எங்கள் ஊரான டி.கல்லுப்பட்டியில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் பொங்கல் சென்ற நவம்பரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. மொத்தம் ஏழு கிராமங்கள் சேர்ந்து (கல்லுப்பட்டி,தேவன்குறிச்சி,வன்னிவேலம்பட்டி,அம்மாபட்டி,
காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி)ஆறு சப்பரங்கள் செய்து முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்.பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பே சென்று விட்டதால், முந்தின இரவு, சுத்துப் பட்டி கிராமங்களுக்கு சென்று அவர்கள் சப்பரம் செய்வதையெல்லாம் பார்த்து விட்டு வந்தோம்.
கல்லுப்பட்டி சப்பரம் வழக்கம்போல அளவில் பெரியதாக இருந்தது.
அமைப்பிலும்,அழகியல் வேலைப்பாடுகளிலும் வன்னிவேலம்பட்டி சப்பரம் மிக நன்றாக இருந்தது.மற்ற சப்பரங்களை மிக சிரமப்பட்டுத் தூக்கிச் செல்கையில், வன்னிவேலம்பட்டி சப்பரந்தூக்கிகள் அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்றனர்.
தேவன்குறிச்சி சப்பரம் ஏறக்குறைய முக்கால் பங்கு ஒருபுறம் கீழே சாய்ந்து, மீண்டும் நேர் நிலைக்கு வந்த அந்த சில நொடிகள் நெஞ்சுக்குள் பக் பக்.
இந்த முறை , கையில் காப்புக் கயிறு கட்டிக் கொண்டு விரதமிருந்தவர்கள் மட்டுமே சப்பரந்தூக்க அனுமதிக்கப் பட்டார்களாம்.
அம்மனை தரிசிக்க வழக்கம்போல முண்டியடிக்கும் கூட்டத்தில்,இரண்டு மணிநேரம் காத்திருக்காமல் ஐந்து நிமிடத்திலேயே தரிசனம் செய்யமுடிந்தது. விடாது வந்த மழைக்கும், மறுநாளைய தீபாவளிக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
அம்மாபட்டிக்கு சென்று அவரவர் கிராம முத்தாலம்மனை அழைத்து வந்து அன்று முழுவதும் வழிபட்டனர். அன்றிரவே அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து, சோறு ஊட்டி, ஊருக்குத் தொலைவில் இருக்கும் ஓடைக்கரையில் சுக்கு நூறாக உடைத்துக் கரைத்தனர். எப்போதும் போல, அம்மன் உடைப்பு நிகழ்வு நடக்க ஆரம்பிக்கையிலேயே சொல்லி வைத்தாற் போல மழை பெய்ய ஆரம்பித்தது அற்புத நிகழ்வாக இருந்தது.
இந்த முறை பொங்கல் வைக்கும் நாள் முடிவுசெய்யக் குறி கேட்கையில் அம்மனின் உத்தரவுகள் அவ்வளவு தெளிவாகக் கிடைக்கவில்லையாம். இருந்தாலும் சமரசங்களுடன் பொங்கல் தினத்தை முடிவு செய்து,ஏற்பாடுகளைத் தொடர ஆரம்பித்தனர். அதனால் தானோ என்னவோ, இந்த முறை சில சிக்கல்கள் ஏற்பட்டன.
கல்லுப்பட்டி சப்பரம் நிலையிலிருந்து வெளியே வந்தவுடன் அதைத் தாங்கிப் பிடிக்க வைக்கப் படும் தண்டக் கம்புகள் உடைந்து விட, அது சரி செய்யப் பட்டு, ஒரு மணி நேரத் தாமதத்தில் அம்மாபட்டி பயணத்துக்குக் கிளம்பியது.
வயற்காட்டில் முழங்கால் அளவு சேற்றில் தூக்கிக் கொண்டு வரப்படும் சத்திரப்பட்டி சப்பரத்திற்கும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
அம்மாபட்டியிலிருந்து அம்மனை வெளியே தூக்கிக் கொண்டு வருகையில் ஒரு அம்மனின் சிம்ம வாகனமும்,திருவாச்சியும் உடைந்து விட, அதை சரி செய்துவிட்டு அம்மனைத் தூக்கிச் சென்றனர்.
இத்தனை பிரச்னைகளுக்கும் இடையேயும் யாருக்கும் பெரிதாக எந்த சேதமும் இல்லாமல் அம்மன் அருளால் முத்தாலம்மன் பொங்கல் இனிதே நிறைவடைந்தது.பின்னர் பரிகார பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டு நிவர்த்தி செய்தனர்.
இனி அடுத்த முத்தாலம்மன் பொங்கல் நவம்பர் 2012 இல்.
முத்தாலம்மன் பொங்கல் குறித்த மேலதிக விபரங்களுக்கு அதற்கென்றே துவக்கப்பட்டுள்ள கீழ்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.
http://www.muthalammanpongal.blogspot.com/
புகைப்படங்கள்: ராகா.
December 25, 2010
முத்தாலம்மன் பொங்கல்
Posted by பிரகாஷ் at 3:39 PM
Labels: Kallupatti, Muthalamman Pongal, ஊர்சாத்திரை பொங்கல், முத்தாலம்மன் பொங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
புகைப்படங்கள் அட்டகாசம்.
நன்று நண்பரே,உங்கள் ஊரின் உன்னதமான காந்தி நிகேதன் ஆசிரமும் உங்கள் ஊரின் பெயரைப்பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.
Post a Comment