December 14, 2007

சாயங்கால வானமும், ரயில் நிலையமும்

விருப்பப்படி வண்ணக்காட்சிகளை
நொடிக்கொருமுறை மாற்றும்
சாயங்கால வானம்
ஸ்கூட்டரின் பின்
அம்மா மடிக் குழந்தை
ரசித்து மழலையில் பகிர முயல
அந்த உலகின் சாவியைத்
தொலத்தவளின் மனம்
ஹாரன் ஒலிக்குப்பைகளால்
நிரம்பி வழிந்தது.

* * * * * *

ரயில் நிலைய நீண்ட படிகளில்
சத்தமாக ஒண்ணு, ரெண்டு எண்ணும்
பிஞ்சுப் பாதங்கள்
பொறுமையின்றித் தவிப்பில்
கடைசிப் படி.

* * * * * *

கடப்பவர் பார்வை படும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் உடையும்
என் முடமான கை.

3 comments:

ஹரன்பிரசன்னா said...

01. நொடிக்கொரு முறை என்பது காட்சிப்பிழை போல வருகிறது. கவிதையில் காட்சிப்பிழை இருக்கலாம். ஆனால் இது அதிகமோ என்று எண்ண வைக்கிறது.

02. என் முடமான கையில் என் தேவையில்லை.

அம்மா மடிக்குழந்தை உங்கள் கவிதைகளில் இரண்டாவது முறை வருகிறது என நினைக்கிறேன். இது சகஜம்தான். தொடர்ந்து எழுதவும்.

பிரகாஷ் said...

01. காட்சிப்பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி பிரசன்னா.

02. முடமான கவிதையில் இருக்கும் "என்"னை எடுத்து,அதன் முடத்தைப்
போக்கியதற்கு நன்றி.

//அம்மா மடிக்குழந்தை உங்கள் கவிதைகளில் இரண்டாவது முறை வருகிறது என நினைக்கிறேன்//
அம்மா மடிக் குழந்தைக் கவிதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்ன இது?
அதற்குள்ளாகவே இப்படியா?
என் கவிதை நோட்டில் இருக்கும் இன்னும் நிறைய அம்மா மடிக் குழந்தைகள்
இதைப் படித்து விட்டு, அம்மாவைத் தொலைத்த குழந்தைகளாய் மலங்க விழித்துக் கொண்டு...

கானகம் said...

//கடப்பவர் பார்வை படும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் உடையும்
என் முடமான கை.//

நல்ல கவிதை.