October 30, 2007

எழவெடுத்த கவிதை

சிவப்பு விழுவதற்குள்
சிக்னல் கடக்க விரைகையிலும்,
கடைசி முறையாய் முக்கி
கழிவு நீக்கத்தை முடிக்கையிலும்,
சமையல் ருசி பற்றின
மனைவியின் கேள்விக்கு
பதிலளிக்கும் இடைவெளியிலும்,
இரவில்,கலவி மயக்கத்தில்
தொலைந்த நினைவு திரும்பும்
அந்தரங்க நொடியிலும்,
எங்கிருந்து தான் தோன்றுமோ-
எழவெடுத்த கவிதைக்கு
நேரம் காலமே தெரிவதில்லை.

வன்முறை

தடித்த வார்த்தைகளில்
மெல்லிய மெளனங்களில்
பதிலுக்கு செய்யும் வீம்புகளில்
ஒன்றும் செய்யாத விலகலில்
முறைக்கும் பார்வைகளில்
அவைதம் புறக்கணிப்புகளில்
கோபமான தண்டனைகளில்
சாந்தமான மன்னிப்புகளில்
அறையப்பட்ட சிலுவைகளில்
அணிவிக்கும் மாலைகளில்
துருத்திக் கொண்டு தெரிகிறது
ரத்தருசி பிடித்த வன்முறை நாக்கு.

பேச்சு

அடுத்து வரப்போகும் ரயில் பற்றியோ
கடந்து சென்ற ரயில் தந்த வலி பற்றியோ
கொஞ்சமாய் வந்து விழுந்த
குழந்தையின் மலம் பற்றியோ
முழுக்க வருடுகின்ற குளிர்காற்றைப் பற்றியோ
-கேட்பதற்கு யாருமேயில்லை என்றாலும்-
தமக்குள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்
இணை தண்டவாளங்கள்.

நான்கு ஹைகூக்கள்

''நான்கு ஹைகூக்கள்''
என்று தலைப்பெழுதி
முதல் மூன்றுக்கு அப்புறம்
நான்காவதாக
"இன்னும்
எழுதப்படாமலிருக்கும்
ஒரு ஹைகூ"
என்று எழுத ஆசைதான்.
என்ன செய்வது?
முதல் மூன்றும்
இன்னும் முடிந்தபாடில்லை.

கற்பிதம்

"இந்த மேஜை என்ன சொல்கிறது?"
''அந்த மின்விசிறி என்ன சொல்கிறது?"
''காலை உரசிச் செல்லும்
என் பூனைக்குட்டி என்ன சொல்கிறது?"
யோசிப்பில் கிடைத்த பதில்கள்.
''ஒன்றுமே நாங்கள் சொல்லவில்லையே"
-கதறின அவைகளைப் புறந்தள்ளி விட்டு
என் கவிதையைப் பிரசுரிக்க விரைந்தேன்

October 4, 2007

எச்சம்

விழித்துத் தலை உலுக்கியும்
விலகாத கனவுகள்

உதைத்து விரட்டியும்
தொடரும் நிழல்

இறங்கிய பின்னும் தலைக்குள்
சுற்றும் குடை ராட்டினம்

ஒரு வேலையும் செய்யாவிடினும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்புள்

அஸ்தமனம் ஆனபோதும்
அணைந்திடாத வெளிச்சம்

ஆழச் செருமி உமிழ்ந்தபின்னும்
அடங்கிடாத கமறல்-
திறந்த வாய்ப் பிம்பத்தில்
உள்நாக்காய்ச் சிரிக்கும் முதற்காதல்.

ஒன்றும் செய்வதற்கில்லை

முகத்தில் வந்தறைந்து
விழி சிவக்க மண் வீசி
எடுப்பான கேசத்தை
ஏளனமாய்க் கலைத்து
இடுப்பு வேட்டியை
இழுத்து உருவிட,
ததும்பிய கோபம்
தலைக்கேறிப் போனாலும்,
ஒன்றும் செய்வதற்கில்லை-
குழந்தை,காற்று.

காத்திருத்தல்

பிரக்ஞயாய் வெளிப்படும் தகித்த பெருமூச்சு
குழப்பத்தில் தொங்கியபடி சிறகொடிந்த எண்ணங்கள்
எப்போதோ இழந்துவிட்ட வாய்
ஏளனமாய் வெறிக்கும் வெளி
சலித்துப் போன உணர்வு
என்னையே தின்னத் துவங்க,
கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?