July 26, 2011

மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை

இன்னும் களங்கப் படாத, ஒரு குழந்தையின் இதயத்தைப் போல,நம் காலத்தின் மாசுக்களையெல்லாம் மீறி, மஹாபலிபுரம் அழகாக, கவித்துவமாக இருக்கிறது. மிகவும் துரிதகதியான வாழ்க்கையில் பலநூற்றாண்டுகளாகத் துறைமுக நகரமாகத் திகழ்ந்த அது, இன்று பழைய நினைவுகளை அசைபோடும் ஐம்பத்துச் சொச்ச மனிதனாய்த் தோன்றியது.











இலங்கை,சீனா, தெற்காசிய நாடுகள் மற்றும் ரோம் நகரத்துடன் வாணிபத் தொடர்புக்கு ஒரு முக்கியத் தொடர்புத்தளமாக இருந்த மஹாபலிபுரம், ஆறாம் நூற்றாண்டு முதல், பல்லவர்களின் சிறந்த சிற்பம் மற்றும் கட்ட்டக் கலையால், உலகப் பிரசித்தி பெற ஆரம்பித்தது. ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள், கடற்கரைக் கோவில்கள் பல்லவர்களது திறமையைப் பறைசாற்றும்.ஏழு கடற்கரைக் கோவில்கள் இருந்ததாய் பண்டைய கடற்பயணிகள்,வயதான மீனவர்களின் செவிவழிச் செய்திகள் மற்றும் 1798 இல் மஹாபலிபுரத்திற்கு வந்த பிரிட்டிஷ் பயணி ஜே.கோல்டிங்ஹாம் இந்த ஏழு கடற்கரைக் கோவில்களைப் பற்றி, ”செவன் பகோடாஸ்” என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியலாம். ஏழு கடற்கரைக் கோவில்களில் ஆறு இப்போது கடலின் வயிற்றுக்குள்.எஞ்சியிருக்கும் ஒன்றே நாம் இப்போது பார்த்து மகிழும் கடற்கரைக் கோவில்.










2003 ஆம் ஆண்டு நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசனோகிராஃபி நடத்திய கடலடி ஆய்வில், கடற்கரையிலிருந்து 800 மீட்டர் தொலைவில், 5-8 மீட்டர் ஆழத்தில் மனிதரால் கட்டப்பட்ட சிற்பங்கள்,படித்தளங்கள்,உடைந்த சுவரின் சில பகுதிகள்,கோவிலின் சில பகுதிகள் போன்ற அமைப்பினையொத்த சில சிதலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.தொல்பொருள் ஆய்வுகள் இவை 1300-1500 வருடங்கள் பழையன என்கின்றன. ஆண்டொன்றுக்கு 55 செ.மீ கடலால் அரிக்கப்படும் மஹாபலிபுரக் கடற்கரை மேற்கூறிய ஆறு கடற்கரைக் கோவில்களையும் அரித்து விட்டிருக்கிறது.










”யுனெஸ்கோ புராதனப் பகுதி” யாக அறிவிக்கப் பட்டிருக்கும் மஹாபலிபுரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன ரதங்கள், அர்ஜீனன் தவம் மற்றும் குகைச் சிற்பங்கள் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன்,இரண்டாம் நரசிம்ம வர்மன் மற்றும் முதலாம் ராஜசிம்மன் ஆகியோரால் கட்டப்பட்டன.குகைக் குடவரைக் கோயில்கள், சிற்பங்கள் பல்லவ காலக் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. புத்த விகாரங்களின் சாயலும் இந்தக் கலையம்சத்தில் உண்டு.அஜந்தா, எல்லோரா வகைக் குகைக் கோயில் சாயலும் உண்டு. அதற்கு, நரசிம்ம வர்மன் கி.பி.642 இல், சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்று, அங்குள்ள சிற்பிகளையும், கலைஞர்களையும் போர்க்கைதிகளாக சிறைப்பிடித்து காஞ்சிக்கும்,மஹாபலிபுரத்திற்கும் அழைத்து வந்து, அவர்கள் செய்த சிற்பங்களில் அந்த சாயல் இருப்பதாகக் கொள்ளலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.






மொத்தம் இருக்கும் எட்டு ரதங்களில் பஞ்சபாண்டவர் ரதம் எனப்படும் ஐந்து ஒற்றைக்கல் ரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப் பட்டவை..இவற்றுள் மிகப்பெரியது தர்மரின் ரதம். மற்ற ரதங்களான பீமன், அர்ஜீனன்,நகுல சகாதேவ ரதங்கள் தர்மரின் ரதத்தின் சிறிய ஜெராக்ஸ் காப்பிகளாக இருக்கின்றன.இருப்பதிலேயே மிகச்சிறியதும், மிக எளிமையானதுமாய் இருப்பது திரெளபதியின் ரதம் தான்.




நான் தங்கியிருந்த ஹோட்டல்











மஹாபாரதத்தின் ஒரு காட்சியான அர்ச்சுனன் தவத்தைக் காட்டிடும் ஒரு சிற்பம்,
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹர் குடைவரைக் கோவில்,
அழகுற நின்று கொண்டிருக்கும் கடற்கரைக் கோவில் என்று பார்த்து, ரசித்துக் கொண்டே இருக்க மஹாபலிபுரத்தில் பல இடங்கள் உண்டு.

