெரிசலில்
கேட்கும் செவிகளில்
அடர்ந்து விரிகிறது
அவரவர்க்கான
அநித்தியத்தின் காட்சிகள்

***********************************

1

உனக்கும் எனக்குமான உலகில்
ஒன்றைத் தவிர
வேறெந்த எண்ணும் இல்லை.

**********************************

January 15, 2008

புதியன புகுதலும்


வடக்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் சூரியனை இந்த மகர சங்கராந்தி தினத்தில் வணங்குகிறேன்.சமஸ்கிருதத்தில் "சங்க்ரமன" என்றால்,"நகரத் துவங்குதல்" என்று அர்த்தம்.
தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர்.கிராமங்களில்,புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர்.பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில்,வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர்.எஜமானர் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாட்களுக்கும் உணவு,புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பை கௌரவப்படுத்துவர்.பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் சடங்குகள்.
காலண்டரில் நல்லநேரம் பார்த்து, துளசி மாடம் பக்கத்தில்,பொங்கல் படைத்து,கரும்புடன் சூரியனுக்கு படையலிட்டு,என் பாட்டி கொடுக்கும் பொங்கலை சாப்பிடுகையில் நம் வீட்டுப் பெரியவர்களின் நுண்ணறிவும்,இயற்கை சார்ந்த அவர்களின் எளிய வாழ்வும் எனக்கு உன்னத உணர்வைத் தரும்.பொங்கலன்று திருமணமான சகோதர, சகோதரிகளின் வீடு சென்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களை பரிசளிப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். திருநெல்வேலியிலிருந்து காலையில் தொலைபேசியில் "ஹேப்பிப் பொங்கல்" சொன்ன என் அக்கா மகள் உரிமையுடன் என்னிடத்தில்"பொங்கப் படி" கேட்டாள்.சின்ன வயதில் வீட்டுப் பெரியவர்களிடம் "பொங்கல்காசு" வாங்கி இஷ்டப்பட்ட பொருள்களை வாங்கி மகிழ்ந்தது
நினைவுக்கு வருகிறது.கணுக்கள் சீவப்பட்ட அடிக்கரும்புகளை சுவைத்து அதிகக் கரும்புகளை முதலில் தின்பவர் யார் என்று போட்டியில் தொடர்ச்சியாய்க் கரும்பு தின்று, பேசுவதற்கும் சிரமப்பட்டிருக்கிறோம்.பொங்கலின் தொடர்ச்சியாய் வரும் மாட்டுப்பொங்கலன்று,மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டுடன் விதவிதமாய் உணவளிக்கப்படுவது,நிலத்தைப் பண்படுத்துவது முதல், அறுவடை நெல்லை சுமந்து வந்தது வரை அவைகள் ஆற்றிய அரும்பணிக்கு ஒரு சிறிய நன்றியின் வெளிப்பாடு.பகிர்தல் வாய் பேசும் மனிதர்க்கு மட்டுமன்றி இயற்கையின் அனைத்து உயிர்களுக்கும் என்று அடுத்த கட்டம் போகுமிடம் இது.
இன்னும் பழைய மரபுகளில், மீன்களுக்கும்,குளக்கரையில் காகங்களுக்கும்,உணவுப் பதார்த்தங்களை இப்பண்டிகையின் போது அளிக்கும் பழக்கம் சில கிராமங்களில் உண்டு.ஜல்லிக்கட்டு அன்று,நான் வளர்ந்த கோ.புதூரில் கொம்பு சீவப்பட்ட
கோபக்கார காளைகளுடன் கலர்கலராய் அலங்கரிக்கப்பட்ட இளங்கன்றுகள், ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு மிரண்டுபோய் எங்கள் தெருப்பக்கம் ஓடிவருகையில் அவைகளைப் பிடித்துக் கொண்டு எங்கள் சிறார் பட்டாளம் "பொதுவாக எம்மனசு தங்கம்"என்று வெற்றிக் கூக்குரலிடும்.
சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம்.பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார்.
பொங்கலின் முதல் தினமான "போகி"யில் வீடு, தெருக்களை வெள்ளையடித்து அலங்கரித்து
பழைய, தேவையில்லாத பொருட்கள்,குப்பைகளை எரித்துத் தூய்மையைக் கொள்வர். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான ஒன்று.அழுக்கான எண்ணங்களையும், வேண்டாத பழைய பழக்கங்களையும் உதறித் தள்ளி, சூரியனின் குணங்களை உள்வாங்கும் இனிய தருணமே பொங்கல் திருநாள்.சூரியன் ஞானத்தின் சின்னம்:ஒளிவடிவானவன்;சூரியன் இல்லாது இவ்வுலகுஇல்லை.எனினும்,சுயநலமில்லாது,பிரதிபலன் பாராது, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடின்றி காலம் தவறாது தன் கடமை செய்பவன். இருளை அகற்றி இவ்வுலகைத் தன் அருளால் ஒளிர்விப்பவன்.உயிர்கட்கு சக்தியைக் கொடுப்பவன்.கர்மயோகத்தின் சிறந்த உதாரணபுருஷன்.
பொங்கலோ, சங்கராந்தியோ, இவ்விதம் உணர்ந்து கொண்டாடினால், நம் மனதின் மதிப்பீடுகள் மாறத்துவங்கும்.உண்மையான சந்தோஷம் பகிர்தலும், பலன் கருதாது உதவுதலுமே;நீடித்த செல்வம் அன்பான நண்பர்களும் மனமொருமித்த சுற்றமுமே.இந்த மகர சங்கராந்தி நாளில்,நண்பர்கள், உறவினர்கள் மீது மட்டுமல்லாது ஏனைய எல்லா உயிர்கள் மீதும் நம் அன்பும் மதிப்பும், பன்மடங்கு பெருகட்டும்.உள்ளத்தில் ஒளியூட்டும் புதிய பல எண்ணங்கள் பிறக்கட்டும்."இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்".

