February 21, 2010

பறவைகளுடன் ஒரு பொழுது...

நூற்றுக் கணக்கான அழகான பறவைகள் புடைசூழ இருந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?போன வாரம் ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் சென்றபோது இதை அனுபவித்தேன்.
அழகழகாய்,குச்சிக் குச்சிக் கால்களுடன் விதவிதமான வண்ணங்களை தங்கள் இறக்கைகளிலும்,பின்புறத்திலும் பூசிக் கொண்ட சில...
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கப் பொறுமையின்றி ஸ்பூன் போன்ற நீண்ட அலகுடன், மீன்களை கவ்விப்பிடிப்பதில் பிஸியாய் சில..
மரங்களில் அமர்ந்து தம் இறகுகளை அலகால் குடைந்து சீவிக்கொண்டு சில...

அருகிலிருக்கும் தம் இணையின் அலகில் தன் அலகால் உரசி கொஞ்சிகுலேசனில் சில..
வெள்ளைப் பஞ்சுமிட்டாயை பின்னால் செருகி கொண்டவை போல புஸு
புஸுன்றிருந்த வெள்ளை வால் இறக்கைகளுடன் சில.

திடீரென்று ஏதோ தோன்றியது போல மெல்ல விர்ரிட்டு,தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே, சிலசமயம் கால்கள் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு உயரப் பறக்கும் சில (நாங்களும் தவளை விடுவோம்ல!)
நம் கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு வண்ணமயமான அகன்ற இறக்கைகளை அழகாகக் காண்பித்த வண்ணம் சில.. (காசா பணமா,இந்தா இன்னொன்னு எடுத்துக்க!)
நம் இருப்பையே கவனிக்காத மாதிரி அவைகளுக்குள் பேசிக்கொண்டு சில..(ஏய். அந்த ஏரியால நிறைய மீன்கள் இருக்கு)

கடந்து செல்லும் எங்களை அனிச்சையாய்த்திரும்பிப் பார்த்து, மீண்டும் தன் வேலையை மும்முரமாய்த் தொடரும் சில..(வந்துட்டாங்கய்யா!)
ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் மைசூருக்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு வடக்கே 10கி.மீ தொலைவில் உள்ளது.
0.65 ச.கி.மீ சுற்றளவே உள்ள இந்தக் குட்டி சரணாலயம் ஆறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆனது.

காவிரியில் அணை கட்டும் போது உருவான இந்தத் தீவுகள் பறவைகள் வந்தமரும் அருமையான வாசஸ்தலமாக இருந்த்தைப் பார்த்த உலகப்புகழ் பெற்ற பறவையியல் நிபுணர் டாக்டர்.சலீம் அலி 1940 –இல்,அன்றைய மைசூர் மகாராஜாவிடம் இதைப் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அப்போது முதல், நூற்றுக்கணக்கில் cormorants, darters, white ibis, spoon billed storks, open billed storks, painted storks, white necked storks, egrets, herons, terns, swallows, kingfishers, sandpiper போன்ற பறவை இனங்களின் வாசஸ்தலமாக ஆனது ரங்கன் திட்டு.
நாங்கள் குடும்ப சகிதமாய் அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி 7.30 மணிக்கு ஸ்ரீரங்கப் பட்டணம் போய்ச்சேர்ந்தோம்.ஸ்ரீரங்கநாதரை தரிசித்து விட்டு, ரங்கன்திட்டு செல்கையில் 10 மணி ஆகிவிட்ட்து.(இடையில் அங்கே இருந்த ஒரே ஹோட்டலில் இட்லியும் தோசையும் சாப்பிட்டோம்.(ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் –அதில் எது அதிகக் கொடுமையானது என்று.)- இந்த ஏரியாவில இதுக்கு மேல ஒண்ணும் எதிர்பார்க்காதீங்க என்றார் என் மைத்துனர் பாலாஜி.
(அவருக்கு இதுபோன்ற இடங்களெல்லாம் தண்ணி பட்ட பாடு. சனி ஞாயிறு என்றால், தனது எஸ்.எல்.ஆர் கேமராவைத் தூக்கிக் கொண்டு மலை, ஆறு, சுற்றுலா இடங்கள் என்று கிளம்பி விடுவார்.)
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்கள் கல்லூரி ஆசிரியை அங்கிருந்த மாணவிகளை “ம் சீக்கிரம் சீக்கிரம்.. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.இட்லியை முழுங்கவும் முடியாமல், பசியால் பாதியில் எழவும் முடியாமல் பாவம்...மாட்டிக்கொண்ட மாணவிகள்.
பச்சைப்பசேலென்ற நெல் வயல்கள்,நாற்று நட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள், வீட்டுக்கு இரண்டாய் மரங்களில் கட்டப்பட்ட காளை மாடுகள் எல்லாவற்றையும் கடந்து பத்து நிமிட்த்திற்குள் ரங்கன் திட்டு சென்று விட்டோம்.
சுற்றிலும் மூங்கில்,அகேசியா, யூகலிப்டஸ் மற்றும் பல்வகை மரங்கள் புல்வெளிகளுடன் மிக அழகான இடமாக இருந்த்து ரங்கன்திட்டு. பூங்காவில் இருந்த நீர்த் தேக்கங்களில் மலர்ந்து,செக்கச்செவேலென்று இருந்த அல்லிப் பூக்கள் கொள்ளை அழகு.

