December 22, 2007

3.5 கவிதைகள்

1.ரயிலின் வழியே

ரயில் வராத தண்டவாளத்தை
இருபுறமும் பார்த்துக் கடக்கையிலும்
பதட்டமாய் சிறுமியின் முகம்
உணவைக் கொட்டுபவர்களுக்கு
மன ஆறுதல் தரும் காக்கைகள்
ஸ்டேசனில் சண்டையிட்டு
சிறிது பயணித்தவுடன் விட்டுக் கொடுத்து
கைகோர்க்கும் தண்டவாளங்கள்
விரும்பினாலும் தொடரமுடியா
"நகர்வது நம்முடையதா, பக்கத்து ரயிலா
என உணர முடியா" மாய கணங்கள்
கீழே பயணிக்கத் தயாராய்
ஜன்னல் கண்ணாடியில்
பனித்துளி.


2.பிச்சை

சிக்னலில் குறையும்
ஒற்றை இலக்க எண்கள்
கொஞ்ச நஞ்சமிருக்கும்
மனிதாபிமானத்தையும்
பூஜ்யமாக்கும்

3. Vth C

மழைக்கு வழிவிடா
புது ஓடுகள்
சிமெண்ட் தரையில்
காணாமல் போன நாங்கள் செதுக்கிய
இந்திய வரைபடம்
வீட்டுக்கு விடும் மணி கணக்கிட
வெயில் வட்டங்கள் மீது தெளித்த மை
வெள்ளையின் வயிற்றில்
எண்ணிக்கையில் அதிகரித்து விட்ட
பொம்பளப் புள்ளைங்க.
வசந்தா டீச்சரின் கணக்கைக்
கவனிக்காமல்
வெளியே வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நான்.

3.5 என் பெயர் பொறித்த
அரிசியை எடுத்து உண்ணுகையில்
காலம் கெளவிப் போனது
அதன் பெயர் எழுதியிருந்த
என் தலையை.

2 comments:

ஹரன்பிரசன்னா said...

சிக்னலில் குறையும்
ஒற்றை இலக்க எண்கள்
கொஞ்ச நஞ்சமிருக்கும்
மனிதாபிமானத்தையும்
பூஜ்யமாக்கும்
//

Nice.

கானகம் said...

ரயிலின் வழியே வில் வரும் மாய கணங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். நன்கு கூர்ந்து கவனிக்கிறீர்கள் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை..

'பிச்சை' யும் அருமை.

நல்ல கவிதைகள் ப்ரகாஷ்...