January 5, 2008

வசதிகளற்ற மெளனம்

வசதி

"என் மெளனத்தைப் புரிந்து கொள்ளாவிடில்
வார்த்தைகளையும் முடியாதென்றாய்"
எவ்வளவு தகிப்பாய் இருப்பினும்
ஒண்டிக்கொள்ள இடமிருக்கும்
பாலையிலோ பள்ளத்தாக்கிலோ
வீசியெறியும் உன் வார்த்தைகளை விட
ஈர்ப்பு விசையற்ற வானில்
பிடிமானமின்றி அலைக்கழிக்கும்
உன் மெளனம்
வசதிகள் அற்றதே.

************************************

சில்லறைக் கேள்வி

கொடுத்து வைத்தது போல்
ஒவ்வொருவர் முன் வந்தும்
கையேந்தும் பிச்சைக்காரன்
மூன்று நொடிகளில் முகம் படித்து
நகர்ந்திடும் கை வேறொரு முகம் நோக்கி
ஒன்றில் செருப்பும்,மறுகாலில் பூட்சும்
கவனம் ஈர்த்து,யோசனையில்
பிச்சைக் கணத்தைத் தவறவிட்ட
என்னைப் பற்றி
என்ன நினைப்பான்?

**************************************

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது

********************************

January 4, 2008

மாற்றம்

மாற்றம்

ஒட்டிக்கொண்டுவிட்ட
ஒருவருடப் பழக்கம்
அரைநொடிக்கப்புறமே
எழுத வரும் '08.

********************************
உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவு இறகுகள்
ஒவ்வொன்றாய் என்னை விட்டு
எழுநூற்றி எட்டாவது வேலையாய்
இதையும் செய்யும் காலம்
கடைசி இறகும் உதிர்ந்ததும்
பறக்க முடிகிறது இப்போது.

January 3, 2008

ராஜராஜன் எம்.ஏ.