ரங்கந்திட்டில் பறவைகளை அருகில் சென்று ரசிக்க படகு சவாரி அருமையான வழி
ஒவ்வொருவர் ஏறியபோதும் பாரத்தால் இருபுறமும் அலைக்கழிந்தது படகு.
வெயில் அதிகமாக இருந்தபடியால் கைகளை ஆற்றுநீரில் அழாவிக் கொண்டிருக்கையில், ”கைய உள்ள விடாதீங்க, முதலைங்க இருக்குது” என்று பீதியைக் கிளப்பினார் பாலாஜி.
சிறிது தூரப் பயணத்திலேயே அவர் சொன்னது போல காவிரியில் வளமாகக் கிடைக்கும் மீன்களைத் தின்று கொழுத்த முதலைகள் பாறையோரம் அசையாது கிடந்தன.அதனருகிலும் பாதுகாப்பான இடைவெளியில் பறவைகள் நின்று கொண்டு.
கூட்டம் கூட்டமாய்ப் பறவைகள்,மரம் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள்,குறுக்கும் நெடுக்குமாய் காற்றைக் கிழித்துக் கொண்டு கடந்து செல்லும் பறவைகள் என்று எல்லாவற்றையும் ரசித்தோம்.
பதினைந்து நிமிடங்களில் கரைக்குத் திரும்பியபோது இன்னொருமுறை போகவேண்டும் என்கிற ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
10 மணிக்கு மேல் ஆனபடியால், அந்த சனிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகமாக இருந்தது.

பறவைகளை மனமின்றிப் பிரிந்து,திப்பு சுல்தான் கோடைகாலத்தில் தங்க உருவாக்கியிருந்த ஓய்வு மாளிகையை சுற்றிப்பார்த்தோம்.அவ்ர் பயன்படுத்தியிருந்த ஆடைகள், வாள்கள்,துப்பாக்கிகள் (பிஸ்டல் சைசில் இருந்து பின்லேடனை இங்கிருந்தே குறிபார்த்து சுடுமளவு நீ....ளமான துப்பாக்கிகள் வரை) ஆஜானுபாகுவாய் முப்பரிமாணத்தில் வரையப்பட்ட திப்புவின் ஓவியத்தை அந்த மண்டபத்தில் நாம் எங்கிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும், திப்புவின் விழிகள் நம்மையே முறைப்பது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது.

பிப்ரவரியிலேயே ஆரம்பித்து விட்ட வெயிலை அங்கலாய்த்துக் கொண்டே, அருகிலுள்ள பல்மூரி அணைக்கு வந்து ஒருமணி நேரம் அருமையான நீச்சல் குளியல் போட்டோம்.

அங்கே,எட்டடி நீளக் கூந்தலை அவிழ்த்து, காவேரியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியாருடன் ஒரு போட்டோ செஷன்.
புகைப்படங்கள் எடுத்ததும் போஸ் கொடுப்பதும் ராகா (எ) பாலாஜி

பின்,நிமிஷாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மைசூருக்கு வந்து, அரண்மனையின் முன் சம்பிரதாயப் போட்டோக்கள் எடுத்து விட்டு,சாமுண்டி கோவில் சென்று விட்டு, வரும்வழியில்,மரபை மீறமுடியாமல்,சில ஊசி,பாசிக் கடைகளுக்கு சென்று வாங்கி விட்டு பெங்களூருக்கு வண்டியைத் திருப்பினோம்.
அடுத்தமுறை ரங்கன் திட்டுக்குப் போகும்போது விடியற்காலையில் அங்கே இருந்தால் பறவைகள் தூங்கி சோம்பல் முறிக்கும் அழகில் இருந்து எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு ரசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.அப்புறம் இன்னொன்று-மறக்காமல் கட்டுசாதம் எடுத்து செல்லவேண்டும்.

February 16, 2010

பிள்ளையாருக்கு ஓகே. நமக்கு?

ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில்,ஹெப்பால் மேம்பாலத்திற்கு சற்று முன்பு எம்.இ.எஸ்.சாலையில் ஒரு விபத்து.மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்,இண்டிகாவால் மோதப்பட்டு கீழே விழுந்து கிடந்தார்.

அவ்ரது தலையில் இருந்து கசியத் தொடங்கிய ரத்தம் விபத்து நடந்து இன்னும் முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை என்பதை உணர்த்தியது.எனது பைக்கை நிறுத்தி அருகில் செல்கையில், வலியில் முணுமுணுத்துக் கொண்டிருந்த அவரது வாயில் இருவர் பாட்டிலில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.
மற்ற வாகனங்கள் சாலையின் ஓரமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருக்கையில் ஆட்டோ, ஆட்டோ என்று அனைவரும் சத்தமிட்டு, அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினோம். மனிதாபிமானம் மிக்க ஒருவர், அவரை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தார். விபத்து நடந்த இடத்தைப் பார்த்தேன். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பத்தடி தூரம் தள்ளி கீழே விழுந்து கிடந்தது.
அது சைக்கிளில் செல்பவர்கள் உபயோகிக்கும் சாதாரண லேசான ஹெல்மெட். (பார்க்க: படம்)

 பெங்களூர் சாலைகளில் இதை அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். இதுபோன்ற ஹெல்மெட் ,விபத்து நேரிட்டால்,  தலையில் விழும் அடியை அது எந்த விதத்திலும் தடுக்காது.
அவர் பிழைத்தாரா, இல்லையா என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல், இதை எழுதும் இந்த நேரத்தில் ,ரத்த இழப்பு அதிகமாகி அவர் உயிர் பிரிந்திருப்பின், அதற்கு முழுக்காரணமும், அவரது தலையில் ஏற்பட்டிருந்த பலமான அடியும், அதைத் தடுக்கமுடியாத அந்த லேசான ஹெல்மெட்டுமே காரணம்.

ஒரு ஆய்வின் படி,

ஹெல்மெட் அணியாதவர்கள் ஹெல்மெட் அணிபவர்களை விட 14 மடங்கு அதிகம் உயிர்போகும் விபத்துக்கு ஆளாகிறார்கள்.

80-85 சதவீத அபாயகரமான தலை மற்றும் மூளைக் காயங்களை ஹெல்மெட் அணிவதால் தடுக்கலாம்.

90 சதவீத மோட்டார் சைக்கிள் விபத்து சாவுகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகின்றன.

சரி. யாரை ஏமாற்ற இந்த மாதிரி ஹெல்மெட்டை அணிகிறோம்?
ஏமாறுவது என்னவோ நாம் தான்.
ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ள ,ஃபைபர் அல்லது பாலிகார்பனால் செய்யப்பட்ட நல்ல தரமான ஹெல்மெட்டாய் வாங்கவும். அதுதான் விபத்து ஏதேனும் நடந்தால் நம் தலையை பாதுகாத்து நம் உயிர் காக்கும்.சாலையோரம் விற்கும் மலிவு விலை பிளாஸ்டிக் ஹெல்மெட்கள்,விபத்தின்போது உடைந்துபோவதுடன்,முகத்தில் குத்தி, காயத்தை மேலும் அதிகமாக்கும்.
ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த விளம்பரம் மிகவும் பொறுத்தமானதே.

