November 17, 2007

சாவி

நடுத்தெருவில் கிடந்ததொரு சாவி.
தவறி விழுந்ததோ
வலுவில் வீசப்பட்டதோ.
எத்தனையோ கால்கள் பட்டு
விழுந்த இடம்,இருக்குமிடம்,
போகுமிடம் ஏதுமறியாது,
இப்போது என் கையில்.
அங்கேயே போட்டாலும்
எடுத்துக் கொண்டு சென்றாலும்
எந்த நிகழ்வின் நகர்வும்
திரும்ப மீள முடியாத்
தவறான திசை நோக்கியே.
பூட்டின் உலகம் திறக்கும் சாவியின்
பூட்டிய உலகம் திறக்கப் படாமல்
அதன் கையில் அதனையே வைத்துக்
குழம்பியபடி நடுத்தெருவில்.

November 16, 2007

ரயில் பயணத்தில்


சிவப்பை இழந்தவள்
பச்சை அசைக்க
நகரத் துவங்கும் ரயில்.


காசுக்காக மேஜிக் செய்யும்
செப்பிடு வித்தைக்காரனாய்
தூரத்தை விழுங்கும் ரயில்.


விரும்பாவிடினும்
விடியற்காலை
ஜன்னல் காட்சியாய்
கழிப்பறை இல்லாதவர்களின்
தொலைந்த வெட்கங்கள்.


உட்கார்ந்திருப்பவர்களின்
ஊசிக் கண்களை
காந்தமாய்க் கவரும்
கடக்கும் பெண்கள்-
எந்த வயதினராயினும்.


அதிசயமாய்
ஒரு கிறுக்கலும் இல்லாத
கழிப்பறை.


சக மனித நம்பிக்கைகளின்
அளவுகோல்களாய்
விதவிதமான சங்கிலிகள்
பருத்த பூட்டுக்களுடன்.


மூன்றாம் ஏசிக்குள்
மெளனத் திரையைக் கிழிக்கும்
கத்திரியாய் முன்னேறும்
விற்பவன் குரல்.


நீண்ட பயணத்தில்
பேட்டரி தீர்ந்த பின்னும்
கேட்கும் பாடல்
மனதிற்குள்.


புறக்கணிக்கப்பட்ட காதலாய்
சின்னச் சின்ன ஸ்டேசன்கள்.


வளைவுப் பாதையில்
கடைசிப் பெட்டியின்
இருப்பை ஊர்ஜித்து
திருப்தியாய் தொடரும் இஞ்சின்.


அடுத்த ரயிலுக்காக
போலியாக பின்னோக்கி நகர
காத்திருக்கும் மரங்கள்.


டவர்த் தாயைத் தொலைத்த
செல் குழந்தைகள்
சிணுங்கலின்றி பயமெளனத்தில்.

நகரத் தந்தையின்
வருகை அறிவிக்க
முதலில் ஓடி வரும்
குழந்தை வீடுகள்.

மனிதக் குழந்தைகளுடன் செல்லும்
ரயில் நோக்கிப் பெருமூச்செரியும்
மலட்டுச் சரக்கு ரயில்.


நல்ல கவிதை தேடி
புத்தகத்தில் மூழ்கியிருக்கையில்
தவற விட்டு விட்டேன் -
ஜன்னலுக்கு வெளியே தோன்றி மறைந்த
அதைவிட நல்ல கவிதையை.


பிளாட்பாரம் இறங்கி
வெளியேறும் முகங்களில்
ஒன்றேனும் திரும்பிப் பார்க்காத ஏக்கத்தில்
இதயம் கனத்துத் தயாராகும்
அடுத்த பயணத்துக்கு.

November 13, 2007

புரண்ட உலகங்கள்

ஏதோவொரு ஸ்டேசனில்
குலுங்கி நின்றது ரயில்.
ஜன்னலின் உள்ளிருந்து வந்த
பூச்சியொன்றை
சுண்டி வெளியேற்றிய கணத்தில்,
அதன் உலகைப்
புரட்டிப் போட்டதாய் அதிர்ந்தேன்.
துழாவி பூச்சியை எடுக்க எத்தனிக்கையில்
நகரத் துவங்கியது ரயில்
என்னுலகைப் புரட்டிப் போட்டு.

நிகழாத எதிர்பார்ப்பு

பஸ் சக்கரத்தினடியில்
சற்றே நசுங்கின சைக்கிள்.
ரத்தக் காயம் ஏதுமில்லை.
சற்றே ஏமாந்த முகங்கள்
கலைந்து விரைந்தன
அவரவர் திசையில்.

ஒன்றையாவது

என் அறையில் நுழைந்த
வண்ணத்துப்பூச்சி
மின் விசிறியில் அடிபடும் முன்
நிறுத்தி விட ஆசை
நகரும் காலத்தையாவது.

November 4, 2007

நுழைய முடியாத தெரு

ஆக்கர் குத்தப்பட்ட தழும்புகளின்றி
தார்த்தோல் போர்த்திய என் தெரு.
மண் வீடுகளின் சவக்குழிகளில்
வளர்ந்திருந்த மாடி மரங்கள்.
வாகனக் காப்பகமாகிப் போன
எதிர்வீட்டு மாட்டுத்தொழுவம்.
சாலை விழுங்கியிருந்த,
வீடுகளின் கடைசிப் படிகள்.
"தூமியக்குடிக்கி", "கண்டாரஓளி"
சப்தங்களின்றி குழாயடி.
புதிய மூக்குகள் அறிந்திராத
காற்றில் காணாத ரைஸ்மில் வாசனை.
தாவும் மணி நாயின் கால்தடங்களற்ற
வெள்ளைச் சட்டையில் நான்.
எத்தனைமுறை நடந்தாலும்
நுழையவே முடியவில்லை
என் பழைய தெருவுக்குள.

November 1, 2007

இன்னொரு வகை

சுடிதாரில் நான் குனியும்
எந்தவொரு கணத்தையும்
தவறவிடாத கழுகுக்கண்கள்.
பேருந்தில்,ஹோட்டலில்,கடைவீதியில்,
இந்த இடம்தான் என்றில்லாது எங்கும்.
தற்செயல் தவிர
மற்ற எல்லா அர்த்தங்களும்
கற்பிக்கப்படும் என் தீண்டலுக்கு.
எல்லா ஆண்களும்
இப்படித்தான் என்றில்லை
இன்னொரு வகையும் உண்டு
-சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.

செல்லா(த) செல்

கட்டைவிரல் வலிக்க
விடாது புலம்பும் மனிதர்கள்.
எப்போதும் தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் கடவுள்.