December 25, 2010

குக்கேசுப்ரமண்யா,தர்மஸ்தலா கோவில் பயணம்

குக்கே சுப்ரமண்யா கோவில்



குகை
வருடமுடிவு என்பதால்,இருக்கும் விடுமுறையை உருப்படியாகக் கழிக்கத் திட்டமிட்டு தர்மஸ்தலா,சிருங்கேரி,கொல்லூர்,உடுப்பி போன்ற கோவில்களுக்கு செல்லத் திட்டமிட்டோம்.மங்களூரை மையமாகக் கொண்டு மேற்கண்ட எல்லா இடங்களுக்கும் செல்லலாம் என எண்ணி,ரயிலில் பிரயாணித்தோம். கடைசி நேரத்தில் மங்களூருக்கு முன்பாகவே,குக்கே சுப்ரமண்யர் கோவிலையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று,குக்கே சுப்ரமண்யா ரோடு என்கிற ஸ்டேஷனில் இறங்கினோம்.அந்த சிறிய ரயில் நிலையம்,விடிகாலை ஆறு மணிக்கே கூட்டம் கூட்டமாய் ட்ரக்கிங் போவோர்,கோவிலுக்கு செல்பவர்கள் என பிஸியாக இருந்தது. ஷேர் ஜீப் அல்லது பிரைவேட் ஜீப்பில் 13 கி.மீ பயணித்து சுப்ரமண்யா ஊரில் ஒரு தங்குமிடம் சென்றோம்.கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நான்கைந்து ஹோட்டல்களில் தொடர்ந்து “இடமில்லை” என்ற பதில்தான்.







கோல அச்சுக்கள்

குக்கே சுப்ரமண்யா கோவில் தாரா நதித்தீரத்தில்,காடு,மலைகளிடையே அருமையான இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.அந்த நதியின் கரையில் வீடு கட்ட நேர்ந்து கொள்வோர் அடுக்கி வைத்திருந்த கற்கள் அந்த நதிக்கு ஒரு புது அழகை சேர்த்தன.
கோவிலில் சுப்ரமண்யரே பிரதான தெய்வம்.வாசுகி,சேஷம்,காலபைரவர் ஆகியோர்களது சிலைகளும் பிரதிஷ்டை செய்யப் படுகின்றன.ஆண்கள் மேல்சட்டை இன்றிதான் அனுமதிக்கப் படுகிறார்கள்.(இங்கு மட்டுமல்ல-தர்மஸ்தலா,கொல்லூர்,உடுப்பி என்று எல்லா கோவில்களிலும் இந்த ரூல் உண்டு.)
கோவில் தவிர வேறு சுற்றிப்பார்க்க வேறெந்த இடம் என்று ஆட்டோ டிரைவரைக் கேட்டதற்கு,ஐந்து தலை நாகசிலை இருக்கும் ஒரு சிறிய குகைக்கு அழைத்துச் சென்றார்.
தரைக்குக் கீழே தவழ்ந்து மட்டுமே செல்லக் கூடிய குகையில் மழை பெய்து சேற்று நீர் தேங்கியிருந்ததால்,நான்கைந்து மீட்டருக்கு மேல் செல்ல முடியவில்லை.மேலேறி வந்து தரைக்கு மேல் நடந்து குகையின் இன்னொரு முடிவுப்பக்க வாயிலை அடைந்தோம்.பாம்பைக் கொத்த வரும் கருடனைத் தடுக்கும் முனிவர் சிலையுடன் பார்ப்பதற்குத் தத்ரூபமாக இருந்தது அந்த இடம்.

பாம்பைக் காக்க கருடனைத் தடுக்கும் முனிவர்
கருடனுக்கு பயந்து, குகைக்குள் நாகம்

குக்கே சுப்ரமண்யாவிலிருந்து பஸ்சில் தர்மஸ்தலா சென்றோம்.
72 கிலோமீட்டர் மோசமான சாலைப் பயணம்.தர்மஸ்தலம் என்பது மிகச்சரியாக 'தர்மா' என்ற சொல்லின் ஒரு வடிவமாகும்.
தர்மஸ்தலம் மத ஒற்றுமைக்கு இடமாக விளங்குகிறது, இங்கு புனிதப் பயணம் செய்பவர்களின் ஜாதி, கொள்கைகள் மற்றும் நம்பிக்கை போன்றவை இங்கு தடையாக இருப்பதில்லை. இயற்கை தெய்வங்கள் மற்றும் மஞ்சுநாதா (சிவன்) தெய்வங்களுக்கு இணையாக ஜெயின் தீர்தங்காராவும் இங்கு வழிபடப்படுகிறார். வைஷ்ணவிதே பிராமணர்கள் குருக்களாகவும், சமண மதத்தவரான ஒரு ஹெக்கடே கோவிலின் பாதுகாவலராகவும் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து எல்லாம் வல்ல இறையின் நம்பிக்கையில் ஒருங்கிணையும்படியான பல நம்பிக்கைகளின் சங்கமத்தை உருவாக்குகின்றனர்.


