February 21, 2010

பறவைகளுடன் ஒரு பொழுது...

நூற்றுக் கணக்கான அழகான பறவைகள் புடைசூழ இருந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?போன வாரம் ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் சென்றபோது இதை அனுபவித்தேன்.
அழகழகாய்,குச்சிக் குச்சிக் கால்களுடன் விதவிதமான வண்ணங்களை தங்கள் இறக்கைகளிலும்,பின்புறத்திலும் பூசிக் கொண்ட சில...
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கப் பொறுமையின்றி ஸ்பூன் போன்ற நீண்ட அலகுடன், மீன்களை கவ்விப்பிடிப்பதில் பிஸியாய் சில..
மரங்களில் அமர்ந்து தம் இறகுகளை அலகால் குடைந்து சீவிக்கொண்டு சில...

அருகிலிருக்கும் தம் இணையின் அலகில் தன் அலகால் உரசி கொஞ்சிகுலேசனில் சில..
வெள்ளைப் பஞ்சுமிட்டாயை பின்னால் செருகி கொண்டவை போல புஸு
புஸுன்றிருந்த வெள்ளை வால் இறக்கைகளுடன் சில.

திடீரென்று ஏதோ தோன்றியது போல மெல்ல விர்ரிட்டு,தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே, சிலசமயம் கால்கள் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு உயரப் பறக்கும் சில (நாங்களும் தவளை விடுவோம்ல!)
நம் கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு வண்ணமயமான அகன்ற இறக்கைகளை அழகாகக் காண்பித்த வண்ணம் சில.. (காசா பணமா,இந்தா இன்னொன்னு எடுத்துக்க!)
நம் இருப்பையே கவனிக்காத மாதிரி அவைகளுக்குள் பேசிக்கொண்டு சில..(ஏய். அந்த ஏரியால நிறைய மீன்கள் இருக்கு)

கடந்து செல்லும் எங்களை அனிச்சையாய்த்திரும்பிப் பார்த்து, மீண்டும் தன் வேலையை மும்முரமாய்த் தொடரும் சில..(வந்துட்டாங்கய்யா!)
ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் மைசூருக்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு வடக்கே 10கி.மீ தொலைவில் உள்ளது.
0.65 ச.கி.மீ சுற்றளவே உள்ள இந்தக் குட்டி சரணாலயம் ஆறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆனது.

காவிரியில் அணை கட்டும் போது உருவான இந்தத் தீவுகள் பறவைகள் வந்தமரும் அருமையான வாசஸ்தலமாக இருந்த்தைப் பார்த்த உலகப்புகழ் பெற்ற பறவையியல் நிபுணர் டாக்டர்.சலீம் அலி 1940 –இல்,அன்றைய மைசூர் மகாராஜாவிடம் இதைப் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அப்போது முதல், நூற்றுக்கணக்கில் cormorants, darters, white ibis, spoon billed storks, open billed storks, painted storks, white necked storks, egrets, herons, terns, swallows, kingfishers, sandpiper போன்ற பறவை இனங்களின் வாசஸ்தலமாக ஆனது ரங்கன் திட்டு.
நாங்கள் குடும்ப சகிதமாய் அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி 7.30 மணிக்கு ஸ்ரீரங்கப் பட்டணம் போய்ச்சேர்ந்தோம்.ஸ்ரீரங்கநாதரை தரிசித்து விட்டு, ரங்கன்திட்டு செல்கையில் 10 மணி ஆகிவிட்ட்து.(இடையில் அங்கே இருந்த ஒரே ஹோட்டலில் இட்லியும் தோசையும் சாப்பிட்டோம்.(ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் –அதில் எது அதிகக் கொடுமையானது என்று.)- இந்த ஏரியாவில இதுக்கு மேல ஒண்ணும் எதிர்பார்க்காதீங்க என்றார் என் மைத்துனர் பாலாஜி.
(அவருக்கு இதுபோன்ற இடங்களெல்லாம் தண்ணி பட்ட பாடு. சனி ஞாயிறு என்றால், தனது எஸ்.எல்.ஆர் கேமராவைத் தூக்கிக் கொண்டு மலை, ஆறு, சுற்றுலா இடங்கள் என்று கிளம்பி விடுவார்.)
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்கள் கல்லூரி ஆசிரியை அங்கிருந்த மாணவிகளை “ம் சீக்கிரம் சீக்கிரம்.. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.இட்லியை முழுங்கவும் முடியாமல், பசியால் பாதியில் எழவும் முடியாமல் பாவம்...மாட்டிக்கொண்ட மாணவிகள்.
பச்சைப்பசேலென்ற நெல் வயல்கள்,நாற்று நட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள், வீட்டுக்கு இரண்டாய் மரங்களில் கட்டப்பட்ட காளை மாடுகள் எல்லாவற்றையும் கடந்து பத்து நிமிட்த்திற்குள் ரங்கன் திட்டு சென்று விட்டோம்.
சுற்றிலும் மூங்கில்,அகேசியா, யூகலிப்டஸ் மற்றும் பல்வகை மரங்கள் புல்வெளிகளுடன் மிக அழகான இடமாக இருந்த்து ரங்கன்திட்டு. பூங்காவில் இருந்த நீர்த் தேக்கங்களில் மலர்ந்து,செக்கச்செவேலென்று இருந்த அல்லிப் பூக்கள் கொள்ளை அழகு.

ரங்கந்திட்டில் பறவைகளை அருகில் சென்று ரசிக்க படகு சவாரி அருமையான வழி
ஒவ்வொருவர் ஏறியபோதும் பாரத்தால் இருபுறமும் அலைக்கழிந்தது படகு.
வெயில் அதிகமாக இருந்தபடியால் கைகளை ஆற்றுநீரில் அழாவிக் கொண்டிருக்கையில், ”கைய உள்ள விடாதீங்க, முதலைங்க இருக்குது” என்று பீதியைக் கிளப்பினார் பாலாஜி.
சிறிது தூரப் பயணத்திலேயே அவர் சொன்னது போல காவிரியில் வளமாகக் கிடைக்கும் மீன்களைத் தின்று கொழுத்த முதலைகள் பாறையோரம் அசையாது கிடந்தன.அதனருகிலும் பாதுகாப்பான இடைவெளியில் பறவைகள் நின்று கொண்டு.
கூட்டம் கூட்டமாய்ப் பறவைகள்,மரம் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள்,குறுக்கும் நெடுக்குமாய் காற்றைக் கிழித்துக் கொண்டு கடந்து செல்லும் பறவைகள் என்று எல்லாவற்றையும் ரசித்தோம்.
பதினைந்து நிமிடங்களில் கரைக்குத் திரும்பியபோது இன்னொருமுறை போகவேண்டும் என்கிற ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
10 மணிக்கு மேல் ஆனபடியால், அந்த சனிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகமாக இருந்தது.

பறவைகளை மனமின்றிப் பிரிந்து,திப்பு சுல்தான் கோடைகாலத்தில் தங்க உருவாக்கியிருந்த ஓய்வு மாளிகையை சுற்றிப்பார்த்தோம்.அவ்ர் பயன்படுத்தியிருந்த ஆடைகள், வாள்கள்,துப்பாக்கிகள் (பிஸ்டல் சைசில் இருந்து பின்லேடனை இங்கிருந்தே குறிபார்த்து சுடுமளவு நீ....ளமான துப்பாக்கிகள் வரை) ஆஜானுபாகுவாய் முப்பரிமாணத்தில் வரையப்பட்ட திப்புவின் ஓவியத்தை அந்த மண்டபத்தில் நாம் எங்கிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும், திப்புவின் விழிகள் நம்மையே முறைப்பது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது.

பிப்ரவரியிலேயே ஆரம்பித்து விட்ட வெயிலை அங்கலாய்த்துக் கொண்டே, அருகிலுள்ள பல்மூரி அணைக்கு வந்து ஒருமணி நேரம் அருமையான நீச்சல் குளியல் போட்டோம்.

அங்கே,எட்டடி நீளக் கூந்தலை அவிழ்த்து, காவேரியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியாருடன் ஒரு போட்டோ செஷன்.
புகைப்படங்கள் எடுத்ததும் போஸ் கொடுப்பதும் ராகா (எ) பாலாஜி

பின்,நிமிஷாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மைசூருக்கு வந்து, அரண்மனையின் முன் சம்பிரதாயப் போட்டோக்கள் எடுத்து விட்டு,சாமுண்டி கோவில் சென்று விட்டு, வரும்வழியில்,மரபை மீறமுடியாமல்,சில ஊசி,பாசிக் கடைகளுக்கு சென்று வாங்கி விட்டு பெங்களூருக்கு வண்டியைத் திருப்பினோம்.
அடுத்தமுறை ரங்கன் திட்டுக்குப் போகும்போது விடியற்காலையில் அங்கே இருந்தால் பறவைகள் தூங்கி சோம்பல் முறிக்கும் அழகில் இருந்து எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு ரசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.அப்புறம் இன்னொன்று-மறக்காமல் கட்டுசாதம் எடுத்து செல்லவேண்டும்.

10 comments:

கானகம் said...

படங்களும் வர்ணனைகளும் நன்று. இஅர்கையுடன் இனைந்திருக்கக் கிடைக்கும் நேரத்தை நிச்சயம் தவறவிடக்கூடாது..

ராம்ஜி பெரியவன் said...

நல்லா எழுதியிருக்கீங்க...இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது...உங்க மைத்துனரோட போகவே நீங்க பக்கா பிளான்ல கட்டு சாதத்தோட போயிருப்பீங்கன்னு நினைச்சேன்... இதே மாதிரி சலீம் அலி பரிந்துரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு பறவைகள் சரணாலயம் கோவாகிட்ட இருக்கறதா ஞாபகம்...(அந்த போட்டோ புடிக்கிற தம்பியோட மூஞ்சி தெரியிற மாதிரி போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்)

அண்ணாமலையான் said...

நல்ல படங்களோட அழகான பதிவு... வாழ்த்துக்கள்....

கானகம் said...

//.(அந்த போட்டோ புடிக்கிற தம்பியோட மூஞ்சி தெரியிற மாதிரி போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்//

ஒருவேளை கட்டுரையாளருக்கு போட்டோ புடிக்கிற தம்பிய புடிக்காதோ?

:-)

R. Jagannathan said...

An useful article - which is rare in the blog world! The article as well as the photographs are very nice. Thank you. You didn't miss the humour - மரபை மீறமுடியாமல்,சில ஊசி,பாசிக் கடைகளுக்கு - ! I think all women - my wife included - enjoy only this type of shopping as you can see in any festivals / even malls! - R. Jagannathan

R. Jagannathan said...

After posting my comment, I accidentally clicked on one of the the photos and saw the enlarged view. Then I saw all the photos. Congrats to the photographer / s. I particularly enjoyed the 'Panju kokku' and 'parakkum kokku' . - R. Jagannathan

Anonymous said...

add temple and other places tourist visiting timigs and more use tips. in mysore a veg. hotel name mylaari is so fine.

மரா said...

நல்ல பகிர்வு.இங்கிட்டு சென்னை வந்தா ‘வேடந்தாங்கல்’ சென்று வாருங்கள். 10,000க்கு மேல் பறவைகள் உள.சென்ற மாதம் சென்று வந்தேன்.முடிந்தால் ‘nagarhole' சென்று வாருங்கள்.
புலிகளையும் உல்லாஸ் கரந்த என்ற ஒரிஜினல் மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.நிறைய தகவல்கள் வேண்டின் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி.

Aaron Thomae said...

Please read my blog and let me know what you think!

http://bestvacationdestinations.blogspot.com/

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in