December 26, 2010

உடுப்பி,சிருங்கேரி,கொல்லூர் கோவில் பயணம்

சிருங்கேரிக்கு செல்லும் வழியில் ஆகும்பே என்னும் மலைப்பகுதியில்,சன்செட் பாயிண்ட் என்னும் இடத்திலிருந்து இயற்கையை வெகுவாக ரசித்தோம். 12 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்கையில், பரந்து கிடந்த வனப்பகுதியும், பெரும் பாறைகளைக் கொண்ட மலையையும் ஆனந்தமாக ரசித்துச் சென்றோம்.




தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப் படும் ஆகும்பேயில் இன்னொரு ஆச்சரியம் எங்களுக்குக் காத்திருந்தது.தொட்ட மனே (பெரிய வீடு) என்றழைக்கப்படும் கஸ்தூரி அக்காவின் வீடு பல யாத்ரீகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பெரிய பங்களா போன்ற அந்தக் காலத்து வீட்டில் இன்றும் கஸ்தூரி அக்காவும் (அவர் பாட்டியாக இருந்தாலும் அனைவராலும் அப்படித்தான் அழைக்கப் படுகிறார்:)) அவரது குடும்பத்தினரும், அங்கு வரும் பிரயாணிகளுக்கு சொற்ப பணத்தை வாங்கிக் கொண்டு, அருமையான உணவையும், அமைதியான தங்குமிடத்தையும் வழங்குகின்றனர்.




எங்களுடன் வந்திருந்த ராகா சென்ற செப்டம்பரில் தான் ஆகும்பே சென்று விட்டு வந்த படியால், பார்த்தவுடனே முகப் பரிச்சயித்து விருந்தோம்பல் செய்தார்.வேண்டாமென்றும் கேட்காமல் உடனே 27 மூலிகை சமாச்சாரங்கள் அடங்கிய கஷாயத்தைப் போட்டுக் கொடுத்தார். கசக்காமல், இருமலை ஏர்படுத்தாமல் கஷாயம் மென்மையாக இருந்தது.அந்தப் புராதன பங்களாவை சுற்றிப் பார்த்து வியந்தோம்.நான்கு ச்மையலறைகள்,பூஜையறை, பாத்திரங்கள் அடுக்கி வைக்க அதற்கென மர பீரோ,இன்னும் பலவித வேலைப்பாடுகளுடன் கூடிய மரக்கதவுகள், மர அடுக்குகள்,இரண்டு மூன்று கிணறுகள், அதில் நீர் சேந்தி ஊற்றினால், அவை நேரடியாக பாத்ரூமுக்கு வந்து சேர இருந்த இணைப்புகள், அடுப்பின் மேல் நிரந்தரமாக பூசி வைக்கப் பட்ட வெந்நீர் அண்டாக்கள் ,ஆண்,பெண்களுக்கு இருந்த தனித் தனி குளியலறைகள் இரண்டு அடுக்கு மாடி,பின்புறமிருந்த பசுவின் தொழுவம்,வைக்கோற்போர் சேமிக்க இருந்த தனி இடம், என்று அந்தப் பெரிய வீடு பழமையுடன் இருக்க, கஸ்தூரி அக்கா ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார். கன்னடம்,கொங்கணி,மராட்டி, ஹிந்தியில் சரளமாய் பேசுகிறார்.

சிருங்கேரி ,ஆகும்பே செல்பவர்கள் அவசியம் ஒருமுறை சென்று,உணவருந்தி வரலாம்.போவதற்கு முன் கஸ்தூரி அக்காவை 08181233075 என்கிற தொலைபேசி எண்ணில் அழைத்து, எத்தனை பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றால் ருசியான உணவு தயார். கஸ்தூரி அக்காவின் இந்த பங்களாவில் தான் ஆர்.கே.நாராயணன் எழுதிய தொலைக்காட்சித் தொடரான மால்குடி டேஸ் சூட்டிங் செய்யப்பட்டது என்பது விஷேசமான செய்தி.