நீதிக்காக இங்கு வருகிறவர்களுக்கு வழக்கறிஞரின் சொற்திறமைக்கு சாய்ந்துவிடாத நீதி வழங்கும் இடமாக தர்மஸ்தலா உள்ளது. எந்தவித சட்டப்பூர்வ முறைகளும் விவாதங்களும் இல்லாமல் ஹெக்டே குடும்பத்தின் பாரம்பரிய மூதாதையரின் வழியில் கட்டுப்படுத்தும் தெய்வங்களின் இடத்திலிருந்து ஹெக்கடே நீதி வழங்குகிறார்.ஹெக்டேவம்சத்தினர் மத மற்றும் இன ஒற்றுமைக்காக தருமம், நீக்கமற நிறைந்திருக்கும் தன்மை மற்றும் இந்தக் கோவிலைக் கட்டமைத்ததற்கான நோக்கத்திலான ஒருமைத்தன்மை ஆகியவற்றை 800 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக்காத்துவருகின்றனர்.
(விக்கிபீடியாவிலிருந்து).








ஜெட் வேகத்தில் பரிமாற்றப் படும் உணவு

சுகாதாரம்

எங்களுக்கு முந்தின பந்தியில் பள்ளி மாணவர்கள்
நேத்ராவதி நதிக்கரையில் அமைந்துள்ள தர்மஸ்தலா கோவிலில் நாங்கள் சென்ற அன்று, கூட்டம் சிறிது குறைவாக இருந்தது.  திருப்பதி கோவிலைப் போலவே இங்கேயும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பாதையில் பக்தர்கள் வரிசை காத்திருந்து,பின் தரிசனம்.

அன்னபூர்ணா என்கிற இலவச சாப்பாடுக் கூடத்திற்கு ஓட்டமும் நடையுமாக வந்தோம்.ஒரு பிரம்மாண்டமான ஹாலில் நூற்றுக்கணக்கான (ஆயிரக்கணக்கான?) பக்தர்களுக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.அதற்காகவே எந்திரமயமாக்கப்பட்ட சமையற்கூடம்,ஏராளமான பணியாளர்கள் தயார் நிலையில்.
ஒரு பெரிய தள்ளுவண்டியில் வரும் தட்டுகளும்,அண்டாக்களில் வரும் சாதம்,குழம்பு ,ரசம்,பொரியல் போன்றவைகளும் ஆச்சரியமூட்டின.அதைவிட ஆச்சரியம் உணவு பரிமாறுபவர்களின் டிஜிட்டல் வேகம்.சாதம் போட்டு, ரசம் ஊற்றி சரியாக இரண்டாவது நிமிடத்தில் அடுத்த முறை சாதம்,பின்பு சாம்பார் என்று எல்லாமே ஜெட் வேகத்தில்.(முதலில் ரசம் சாதம்,அதன் பின்னரே சாம்பார் சாதம்)கொஞ்சம் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சிலர் சாம்பார் சாதத்தையோ,மோர் சாதத்தையோ தவற விட்டனர்..ஒருவேளை, இன்னும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இடம் வேண்டுமே என்று அவசர அவசரமாகக் கிளப்பி விடுகின்றனர் என்று நினைக்கிறேன்.
 
வீடு கட்ட நேர்ந்து, அடுக்கி வைக்கப் பட்ட கற்கள்


சாப்பாடு முடிந்து (!) மஞ்சுநாதரை தரிசித்தோம்.(நாங்கள் அங்கு போய்ச் சேர்கையில் உணவு வேளை வந்து விட்டிருந்தது. :) )

தர்மஸ்தலாவிலிருந்து உடுப்பிக்கு சென்றோம்.110 கிலோமீட்டர் பயணம்.இந்த சாலையும் அவ்வளவு சரியில்லை.சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் எங்கடா போய் ஓய்வெடுக்கலாம் என்று அசதி கண்ணைக் கட்டியது.முன்பே பதிவு செய்யாததால், இரண்டு ,மூன்று ஹோட்டல்களில் விசாரித்து , பின்னர் அரைமணி நேரம் காத்திருந்து சித்தார்த் என்னும் ஹோட்டலில் அறைகள் கிடைத்தன.அதன் தரைத் தளத்திலேயே இருந்த சாந்தி சாகர் ஹோட்டலில் அருமையான உணவு. உடுப்பியில் என்ன ஸ்பெசல் உணவு என்று விசாரித்து,நீர் தோசையை ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.நம்ம ஊர் ரவா தோசையை விட இன்னமும் மெல்லியதாக தகடாக மொறு மொறுவென நன்றாக சுவையாக இருந்தது.

இங்கிருந்து உடுப்பி கிருஷ்ணர் கோவில்,சிருங்கேரி சாரதா பீடம்,கொல்லூர் முகாம்பிகா கோவில் எல்லாம் சென்று வந்ததைப் பற்றியும்,12 ஹேர்ப்பின் வளைவுகளைக் கடந்து, மலைப் பாதைகளைத் தாண்டி கொல்லூர் செல்லும் வழியில் எங்கள் கார் பிரேக் ஃபெயிலியர்.
அதையெல்லாம் பற்றி அடுத்த பதிவில்...

புகைப்படங்கள்: ராகா

No comments: