November 19, 2007

மும்பை

அலுவலகம் விரையும் அம்மாக்களிடம்
அரை முத்தம் பெறும் குழந்தைகள்
விழிக்கும் முன் கிளம்பி
உறங்கிய பின் வந்து
அந்நியமாகும் அப்பாக்கள்.
கணவனிடம் தன்னைவிட அதிக நேரம்
உடனிருக்கும் ரயில்கள் மீது
பொறாமையுறும் மனைவிகள்.
நூறுக்குக் கட்டாதென்று மறுத்து
திரும்ப அழைத்து
நாற்பதுக்கு விற்கும்
பிளாட்பார வியாபாரிகள்.
தங்களைத் தாங்களே
எதோ ஒரு திசையில்
எய்து கொள்ளும் அம்புகளாய்
சிறார்கள்.
எப்போதும் கிடைக்கும்
வடாபாவ் வும், விலைமாதர்களும்.
ரசிக்கும் கண்களுக்காய்
சலித்துப்போன காத்திருப்பில்
மெரைன்ட்ரைவும்,ஜுஹு பீச்சும்.
உண்ணவும்,உறங்கவும்
புணரவும்,சண்டையிடவும்
எப்போதாவது வாழவும்,
பன்னெண்டுக்குப் பத்தில்
விசாலமான வீடுகள்.
முகம் தெரியாத
அண்டை வீட்டுக்காரர்கள்.
வேண்டாத ஏழாவது விரலாய்
விருந்தாளிகள்.
பிடிமானம் ஏதும்
தேவைப்படாத ரயில்கள்.
ஐந்து நிமிடங்களுக்கொரு முறை
தரையிறங்கும் அலுமினியப் பறவைகள்.
அதை ரசிக்க நேரமின்றி
எகனாமிக் டைம்ஸில் கண்கள்.
நம்பிக்கைகளை ஒளித்து வைத்திருக்கும்
நாளைகள்.
இடைவெளியின்றிச் சக்கரங்கள் ஏறி
தார்ச் சாலையில் அப்பிக் கிடக்கும்
மனிதம்.

2 comments:

Anonymous said...

மும்பை நகர வாழ்க்கையை அப்படியே கவிதையாக்கியிருக்கீங்க பிரகாஷ்...
வாழ்த்துக்கள்.

இளங்கோ
மும்பைதமிழ் டாட் காம்
www.mumbaitamil.com

Anonymous said...

மும்பை நகர வாழ்க்கையை அப்படியே கவிதையாக்கியிருக்கீங்க பிரகாஷ்...
வாழ்த்துக்கள்.

இளங்கோ
மும்பைதமிழ் டாட் காம்
www.mumbaitamil.com