(தொட்ட மனே பற்றி மேலும் அறிய கூகுளில் தேடவும் அல்லது இந்த பிளாக்கையும் வாசிக்கலாம்.http://deponti.wordpress.com/2008/12/05/agumbedodda-mane/)






கஸ்தூரி அக்கா அவரது தாயாருடன்




சன்செட் பாயிண்டிலிருந்து மலைப் பிரதேசத்தின் அழகு

ஹேர்ப்பின் வளைவில் நெளிகின்ற பேருந்து

தொட்ட மனே (பெரிய வீடு)

பிரயாணிகள் ஓய்வெடுக்க அந்தக் காலத்துக் கட்டில்கள்




நிரந்தரமாக அமைக்கப்பட்ட வெந்நீர் அண்டாக்கள்

துளசி மாடம்-கல்லால் ஆனது


சிருங்கேரி கோவில்




.
பொதுவாக எல்லா கோவில்களிலும் கடவுளின் சிலை வாயில் பக்கம் நோக்கியே அமைக்கப் பட்டிருக்கும்.ஆனால் வாயிலுக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டி நிற்கும் கடவுள் உடுப்பியில் மட்டும் தான். ஆம்.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாழ்ந்த வகுப்பினரைச் சேர்ந்த கனகதாசர் என்ற கிருஷ்ண பக்தருக்கு முன்வாயிலில் நுழைய அனுமதி கிடைக்காததால்,ஒன்பது துவாரங்கள் உள்ள சாளரம் வழியே கிருஷ்ணனை வணங்கினார்.பக்தருக்கு தரிசனம் தர கிருஷ்ணர் சாளரம் நோக்கித் திரும்பி நின்றபடியால் அன்று முதல் எல்லா பக்தர்களும் அந்த சாளரம் வழியாகத் தான் கிருஷ்ணனை தரிசிக்க முடியும் என்றானது.கனகனகிண்டி என்று கன்னடத்தில் அழைக்கப்படும் அந்த சாளரத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகள் பொறிக்கப் பட்டுள்ளன


உடுப்பிக்கு அருகே மால்பே என்னும் கடல்பகுதியைக் கடக்கையில் புயலில் சிக்கிக் கொண்ட கப்பல் ஒன்றை மத்வர் தன் ஞானதிருஷ்டியால் அறிந்து,அதைத் தம் இறைபக்தியால் கடலில் மூழ்காமல் காப்பாற்றுகிறார்.
நன்றியுடன் அந்த கப்பல் தலைவன் கைம்மாறு என்ன செய்ய? என்று கேட்க, மத்வரோ, அந்தக் கப்பலில் இருக்கும் கோபிச் சந்தனப் பாறையைக் கேட்கிறார்.
இவ்வளவு பெரிய உதவிக்கு ஒரு சாதாரண பாறையைக் கேட்கிறீர்களே என்று குழப்பமாய் அதை மத்வரிடம் சமர்ப்பிக்கிறான்.ஆனால், அந்த கோபிச்சந்தனக் கல்லுக்குள் இன்று நாம் உடுப்பியில் வழிபடும் சாலிக்கிராம சிலை மறைந்திருந்தது.அதை எடுத்து மத்வர் உடுப்பியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாய் வரலாறு உண்டு.இதே விக்ரகம் துவாபர யுகத்தில் ருக்மிணியால் வழிபாடு செய்யப் பட்ட்தாகவும் மத்வவிஜயம் என்னும் நூலில் உள்ளது.



துங்கா நதியின் பெரிய பெரிய மீன்கள்

அடுக்கி வைக்கப்பட்ட உணவுத் தட்டுகள்-சிருங்கேரி

நிதானமான உணவு

யானைக்கும் தயாராக உணவு

பிரேக் ஃபெயிலியர்





மத்வர்

மூகாம்பிகைக்கு வைரக் கைகள் காணிக்கை
இந்துக்களின் புனித தலங்களில் மிக முக்கியமான ஒன்று சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் பீடம். பல்வேறு காரணங்களால் நலிவுற்றிருந்த இந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டி, வேத உபநிஷதங்களுக்கு விளக்கங்கள் கூறி,இந்து தர்மத்தையும்,அத்வைத சித்தாந்தத்தையும் இந்தியா முழுவதும் போற்றிப் பாதுகாக்க இமயம் முதல் குமரி வரை முக்கியமான இடங்களில் பீடங்களை அமைத்து, தேர்ந்தெடுத்த சீடர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். அந்தப் பீடங்களில் ஸ்ரீ சாரதா பீடம் மிகப் பழமையும், பெருமையும் வாய்ந்தது. துங்கா நதிக் கரையில் அமைந்துள்ள இந்தப் பீடத்தில்
அம்பாளை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமான சந்திரமௌலீஸ்வரரையும், ரத்தினகர்ப்ப கணபதியையும், சிருங்கேரி பீடத்தின் முதல் பீடாதிபதி சுரேஷ்வராச்சார்யரிடம் கொடுத்து பூஜை செய்யக் கூறினாராம். இந்த ஸ்படிகலிங்கத்துக்கே, இன்றுவரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனராம்.