பெயர்ப்பலகை செய்து விற்கும்
பிளாட்பாரக் கடையொன்றை
அனுதினமும் கடந்திடுவேன்
அலுவலகம் செல்கையில்
மாறிக்கொண்டேயிருக்கும்
வேறு வேறு பெயர்களில்
வெகு நாட்களாய் கண்ணில் படும்
ராஜராஜன் எம்.ஏ.
மறக்கப்பட்ட பலகையோ
பிழையுள்ளதென்று
மறுதலிக்கப்பட்டதோ
தொணத்தும் பலநாள் கேள்விக்கு
முழுக்குப் போடலாம் என்று
பாதித் தயக்கத்தில் இழுத்தேன்
ராஜராஜன் எம்.ஏ....
நிமிர்ந்தென் கண்களில் எதையோ தேடி
தீர்க்கமாய்க் கேட்டான் என்னிடம்
"நாந்தான் என்ன வேணும்?"

January 2, 2008

இணையத்தில் விஷவிருட்சம்

வேண்டாத பார்த்தீனியங்களை
உரம் போட்டு வளர்த்து
விளைநிலத்தை வீணடிக்கும் விஷமிகள்
குரோமோசோம் குறையுள்ள மூளையர்களின்
நபும்சகக் குறிகளின் அழுக்குத் திரவத்தில்
நசிந்துபோன சில வலைப்பக்கங்கள்
இஸங்கள் பெயரால்,மதங்கள் பெயரால்
மலப்பந்து எறியும் மூர்க்கர்கள்
வெறியுடன் வீசிக் கெக்கலிப்பவன் வாய்நோக்கி
வரிசையாய் வரும் எதிர்த்திசைப் பந்துக்கள்
பொறியால் பிடித்திட பெரியார் வார்த்தைகளை
வெறியாய்ப் பயன்படுத்தும் கொரில்லாக் கனவான்களின்
தடித்த பூட்சுகளின் அடியில் நசுக்கப்படும் இலக்கியப் பூக்கள்
ஒவ்வொரு சுட்டிலும்,ஒவ்வொரு இடுகையிலும்
மருந்தேதும் கிடையாத எய்ட்ஸ் கிருமிகளாய்
அயனவெளியில் கலக்கின்ற நச்சுச்சொற்கள்
இயேசுநாதர் சொன்னபடி
பதில் முத்துக்களை பன்றிகள் முன்பு போடாமல்
நாற்றம் தாங்காத மலப் பக்கங்களை
மூக்கைப் பொத்தித் தாண்டி
தொடர்கிறேன் பயணத்தை

January 1, 2008

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

1.கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

***************************************

2.புது வருடம்

எப்போதும் போல் கடலுக்குள்
தலை மறைத்த சூரியன்.
ஏராள வெளிச்சத்தை
இனம் புரியாது பார்க்கும் சந்திரன்
மருண்ட கண்களுடன்
ஒடுங்கின பறவைகள்
பழக்கப் படாத இரைச்சலில்
சற்றுப் பயத்துடன் இரவு
எண்ணங்களின் ஏராள பாரத்தில் ஈதர்
கடிகார முட்கள் 12 காட்ட
நியான் விளக்குகளில் ஒளிர்ந்த
2008 பார்த்து மெலிதாய்
சிரித்தது பல கோடி வயதான காலம்.

*************************************

3.மூன்று ஐநூறு ரூபாய்த் தாள்கள்
ஒரு காட்பரீஸ் சாக்லேட் உறை
இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்
பழைய ரயில் டிக்கெட்
கொஞ்சம் சில்லறை
"K" எழுத்தில் சாவிக்கொத்து
குட்டித் தொலைபேசி டைரி
உள்ளங்கையளவு கண்ணாடி
பூப்போட்ட கர்ச்சீப்
இவ்வளவுடன்
பைக்கொள்ளா அளவு எனக்கான
சுதந்திரமும் பிரியத்தையும்
தன்னுள் வைத்திருக்கும்
தோழியின் கைப்பை.


