November 16, 2007

ரயில் பயணத்தில்


சிவப்பை இழந்தவள்
பச்சை அசைக்க
நகரத் துவங்கும் ரயில்.


காசுக்காக மேஜிக் செய்யும்
செப்பிடு வித்தைக்காரனாய்
தூரத்தை விழுங்கும் ரயில்.


விரும்பாவிடினும்
விடியற்காலை
ஜன்னல் காட்சியாய்
கழிப்பறை இல்லாதவர்களின்
தொலைந்த வெட்கங்கள்.


உட்கார்ந்திருப்பவர்களின்
ஊசிக் கண்களை
காந்தமாய்க் கவரும்
கடக்கும் பெண்கள்-
எந்த வயதினராயினும்.


அதிசயமாய்
ஒரு கிறுக்கலும் இல்லாத
கழிப்பறை.


சக மனித நம்பிக்கைகளின்
அளவுகோல்களாய்
விதவிதமான சங்கிலிகள்
பருத்த பூட்டுக்களுடன்.


மூன்றாம் ஏசிக்குள்
மெளனத் திரையைக் கிழிக்கும்
கத்திரியாய் முன்னேறும்
விற்பவன் குரல்.


நீண்ட பயணத்தில்
பேட்டரி தீர்ந்த பின்னும்
கேட்கும் பாடல்
மனதிற்குள்.


புறக்கணிக்கப்பட்ட காதலாய்
சின்னச் சின்ன ஸ்டேசன்கள்.


வளைவுப் பாதையில்
கடைசிப் பெட்டியின்
இருப்பை ஊர்ஜித்து
திருப்தியாய் தொடரும் இஞ்சின்.


அடுத்த ரயிலுக்காக
போலியாக பின்னோக்கி நகர
காத்திருக்கும் மரங்கள்.


டவர்த் தாயைத் தொலைத்த
செல் குழந்தைகள்
சிணுங்கலின்றி பயமெளனத்தில்.

நகரத் தந்தையின்
வருகை அறிவிக்க
முதலில் ஓடி வரும்
குழந்தை வீடுகள்.

மனிதக் குழந்தைகளுடன் செல்லும்
ரயில் நோக்கிப் பெருமூச்செரியும்
மலட்டுச் சரக்கு ரயில்.


நல்ல கவிதை தேடி
புத்தகத்தில் மூழ்கியிருக்கையில்
தவற விட்டு விட்டேன் -
ஜன்னலுக்கு வெளியே தோன்றி மறைந்த
அதைவிட நல்ல கவிதையை.


பிளாட்பாரம் இறங்கி
வெளியேறும் முகங்களில்
ஒன்றேனும் திரும்பிப் பார்க்காத ஏக்கத்தில்
இதயம் கனத்துத் தயாராகும்
அடுத்த பயணத்துக்கு.

No comments: