ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில்,ஹெப்பால் மேம்பாலத்திற்கு சற்று முன்பு எம்.இ.எஸ்.சாலையில் ஒரு விபத்து.மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்,இண்டிகாவால் மோதப்பட்டு கீழே விழுந்து கிடந்தார்.
மற்ற வாகனங்கள் சாலையின் ஓரமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருக்கையில் ஆட்டோ, ஆட்டோ என்று அனைவரும் சத்தமிட்டு, அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினோம். மனிதாபிமானம் மிக்க ஒருவர், அவரை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தார். விபத்து நடந்த இடத்தைப் பார்த்தேன். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பத்தடி தூரம் தள்ளி கீழே விழுந்து கிடந்தது.
அது சைக்கிளில் செல்பவர்கள் உபயோகிக்கும் சாதாரண லேசான ஹெல்மெட். (பார்க்க: படம்)
பெங்களூர் சாலைகளில் இதை அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். இதுபோன்ற ஹெல்மெட் ,விபத்து நேரிட்டால், தலையில் விழும் அடியை அது எந்த விதத்திலும் தடுக்காது.
அவர் பிழைத்தாரா, இல்லையா என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல், இதை எழுதும் இந்த நேரத்தில் ,ரத்த இழப்பு அதிகமாகி அவர் உயிர் பிரிந்திருப்பின், அதற்கு முழுக்காரணமும், அவரது தலையில் ஏற்பட்டிருந்த பலமான அடியும், அதைத் தடுக்கமுடியாத அந்த லேசான ஹெல்மெட்டுமே காரணம்.
ஒரு ஆய்வின் படி,
ஹெல்மெட் அணியாதவர்கள் ஹெல்மெட் அணிபவர்களை விட 14 மடங்கு அதிகம் உயிர்போகும் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
80-85 சதவீத அபாயகரமான தலை மற்றும் மூளைக் காயங்களை ஹெல்மெட் அணிவதால் தடுக்கலாம்.
90 சதவீத மோட்டார் சைக்கிள் விபத்து சாவுகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகின்றன.
சரி. யாரை ஏமாற்ற இந்த மாதிரி ஹெல்மெட்டை அணிகிறோம்?
ஏமாறுவது என்னவோ நாம் தான்.
ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ள ,ஃபைபர் அல்லது பாலிகார்பனால் செய்யப்பட்ட நல்ல தரமான ஹெல்மெட்டாய் வாங்கவும். அதுதான் விபத்து ஏதேனும் நடந்தால் நம் தலையை பாதுகாத்து நம் உயிர் காக்கும்.சாலையோரம் விற்கும் மலிவு விலை பிளாஸ்டிக் ஹெல்மெட்கள்,விபத்தின்போது உடைந்துபோவதுடன்,முகத்தில் குத்தி, காயத்தை மேலும் அதிகமாக்கும்.
ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த விளம்பரம் மிகவும் பொறுத்தமானதே.