February 10, 2010

அதிக ஆயுளுக்கு அளவான கலோரி

மரணத்தைத் தள்ளிப்போடவும், இளமையை நீட்டிப்பதற்குமான மனிதனின் தேடலும்,அதற்கான முயற்சிகளும் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது.அதற்கு விடையாக ஏதேனும் அற்புத மூலிகையையோ, அலாவுதீன் விளக்கையோக் கண்டறியும் வரை,நமக்குத் தெரிந்த,அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
அளவான கலோரி உட்கொள்வதன் மூலம், வயதாவதைத் தள்ளிப் போடுவதும், நீண்ட ஆயுளைப் பெறுவதும் சாத்தியம் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 1930 முதலே கலோரிக் குறைப்புக்கும் ஆயுள் அதிகரிப்பு மற்றும் நீண்டகால இளமைக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.சிலந்தி, எலி, குரங்குகளுக்கு மேற்கூறிய வகையில் அளவான கலோரி உணவை (சமச்சீரான சத்துப் பொருள்களுடன் கூடிய) கொடுத்துப் பார்த்த்தில் அவைகளின் ஆயுட்காலம் 30-40% அதிகமாகின்றதாம் (சந்தேகமிருப்பின் மேற்கண்ட கிராஃபை இன்னொரு முறை கவனமாகப் பார்க்கவும் :)) ).
ஆனால் இது எவ்விதம் செயலாற்றி ஆயுளை அதிகப்படுத்துகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இதுவரை புரியாத புதிராக உள்ளது.
 குறைந்த கலோரி உணவு உட்கொள்வதால்,இன்சுலின் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து,இதய சம்பந்தப்பட்ட நோய்கள்,சர்க்கரை நோய், போன்றவைகளையும் தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாது ஞாபகசக்தியையும் இது அதிகப்படுத்துகிறதாம்

எச்சரிக்கை:
கலோரியைக் குறைக்கிறேன் பேர்வழி என்று உடலுக்கு அவசியம் தேவையான சமச்சீரான சத்துள்ள உணவை மிகவும் குறைத்தோ, போதுமான அளவு சாப்பிடாமலோ இருந்தால், சீக்கிரமே சொர்க்கத்திற்குப் போய் இந்த ப்ளாகைப் படிப்பீர்கள்.

மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 2000 கலோரி அவசியம்.
அதில்15% புரதம், 35% கொழுப்பு,55% மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட்டில் இருந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
கீழ்கண்ட அட்டவணை எந்தெந்த உணவு வகைகளை சேர்த்துக்கொள்வது , எதை எதைக் குறைப்பது என்று உங்களுக்கு ஒரு ஐடியா கொடுக்கும்.


கலோரி குறைவான உணவு வகைகள் (சேர்க்க வேண்டியன)


கலோரி அதிகமான உணவு வகைகள் (தவிர்க்க வேண்டியன)

வேகவைத்த காய்கறிகள்
ஐஸ்க்ரீம்

சாலட்,வெள்ளரி ராய்த்தா
பக்கோடா, வறுத்தமுந்திரி

இட்லி முதலான வேக வைத்த உணவு வகைகள்

சிக்கன் கறி, மட்டன் கட்லெட், பொறித்த மீன்

கொழுப்பு நீக்கப் பட்ட பால், தயிர்

ப்ரென்ச் ஃபிரை,நான்,பூரி, நெய்ரோஸ்ட்
எண்ணைய் குறைவான சப்பாத்தி

புலவ்,பிரியானி,வடை,சமோசா

சாதம்,வேகவைத்த உருளைக்கிழங்கு

தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள்

கிளியர் சூப்,உப்புமா


ஜிலேபி,குலோப்ஜாமூன்


வெஜிடபிள் சாண்ட்விச்

மசாலா தோசை,நெய்ரோஸ்ட்

வேகவைத்த நூடுல்ஸ்

ரவா ஹல்வா,கேரட் ஹல்வா

 ஆலு போஹா,தயிர்சாதம்
ஒயின்,பியர்

எல்லாம் சரிதான்.ஆனா, சாப்பிட ஆரம்பிச்ச உடனே மனதைக் கட்டுப்படுத்த முடியலயே என்பதுதான் பெரும்பாலோரின் ஆதங்கம்.
பஃபே உணவு சமயங்களில் மெயின் கோர்ஸை லேசாகக் கொறித்து விட்டு, அங்கிருக்கும் பச்சைக் காய்கறிகள், ஃப்ரூட்சாலட், ராய்த்தா போன்றவைகளையே அதிகம் ருசிப்பேன் நான்.(அப்புறமா இதையெல்லாம் ஸ்வீட்லயும்,ஐஸ்க்ரீம்லயும் காம்ப்பன்சேட் பண்ணிருவோம்ல!)

எனவே, அளவான கலோரி சாப்பிட்டீங்கன்னா, அதிக வருடங்கள் உயிர்வாழ்வது மட்டுமில்லாம, வயதாவதையும் தள்ளிப்போடலாம்.
பியர் எல்லாம் குடிக்காம என்ன “டேசுக்கு ரொம்ப வருஷம் உயிர்வாழனும்?” என்று கேட்கிறவர்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் ரொம்ப தூ.........ரம்!