விஜயநகர கட்டடக் கலையின் கம்பீரத்தைக் காட்டி நிற்கும் கற்கோயில். அருகில் கோபுரத்துடன் அம்பாள் சரஸ்வதியின் அம்சமான ஸ்ரீசாரதாம்பாள் கோயில். எதிர்ப்புறத்தில் ஸ்ரீநரசிம்மபாரதி யாக மண்டபம்; அழகான அமைப்பு; வேதகோஷங்கள் முழங்கிய வண்ணமாக மாணவர்கள்,கண்ணையும்,கருத்தையும் கவரும் அழகான சிற்பங்கள் என்று அந்த சுற்று வட்டாரமே ரம்மியமாக இருந்தது.துங்கா நதியில் துள்ளி விளையாடும்பெரிதான, கன்னங்கரேலென இருக்கும் மீன்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.
 
மதியமும், இரவும் சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப் படுகிறது.தர்மஸ்தலா போன்றே நூற்றுக் கணக்கில் பக்தர்களது பசியாற்றுகின்றனர். ஆனால் இங்கு, சற்று நிதானமாகப் பரிமாறுவதால், பொறுமையாக உண்ண முடிகிறது.கழுவி,அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தட்டுக்களைக் காண்பதற்கு ஒரு புதிய காட்சியாய் இருந்தது.
 
  சிருங்கேரியிலிருந்து கொல்லூருக்கு செல்கையில் எங்களது டிரைவர் காரை அவசரமாக நிறுத்தி காருக்கடியில் சென்று சோதித்து விட்டு, பிரேக் ஃபெயிலியர் என்றார்.அன்றோ, ஞாயிற்றுக் கிழமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஊரும் தென்படவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கையில்,அந்தப் பகுதியைச் சேர்ந்த ராகு என்கிற ஐயப்ப பக்தரான ஒரு ஆட்டோ டிரைவர், எங்களிடம் வந்து என்ன பிரச்ச்னை என்று கேட்டறிந்து,அவரே நான்கைந்து மெக்கானிக்களுக்கு போன் செய்து கடைசியில் ஒரு மெக்கானிக் வர ஏற்பாடு செய்தார். மூன்று கிலோமீட்ட்ருக்கு அப்புறம் உள்ள ஒரு ஊரிலிருந்து மெக்கானிக் வந்து முதற்கட்ட முதலுதவியை வண்டிக்கு செய்து விட்டு, பின்னர் மெக்கானி கடைக்கே, வண்டியை விட்டு, ரிப்பேர் செய்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.


நடு வழியில் நாங்கள் நின்று கொண்டிருக்கையில், எங்களைக் கடந்து சென்ற, அநேகமாக அத்தனை வண்டிகளும் சற்று நிறுத்தி, என்ன ஆயிற்று? ஏதேனும் உதவி வேண்டுமா? என்று கேட்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்தக் காலத்திலும் தானாக முன் வந்து உதவும் ஆட்களும் இருக்கிறார்கள்.



வண்டி பழுதானதால் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டது.அதனால் கொல்லூரில் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.பரசுராமரால் உருவாக்கப் பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் முக்கியமானது.பார்வதி தேவிக்கு என இருக்கும் தனி ஸ்தலம் இது.குந்தாப்பூர் தாலுகாவில், செளபர்ணிகா நதிக்கரையில், மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட இடத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது.கர்நாடகத்தில் இருந்தாலும் கோவிலில், மலையாளம் பேசுபவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.சிறிதளவே கூட்டமிருந்ததால் இரண்டு முறை அம்மனை நன்றாக தரிசிக்க முடிந்தது. சுயம்பு லிங்கமும், அதில் சுவர்ண ரேகையாக சக்தியும் இருப்பதால் சிவசக்தியாக ஐக்கிய தரிசனம் செய்கிறோம்.சில வருடங்களுக்கு முன்பு,கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைரத்தினால் செய்யப்பட்ட கைகளை இளையராஜா காணிக்கை அளித்தார் என்பது கூடுதல் தகவல்.



புகைப்படங்கள்: ராகா

2 comments:

கானகம் said...

நல்ல பதிவு. தமிழ் ஹிந்து போன்ற தளங்களுக்கு அனுப்பியிருக்கலாம்..

Unknown said...

சூப்பரன பதிவு தங்கள் மூலம் அறிந்தோம் ஆன்மிக இடங்களை