**********************************

4.அடக்கி வைக்கப்பட்ட அன்பை
வெளிப்படுத்தும் உன் உதடுகளின் மொழிகளில்
வெடித்துக் கொப்பளித்தது என் புத்தாண்டு
சொற்களின் இடைவெளிகள் சொல்லாமல் தரும்
கிறக்கத்தைப் பற்றும் முயற்சியில்
இன்னொரு முறை
உன் எண்களை அழுத்திடும்
பிடிவாத விரல்கள்

************************************

5.மெதுவாய்க் கடலிறங்கும் அஸ்தமன சூரியன்
தூரத்துப் படகில் அசையும் இருவர்
தவற விட்ட நொடியில்
முழுதாய் மறைந்த சூரியன்
ஆயிரம் மணற்கண்கள்
என்னையே வெறித்துக் கொண்டு

***********************************

கனவுகள் செய்வோம்-2

உறக்கத்தின் போது மூளை முழுவதுமாக ஃப்ளாட் ஆகி விடுகிறது என்கிற முந்தின
கோட்பாட்டைத் தவறென்று தன் ஆராய்ச்சிகள் மூலம் டாக்டர் நத்தானியெல் நிரூபித்து,
மூளை, தூக்கத்தில் ரெம் (Rapid Eye Movement) நிலையில் இயங்குவதை உறுதிப் படுத்தினார்.1950களில் டாக்டர் வில்லியம் மற்றும் சார்லஸ் ஃபிஸ்சர் நியூயார்க்கில்,ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட குழுவினரை எலெக்ட்ரோ என்செபலோகிராஃப் உதவியுடன் அவர்கள் உறக்கத்தில் கனவுகள் தோன்றும் ரெம் நிலையை அடையும் போதெல்லாம் (கண்டறிந்து)இரவு முழுவதும் எழுப்பி விட்டனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு இப்படி அவர்களுக்கு கனவு நேரம் தவிர்த்து உறக்க நேரம் மட்டும் அளித்து சோதனை செய்ததில்,கனவுகளற்ற 5 தினங்களுக்குப் பின் சிடுசிடுப்பு,அதீதப் பதட்டம்,
மனம் ஒருமைப்படுத்துவதில் சிரமம் போன்றவைகளை வெளிப்படுத்தினர்.இதே போல் இன்னொரு குழுவை,முதல் குழுவினரை எழுப்பிய அதே தடவைகள் -ஆனால் அவர்கள் கனவு
காணாதிருக்கும் போது- எழுப்பி விட்டதில் முதல் குழுவினருக்குத் தோன்றிய எந்த பாதிப்பும் இவர்களிடம் தோன்றவில்லை.இந்த பரிசோதனை முதல் முறையாக ஆரோக்கியமான உடற்செயலியலுக்குக் கனவு காண்பது மிக முக்கியம் என்று நிரூபித்தது.இதன் மூலம் தொடர்ந்து போதுமான உறக்கமின்றி ஷிஃப்டில் இயங்கும் ஒருவரோ அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டுபவரோ எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவு.
கனவுகளின் வெளிப்பாட்டில் சுற்றுப்புறம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.புதிய இடத்திலோ,அல்லது ஹோட்டல் போன்ற பழக்கப்படாத இடங்களில் நமக்கு வித்தியாசமான கனவுகள் தோன்றுகின்றன.மற்ற காரணிகளாக கனவு காண்பவரது கடந்த கால நினைவுகள்,அந்த வார அல்லது அந்த நாளின் எஞ்சிய நினைவுகள்,உறங்குவதற்கு முந்தைய எண்ணங்கள் போன்றவை இருக்கின்றன.கனவு காணும் நேரம் ஒரு சர்ச்சைக்குரிய
ஒன்றாகவே இருக்கிறது.சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு நொடிகள் தான் நாம் கனவு காண்கிறோம் என்கின்றனர்.ஆனால், சிலசமயம் நமக்குத் தோன்றும் சில மெகா சீரியல் கனவுகள் இதை சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
கனவுகள் சிக்கலான பல முடிச்சுகளை அவிழ்க்க விஞ்ஞானிகள், கலைப்படைப்பினருக்கு பெரிதும் உதவியிருக்கிறன. 1902ல் ஒட்டோ லெவி, நியூயார்க் யுனிவர்சிடியில், தான் 17 வருடங்களுக்கு முன் தவறென்று ஒதுக்கி வைத்த ஒரு கோட்பாட்டைத் தன் கனவைப் பின்னொற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது உடற்செயலியலில், தசைத் தூண்டுதல்களுக்கும் அசிடைல்கோலைன் என்கிற வேதிப் பொருளுக்குமான தொடர்பைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசை வென்றார்.மேலும், உறக்கத்தின் போது ஒரு மனதிலிருந்து இன்னொரு
மனதிற்கு எண்ணங்கள் பயணிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டது.ஆனால்,தான் சாகும் வரை இந்த அசிடைல் கோலைன் பற்றிய ஒரு எண்ணம் எங்கிருந்து, யாரிடமிருந்து
வந்தது என்பதற்கு ஒட்டோ லெவியிடம் பதிலில்லை.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தங்களது சிக்கலான பிரச்சனைகளுக்குக் கனவுகள் மூலம்
விடை கண்டறிந்து வெற்றியடைகின்றனர். உறங்கும் முன் ஏதேனும் பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டேயிருந்தால், உறக்கத்தில் ஆழ்மனம் அதற்கு நல்ல தீர்வுகளை முன்வைக்கிறது.இதற்கு வேண்டியதெல்லாம் உத்வேகமும்,தொடர்ந்த முயற்சியும், சிறிது மனப்பயிற்சியுமே.
கனவுகளில் நாம் காணும் பொருள்கள் முழுக்க முழுக்க தனிநபருக்கே உரித்தான தனிப்பட்ட
அர்த்தமுடையது என்றாலும் கனவுலக ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் ஒத்துக் கொண்ட கனவுகளில் தோன்றும் சில அடையாளப் பொருள்களும் அவைகளின் பொதுவான அர்த்தங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தேவதை: அறிவு, ஞானம்,சத்தியம், உயர்ந்த ஆத்மாக்களுடன் உள்ள தொடர்பு.