இதுவரை பலமுறை மஹாபலிபுரத்திற்குச் சென்றிருந்த போதிலும், அங்கு தங்கியிருந்தது இதுவே முதல்முறை.சிறுநீரக மருத்துவர்களின் மாநாடு & கண்காட்சியில் பங்குபெறச் சென்றிருந்தேன்.மாநாட்டில் பங்குபெற என்றவுடன் என்னைப் பற்றிப் பெரிதாக ஏதும் எண்ணி விட வேண்டாம்.கண்காட்சியில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் எங்கள் கம்பெனி, ஸ்டால் போட்டிருந்தது.அதை மேற்பார்வை இடவே எனது மஹாபலிபுர விஜயம்.

கடற்கரைக் கோவிலில் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான சில விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம்.சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோவிலில் சன்னதிகள். மண்டபம் கர்ப்பகிரகத்திற்கு பின்புறம் அமைக்கப் பட்டிருப்பது, சுற்றுப்புற சுவரில் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் நந்திகள் என மிகவும் வித்தியாசமாக உள்ளது கடற்கரைக்கோவில்.


பல்லவ மன்னனால் விஷ்ணுவின் கோவிலான திருக்கடல்மல்லை கட்டப்பட்ட பின்னரே, கடலின் சீற்றங்களிலிருந்து சிற்பங்கள் அழிவது நின்றதாம். நமக்குக் கிரிக்கெட் போல, பல்லவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மல்யுத்தம். முதலாம் நரசிம்மவர்மன் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் அவருக்கு “மாமல்லன்” என்று பெயர்.- மாமல்லபுரம். விஷ்ணுவின் பக்தனான மஹாபலி மன்னன் ஆண்டதாக ஐதீகம்- எனவே மஹாபலிபுரம்.







ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும் கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பாறைக்கு அப்பால், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், வராஹர் மண்டபம்,ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட பெருமாள் என்று ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள்.


புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும் நலங்கொள்நவமணிக்குவையும் சுமந்து எங்கும் நான்றொசித்து கலங்களியங்கும் மல்லைக் கடல்மல்லைத்தலச்சயனம்
வலங்கொள்மனத்தாரவரை வலங்கொள் என்மடநெஞ்சே
என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கடல் மல்லைத் தலசயன ஆலயத்தில் தலசயனப் பெருமாள் (ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன், வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை சாதிக்கின்றார்) பெருமாள் போலவே தாமரை இல்லாமல் நிலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார் நில மங்கைத் தாயார்.



செல்லநாயென மீண்டும் மீண்டும் காலருகே வந்து செல்லும் அலைகள்

விடியற்காலை ஐந்தரை மணிக்கே எழுந்து, தயாராகி,ஆறு மணிக்கெல்லாம் கடற்கரைக்கு சென்று கோவிலையும், கடல் அலைகளையும் ரசித்தேன்.
விடியற்காலையில், கடலலைகள் காலை வருட, சூரிய உதயத்தைக் காண்பது மிகவும் அருமையாக இருந்தது.காலைநேரத்துக் கடற்கரையின் அழகைக் காண வரும் சுற்றுலாவாசிகள், அவர்களை மகிழ்விக்கத் தயாரான குதிரைகள், பாறைகளில் ஓடும் நண்டுகள்,கடலலைகளில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள்,கடைகளைத் திறக்கத் துவங்கும் வர்த்தகர்கள், கரையோரத்திலிருந்த சிறு தெய்வப் பீடங்கள்,என அந்தக் காலைநேரத்து மஹாபலிபுரக் கடற்கரை மனதிற்குப் புத்துணர்வூட்டுவதாக இருந்தது.


அசந்த வேளையில் எகிறிக் குதித்துப் பயமுறுத்தும் ஆளுயர நாய்











கிருஷ்ணன் வெண்ணைப் பாறை






எங்கள் ஸ்டாலுக்கு பெற்றோருடன் வந்திருந்த ஒரு குழந்தை





தினசரி வாழ்வில் நாம் காணும் காட்சிகள் கல்லிலே கவித்துவமாக


அர்ஜீனன் தவம்




பஞ்சபாண்டவர் ரதங்கள்







மஹாபலிபுரத்தில் இருக்கும் நிறையக் கோவில்களும், சிற்பங்களும் முற்றுப் பெறாதவை. திடுமென்று ஒருநாள் காலை முதல் தொடர்ந்து கொண்டிருக்கும் சிற்ப வேலைகளை யாரோ தடுத்தி நிறுத்தி விட்ட்தைப்போல அவை முற்றுப் பெறாமல் அப்படியே போட்ட்து போட்டபடி இருக்கின்றன.

டிசம்பர் 2006 சுனாமியின் போது மஹாபலிபுரக் கடல் உள்வாங்கிய போது, அதுவரை தெரியாமல் கடலுள் மறைந்திருந்த சில பாறைச் சிற்பங்கள் தெரிய வந்துள்ளன.ஆறு அடி உயரமுள்ள ஒரு யானைச் சிற்பம், ஓடும் குதிரையின் சிற்பம், சிங்கச் சிற்பம், உடைந்த கோவிலின் சில பகுதிகள் என கடலுள் புதையுண்ட கலைவேலைப்பாடு கண்ணில் தெரிய வந்துள்ளன.
அரசின் முயற்சியால் கடலடித் தேடல் முற்றுப் பெற்றால், இதுவரை படிக்காத இன்னும் சில புதிய (பழைய?!)கற்கவிதைகளைப் படிக்கலாம்.





கடலடித் தேடுதலின் போது எடுக்கப்பட்ட படங்கள்
Source: 1.Current Science 2.National Institute of Oceanography





1 comment:

கானகம் said...

நல்ல பதிவு நண்பா. படங்கள் அருமை. கூகிள் ரீடரில் ஷேர் செய்திருக்கிறேன் இந்தப் பதிவை.