Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

January 19, 2008

செயப்பாட்டுப் புகை

சின்ன வயதில் அப்பா
கல்லூரி விடுதியில்
அறை நண்பர்கள்
ரயிலின் கழிவறையில்
எனக்கு முன் சென்ற பயணி
டீக்கடையில் முகம் தெரியாதவர்கள்
-ஒருமுறையேனும் சிகரெட்
அறிந்திரா உதடுகளெனினும்-
அடிக்கடிப்
புகைத்துக் கொண்டிருக்கிறேன்.

January 18, 2008

1

நாள்


பல்துலக்கியதிலிருந்து படுத்தது வரை
என்றும் போல அதே அரவையொலி
வித்யாசங்களே இல்லாத சீட்டுக்களில்
ஒன்றை
வீசியெறிந்தது காலம்
பூவிலிருந்து எடுக்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சியாய்
பார்வை பறித்த உறக்கம்
பொக்கிஷப்படுத்தப்
புதிதொன்றும் நிகழாமல்
நினைவுக்கு அகப்படாத
அடுக்குகளில் நழுவும்
நாள்.

****************************************

அநித்தியம்


நகர வழியின்றி
விடாத அவலக்குரலில்
அவசர ஊர்தி
வாகன நெரிசலில்
கேட்கும் செவிகளில்
அடர்ந்து விரிகிறது
அவரவர்க்கான
அநித்தியத்தின் காட்சிகள்

***********************************

1

உனக்கும் எனக்குமான உலகில்
ஒன்றைத் தவிர
வேறெந்த எண்ணும் இல்லை.

**********************************

January 5, 2008

வசதிகளற்ற மெளனம்

வசதி

"என் மெளனத்தைப் புரிந்து கொள்ளாவிடில்
வார்த்தைகளையும் முடியாதென்றாய்"
எவ்வளவு தகிப்பாய் இருப்பினும்
ஒண்டிக்கொள்ள இடமிருக்கும்
பாலையிலோ பள்ளத்தாக்கிலோ
வீசியெறியும் உன் வார்த்தைகளை விட
ஈர்ப்பு விசையற்ற வானில்
பிடிமானமின்றி அலைக்கழிக்கும்
உன் மெளனம்
வசதிகள் அற்றதே.

************************************

சில்லறைக் கேள்வி

கொடுத்து வைத்தது போல்
ஒவ்வொருவர் முன் வந்தும்
கையேந்தும் பிச்சைக்காரன்
மூன்று நொடிகளில் முகம் படித்து
நகர்ந்திடும் கை வேறொரு முகம் நோக்கி
ஒன்றில் செருப்பும்,மறுகாலில் பூட்சும்
கவனம் ஈர்த்து,யோசனையில்
பிச்சைக் கணத்தைத் தவறவிட்ட
என்னைப் பற்றி
என்ன நினைப்பான்?

**************************************

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது

********************************

January 4, 2008

மாற்றம்

மாற்றம்

ஒட்டிக்கொண்டுவிட்ட
ஒருவருடப் பழக்கம்
அரைநொடிக்கப்புறமே
எழுத வரும் '08.

********************************
உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவு இறகுகள்
ஒவ்வொன்றாய் என்னை விட்டு
எழுநூற்றி எட்டாவது வேலையாய்
இதையும் செய்யும் காலம்
கடைசி இறகும் உதிர்ந்ததும்
பறக்க முடிகிறது இப்போது.

January 3, 2008

ராஜராஜன் எம்.ஏ.

பெயர்ப்பலகை செய்து விற்கும்
பிளாட்பாரக் கடையொன்றை
அனுதினமும் கடந்திடுவேன்
அலுவலகம் செல்கையில்
மாறிக்கொண்டேயிருக்கும்
வேறு வேறு பெயர்களில்
வெகு நாட்களாய் கண்ணில் படும்
ராஜராஜன் எம்.ஏ.
மறக்கப்பட்ட பலகையோ
பிழையுள்ளதென்று
மறுதலிக்கப்பட்டதோ
தொணத்தும் பலநாள் கேள்விக்கு
முழுக்குப் போடலாம் என்று
பாதித் தயக்கத்தில் இழுத்தேன்
ராஜராஜன் எம்.ஏ....
நிமிர்ந்தென் கண்களில் எதையோ தேடி
தீர்க்கமாய்க் கேட்டான் என்னிடம்
"நாந்தான் என்ன வேணும்?"

January 2, 2008

இணையத்தில் விஷவிருட்சம்

வேண்டாத பார்த்தீனியங்களை
உரம் போட்டு வளர்த்து
விளைநிலத்தை வீணடிக்கும் விஷமிகள்
குரோமோசோம் குறையுள்ள மூளையர்களின்
நபும்சகக் குறிகளின் அழுக்குத் திரவத்தில்
நசிந்துபோன சில வலைப்பக்கங்கள்
இஸங்கள் பெயரால்,மதங்கள் பெயரால்
மலப்பந்து எறியும் மூர்க்கர்கள்
வெறியுடன் வீசிக் கெக்கலிப்பவன் வாய்நோக்கி
வரிசையாய் வரும் எதிர்த்திசைப் பந்துக்கள்
பொறியால் பிடித்திட பெரியார் வார்த்தைகளை
வெறியாய்ப் பயன்படுத்தும் கொரில்லாக் கனவான்களின்
தடித்த பூட்சுகளின் அடியில் நசுக்கப்படும் இலக்கியப் பூக்கள்
ஒவ்வொரு சுட்டிலும்,ஒவ்வொரு இடுகையிலும்
மருந்தேதும் கிடையாத எய்ட்ஸ் கிருமிகளாய்
அயனவெளியில் கலக்கின்ற நச்சுச்சொற்கள்
இயேசுநாதர் சொன்னபடி
பதில் முத்துக்களை பன்றிகள் முன்பு போடாமல்
நாற்றம் தாங்காத மலப் பக்கங்களை
மூக்கைப் பொத்தித் தாண்டி
தொடர்கிறேன் பயணத்தை

January 1, 2008

வெளிதனில் புன்னகைக்கும் காலம்

1.கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு

***************************************

2.புது வருடம்

எப்போதும் போல் கடலுக்குள்
தலை மறைத்த சூரியன்.
ஏராள வெளிச்சத்தை
இனம் புரியாது பார்க்கும் சந்திரன்
மருண்ட கண்களுடன்
ஒடுங்கின பறவைகள்
பழக்கப் படாத இரைச்சலில்
சற்றுப் பயத்துடன் இரவு
எண்ணங்களின் ஏராள பாரத்தில் ஈதர்
கடிகார முட்கள் 12 காட்ட
நியான் விளக்குகளில் ஒளிர்ந்த
2008 பார்த்து மெலிதாய்
சிரித்தது பல கோடி வயதான காலம்.

*************************************

3.மூன்று ஐநூறு ரூபாய்த் தாள்கள்
ஒரு காட்பரீஸ் சாக்லேட் உறை
இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்
பழைய ரயில் டிக்கெட்
கொஞ்சம் சில்லறை
"K" எழுத்தில் சாவிக்கொத்து
குட்டித் தொலைபேசி டைரி
உள்ளங்கையளவு கண்ணாடி
பூப்போட்ட கர்ச்சீப்
இவ்வளவுடன்
பைக்கொள்ளா அளவு எனக்கான
சுதந்திரமும் பிரியத்தையும்
தன்னுள் வைத்திருக்கும்
தோழியின் கைப்பை.


**********************************

4.அடக்கி வைக்கப்பட்ட அன்பை
வெளிப்படுத்தும் உன் உதடுகளின் மொழிகளில்
வெடித்துக் கொப்பளித்தது என் புத்தாண்டு
சொற்களின் இடைவெளிகள் சொல்லாமல் தரும்
கிறக்கத்தைப் பற்றும் முயற்சியில்
இன்னொரு முறை
உன் எண்களை அழுத்திடும்
பிடிவாத விரல்கள்

************************************

5.மெதுவாய்க் கடலிறங்கும் அஸ்தமன சூரியன்
தூரத்துப் படகில் அசையும் இருவர்
தவற விட்ட நொடியில்
முழுதாய் மறைந்த சூரியன்
ஆயிரம் மணற்கண்கள்
என்னையே வெறித்துக் கொண்டு

***********************************

December 30, 2007

நடைமேடை எண்-2

நீண்ட பெருமூச்சுடன் கடக்கும்
ஒரு பழைய எஞ்சின்
பளிச்சிடும் கேமரா வெளிச்சத்திற்குப் பின்
இயல்புக்குத் திரும்பும் மனித முகங்கள்
சரக்கு ரயிலென்று தெரிந்ததும்
ஏமாற்ற முகப் பிச்சைக்காரன்
ரயில் புறப்படும் நேரத்தில்
விலகுவதற்குள் இறுகப் பற்றப்படும்
புதுத் தம்பதிக் கைகள்
அடுத்த ரயிலுக்காக அம்மாவுடன்
காத்திருக்கும் குழந்தை விடும்
பபிள்கம் முட்டையில்
திரும்பத் திரும்ப உடையும்
என் உலகம்

வெடிகுண்டு மிரட்டல்


அனாமதேயத் தொலைக்குரல் ஒன்று
அவசரமாய் நிறுத்தியது
புறப்படும் என் ரயிலை.
தொடையுயர மோப்பநாய்
முகர்ந்து பார்க்கவே பிறவியெடுத்ததாய்
ஏஸி, ஸ்லீப்பர் எல்லாமும் ஏறி
இருக்கையின் கீழ், பயணியர் பைகள்
எல்லா இடத்திலும்
அதன் மூச்சும்,வழியும் எச்சிலும்
எதுவும் இல்லை என்று உற்சாக விசிலடிக்கப்பட
தேடியது கிடைக்காமல்
சோகமாய் அமர்ந்தது ப்ளாக்கி..

December 29, 2007

சொற்கள்

கைக்குள்ளிருந்து விடுபட்ட பறவையாய்
எதிர்பாரா இலக்கு நோக்கி
எங்கெங்கோ சேரும் சில
எனக்குள் சிறைவைத்தும்
தப்பியோடித் தப்பர்த்தம் தரும்
சொல்லப்படாத சில
தவறான பொத்தான் மேல்
வெகுநாட்களாய் அழுத்திக் கொண்டு
பெரிதாய் பாரமூட்டும் பளுவுடன் சில
எந்தக் காதாலும் உரிமை கொண்டாடப்படாது
அனாதையாய் அலையும் சில
ஆள்மாறாட்டமாய், "எள் என்றால்
எண்ணெய்"யைப் பொருள் கூறி
எரிச்சலூட்டும் இன்னும் சில
ஒடுங்கிப் போய் உறைந்து ஆழத்தில்
பயன்படுத்தப் படாமலேயே இருக்கும் சில.
எவ்வளவு முயற்சித்தும் நினைவில் வராத
கடவுளின் சொற்கள்
பிரியத்தை வெளிப்படுத்தும்
அத்தனை சொற்களும்
அதிகப் பயன்பாட்டில் தேய்ந்து
உருவம் இழந்திருக்க
புதிய அகராதியை உருவாக்குகிறேன்
யாருக்கும் தெரியாத சொற்களுடன்.

December 22, 2007

3.5 கவிதைகள்

1.ரயிலின் வழியே

ரயில் வராத தண்டவாளத்தை
இருபுறமும் பார்த்துக் கடக்கையிலும்
பதட்டமாய் சிறுமியின் முகம்
உணவைக் கொட்டுபவர்களுக்கு
மன ஆறுதல் தரும் காக்கைகள்
ஸ்டேசனில் சண்டையிட்டு
சிறிது பயணித்தவுடன் விட்டுக் கொடுத்து
கைகோர்க்கும் தண்டவாளங்கள்
விரும்பினாலும் தொடரமுடியா
"நகர்வது நம்முடையதா, பக்கத்து ரயிலா
என உணர முடியா" மாய கணங்கள்
கீழே பயணிக்கத் தயாராய்
ஜன்னல் கண்ணாடியில்
பனித்துளி.


2.பிச்சை

சிக்னலில் குறையும்
ஒற்றை இலக்க எண்கள்
கொஞ்ச நஞ்சமிருக்கும்
மனிதாபிமானத்தையும்
பூஜ்யமாக்கும்

3. Vth C

மழைக்கு வழிவிடா
புது ஓடுகள்
சிமெண்ட் தரையில்
காணாமல் போன நாங்கள் செதுக்கிய
இந்திய வரைபடம்
வீட்டுக்கு விடும் மணி கணக்கிட
வெயில் வட்டங்கள் மீது தெளித்த மை
வெள்ளையின் வயிற்றில்
எண்ணிக்கையில் அதிகரித்து விட்ட
பொம்பளப் புள்ளைங்க.
வசந்தா டீச்சரின் கணக்கைக்
கவனிக்காமல்
வெளியே வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நான்.

3.5 என் பெயர் பொறித்த
அரிசியை எடுத்து உண்ணுகையில்
காலம் கெளவிப் போனது
அதன் பெயர் எழுதியிருந்த
என் தலையை.

December 14, 2007

சாயங்கால வானமும், ரயில் நிலையமும்

விருப்பப்படி வண்ணக்காட்சிகளை
நொடிக்கொருமுறை மாற்றும்
சாயங்கால வானம்
ஸ்கூட்டரின் பின்
அம்மா மடிக் குழந்தை
ரசித்து மழலையில் பகிர முயல
அந்த உலகின் சாவியைத்
தொலத்தவளின் மனம்
ஹாரன் ஒலிக்குப்பைகளால்
நிரம்பி வழிந்தது.

* * * * * *

ரயில் நிலைய நீண்ட படிகளில்
சத்தமாக ஒண்ணு, ரெண்டு எண்ணும்
பிஞ்சுப் பாதங்கள்
பொறுமையின்றித் தவிப்பில்
கடைசிப் படி.

* * * * * *

கடப்பவர் பார்வை படும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் உடையும்
என் முடமான கை.

November 22, 2007

ரகசியம்

மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாதென்று
சத்தியம் வாங்கி சொல்லப்பட்டவைகளில் சில
நான்காம் நபரான என்னிடத்தில் ரகசியமாய்
காதருகே கைவைத்துப் பகிரப்பட்ட ரகசியம்
உள்ளங்கை நீராய்க் கசியும் மனத்துளைகளூடே
விஷயங்களுக்கு முளைக்கும் இறக்கைகள்-
அவை ரகசியமாகையில்
மூச்சாய்ச் சிறைப்படுபவை ஒரு பலவீன கணத்தில்
பெருமூச்சாய்த் தப்பித்து சுவாசிக்கும் சுதந்திரமாய்
முடிவற்றுத் தொடரும் சங்கிலியின் கண்ணிகளாய்-
ரகசியம் அறிந்தோர் எண்ணிக்கை
உங்களுக்குள் புதைப்பதற்கு மாறாய்
இன்னொருவர்க்குச் சொன்ன எதுவும்
ரகசியமல்ல சத்தம் குறைந்த செய்தி
என்றாலும் என்னிடமுண்டு சில ரகசியங்கள்
சிதையிலிருந்து விறைத்தெழும் என் மண்டையோட்டை
பலம் கொண்டடிக்கும் வெட்டியானுக்கும் வெளிப்படாமல்.

யாரும் பார்க்காத போது

யாரும் பார்க்காத போது
திசைகள் தம் எல்லையைத் திருத்தும்
யாரும் பார்க்காத போது
காலம் சற்று ஓய்வெடுத்துப்
பின் எப்போதும் போல் நகரும்
யாரும் பார்க்காத போது
என் அறைக்குள் வரும் வானம்
யாரும் பார்க்காத போது
தேவதைகளுடன் பேசும் குழந்தைகள்
யாரும் பார்க்காத போது
புணர்ந்து முடித்த இயற்கை
தொடரும் தன் சிருஷ்டியை
யாரும் பார்க்காத போது
பூமிக்கு வந்து போகும் கடவுள்
எந்த விழிகள் மூடக் காத்திருக்கிறதோ
இன்னும் திறக்காத என் மூன்றாம் கண்?

குட்டிக் கவிதைகள்

எடுக்க மறந்த அழைப்பின்
பெயர் தெரியா எண்கள்
எதுவும் சொல்லாவிடினும்
எழுப்பும் கேள்விகள் ஏராளம்



விடியல் பறவைகளின்
எழுப்புதலைப் புறக்கணித்து
காற்றின் உலுப்பலில்
புரளும் இலைகள்


யாருமற்ற வானில்
அடுக்கி வைக்கப்பட்ட காற்றை
கலைத்துப் போடும்
பறவை



இலக்கு நோக்கி இறுக்கமாய்
தற்கொலைப்படை வீரர்கள்
தீப்பெட்டிக்குள்


தொலைந்து விட்ட
முதல் அலையைத் தேடி
தொடரும் அலைகள்


சரியாக நினைவில்லை
என் பழைய புத்தகத்தில்
ஒளிந்து கொண்டிருப்பது
நான் வைத்த மயிலிறகா
அது போட்ட குட்டியா?


நாளைய திட்டங்களை எழுதுகையில்
என் பின்புறம் ஒலித்தது சிரிப்பொலி
நான் திரும்பியவுடன் ஓடி மறையும்
நாளை

முளைத்தல்

பயண நினைவாய்க்
கொணர்ந்த மண்ணில்
பெயர் தெரியாத சில விதைகள்
எதிர்பார்த்துப் புதைத்து
வெகு நாட்களாகியும்
எதுவும் முளைக்கவில்லை
இந்தக் கவிதையைத் தவிர

நம்பிக்கை

மூன்று வினாடிகளுக்கு மேல்
பார்வையை நிறுத்த முடியவில்லை
எந்தக் கண்களிலும்
வலிய உதவுபவர்கள் மீது வரும்
அதிகப்படியான சந்தேகங்கள்
வார்த்தைகளைப் புறக்கணித்து
இடைவெளியைத் துருவும்
அனர்த்த வாசிப்புகள்
வளர்ப்பு நாயின்
வாலும் நாக்கும் மறைந்து
பூதாகரமாய்த் தெரியும் கோரைப் பற்கள்
நம்பிக்கையை எழுதி முடிப்பதற்குள்
அழைக்காமல் முன் வந்தமரும் அவ
கடவுளைக் கைகூப்பும் கணத்திலும்
கால்வாசி மனம் அடைத்த பிசாசு எண்ணங்கள்
மறுதலித்தலையே இயல்பாக்கி
மறந்துபோன இயல்பைத் தேடும் மனம்
வேண்டாத இரண்டெழுத்துக்களை
வெட்டும் உறுதியுடன்
கோப்பையில் துளி இடமும் வைக்காது
நாள் முழுதும் நிரப்பிக் கொண்டிருக்கும்
நான்.

கூழாங்கற்கள்

சாயங்கால நகரும் ஆற்றில்
கூழாங்கற்கள்
மௌனமாய் சில
ஆற்றோடு பேசும் சில
கொஞ்சம் தவிப்பாய்
என் உள்ளங்கையில் சில

8:31

வழக்கமான முகங்கள் வருமதில் நிறையவே
செய்தித்தாளிலோ,இயர்ஃபோன்களுக்கிடையிலோ
மனதை நுழைத்து உலகம் மறந்த சிலர்
உட்கார இடம் கிடைத்த உற்சாகத்தில் சிலர்
ஸ்ரீராமஜெயம் போல ஏதோ எழுதும் சிலர்
விட்டுப்போன விடிகாலை உறக்கத்தைத்
தொட்டுத் தொடர்ந்தபடி சிலர்
வரும் ஸ்டேசனில் இறங்காவிடினும்
வாயிற்படியின் வாயில் சிலர்
ஒட்டப் பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களை
பட்டும் படாது பார்த்தபடி சிலர்
பரீட்சையோ என்னவோ பயம் பூசிய முகத்துடன்
பள்ளிப் பிள்ளைகள் சிலர்
அதற்கப்புறம் வரும் எதிலும்
அளவிலடங்காக் கூட்டமென்பதால்
எப்போதும் நான் ஏறும் 8:31 ரயிலிலே
அடுத்தவர் செய்கையை அதிமுக்கியமாய் ஆராயும்
இலக்குகளற்று என்போலிருக்கும் இன்னும் ஒரு சிலர்

இல்லாத சில ஹைகூக்கள்

சிரித்துக் கொண்டே
அழும் காந்தி
லஞ்சப் பணத்தில்.


பல்லிடுக்கில் முடிகள்
அசூயையற்று
சீப்பு.


7கழுதை வயதாகியும்
12க்கு மேல் தெரியாத
கடிகாரம்.


கிழ ஆலத்தின்
ஊன்றுகோலாய்
விழுதுகள்.


கண்ணாமூச்சியில்
நிலா,பூமி
அமாவாசை.


கவிதையின்
போன்சாய்
ஹைகூ.

கடவுளின் முகவரி
அடைப்புக் குறிக்குள்
( )


சந்தேகப் பிராணியாய்
திரும்பத் திரும்ப எண்ணும்
கடிகாரம்.