குளித்தல்: ஆத்ம சுத்தி, அல்லது ஆத்ம சுத்திக்கான அவசியம்.

பூனை: உலகம் முழுவதும் கனவில் வரும் பூனை பெண்களைக் குறிப்பதாகப் படுகிறது.வம்பு பேசுதல்,வம்பு தவிர்த்தல், மர்மம்.தனித்திருத்தல்

கோவில், சர்ச்: உள்ளுணர்வு,ஆன்மீகத் தேவை.

பாலைவனம்: ஆன்மீக வெறுமை,மலட்டுத்தன்மை,உணர்ச்சிகளற்ற நிலை.

சாத்தான்: வெறுக்கத்தக்க மனிதர்,தடை செய்யப்பட்ட விஷயம்,மோசமான குழந்தைப் பருவமென்றால் பெற்றோர் உருவம்

கீழே விழுதல்: இயற்கையான(குழந்தைகளின்) பயம், தோல்வி, உயர் நிலையிலிருந்து கீழே விழுதல்

தலைமுடி:
ஆரோக்கியமான சுத்தமான கேசம்:ஆன்மீக அழகு
சிக்கலான அழுக்கான கேசம்: தூய்மையற்ற மனம்
வழுக்கை: வயதைக் குறித்த பிரக்ஞை

நீதிபதி: சுய கட்டுப்பாட்டுத் தேவை,உள்ளார்ந்த குற்ற உணர்வு

சாவி: பிரச்சனைக்குத் தீர்வு, புதிய வாய்ப்புகள்

ஏரி:(அமைதியான நீர் எனில்) அமைதி

கண்ணாடி: தன்னைக் குறிப்பது, இல்லாத ஒன்று.

(தையல்)ஊசி: பழைய பிழைகளை சரி செய்தல்

கடல்:ஆத்மா, கடவுள்,அமைதி.

பன்றி:சுயநலம்

சுற்றத்தார்:கனவு காண்பவரின் ஒரு பகுதி

பெட்டி: வளமை, பயணத்திற்கு விருப்பம்,சுயகெளரவம்.

சூரியன்:ஆன்மீக ஒளி, விழிப்பு நிலை

பல் இழத்தல்:மதிப்பு மிகுந்த ஒன்றை இழத்தல்

தண்ணீர்:வாழ்க்கையின் ஆதாரம்,ஆன்மா, கடவுள்

தொடரும்.