மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாதென்று
சத்தியம் வாங்கி சொல்லப்பட்டவைகளில் சில
நான்காம் நபரான என்னிடத்தில் ரகசியமாய்
காதருகே கைவைத்துப் பகிரப்பட்ட ரகசியம்
உள்ளங்கை நீராய்க் கசியும் மனத்துளைகளூடே
விஷயங்களுக்கு முளைக்கும் இறக்கைகள்-
அவை ரகசியமாகையில்
மூச்சாய்ச் சிறைப்படுபவை ஒரு பலவீன கணத்தில்
பெருமூச்சாய்த் தப்பித்து சுவாசிக்கும் சுதந்திரமாய்
முடிவற்றுத் தொடரும் சங்கிலியின் கண்ணிகளாய்-
ரகசியம் அறிந்தோர் எண்ணிக்கை
உங்களுக்குள் புதைப்பதற்கு மாறாய்
இன்னொருவர்க்குச் சொன்ன எதுவும்
ரகசியமல்ல சத்தம் குறைந்த செய்தி
என்றாலும் என்னிடமுண்டு சில ரகசியங்கள்
சிதையிலிருந்து விறைத்தெழும் என் மண்டையோட்டை
பலம் கொண்டடிக்கும் வெட்டியானுக்கும் வெளிப்படாமல்.
November 22, 2007
ரகசியம்
Posted by பிரகாஷ் at 6:10 PM 3 comments
Labels: கவிதை
யாரும் பார்க்காத போது
யாரும் பார்க்காத போது
திசைகள் தம் எல்லையைத் திருத்தும்
யாரும் பார்க்காத போது
காலம் சற்று ஓய்வெடுத்துப்
பின் எப்போதும் போல் நகரும்
யாரும் பார்க்காத போது
என் அறைக்குள் வரும் வானம்
யாரும் பார்க்காத போது
தேவதைகளுடன் பேசும் குழந்தைகள்
யாரும் பார்க்காத போது
புணர்ந்து முடித்த இயற்கை
தொடரும் தன் சிருஷ்டியை
யாரும் பார்க்காத போது
பூமிக்கு வந்து போகும் கடவுள்
எந்த விழிகள் மூடக் காத்திருக்கிறதோ
இன்னும் திறக்காத என் மூன்றாம் கண்?
Posted by பிரகாஷ் at 6:10 PM 0 comments
Labels: கவிதை
குட்டிக் கவிதைகள்
எடுக்க மறந்த அழைப்பின்
பெயர் தெரியா எண்கள்
எதுவும் சொல்லாவிடினும்
எழுப்பும் கேள்விகள் ஏராளம்
விடியல் பறவைகளின்
எழுப்புதலைப் புறக்கணித்து
காற்றின் உலுப்பலில்
புரளும் இலைகள்
யாருமற்ற வானில்
அடுக்கி வைக்கப்பட்ட காற்றை
கலைத்துப் போடும்
பறவை
இலக்கு நோக்கி இறுக்கமாய்
தற்கொலைப்படை வீரர்கள்
தீப்பெட்டிக்குள்
தொலைந்து விட்ட
முதல் அலையைத் தேடி
தொடரும் அலைகள்
சரியாக நினைவில்லை
என் பழைய புத்தகத்தில்
ஒளிந்து கொண்டிருப்பது
நான் வைத்த மயிலிறகா
அது போட்ட குட்டியா?
நாளைய திட்டங்களை எழுதுகையில்
என் பின்புறம் ஒலித்தது சிரிப்பொலி
நான் திரும்பியவுடன் ஓடி மறையும்
நாளை
Posted by பிரகாஷ் at 6:10 PM 2 comments
Labels: கவிதை
சில புகைப்படங்கள்
சுனாமிக்காக சிறையில்
இடைவெளி
பசி
இன்னும் சில பாரங்கள்
மூச்சுத் திணறும் மரங்கள்
மாலை நேர மாநாடு
மகிழ்ச்சியை விற்கும் மழலைகள்
சின்னக் கைகளில் பெரிய பொறுப்பு
செல்லக்கடி
விதிகளை மீறிய ஓட்டம்
இயலாமை
ஓய்வு
Posted by பிரகாஷ் at 6:10 PM 1 comments
Labels: புகைப்படம்
முளைத்தல்
பயண நினைவாய்க்
கொணர்ந்த மண்ணில்
பெயர் தெரியாத சில விதைகள்
எதிர்பார்த்துப் புதைத்து
வெகு நாட்களாகியும்
எதுவும் முளைக்கவில்லை
இந்தக் கவிதையைத் தவிர
Posted by பிரகாஷ் at 6:10 PM 1 comments
Labels: கவிதை
நம்பிக்கை
மூன்று வினாடிகளுக்கு மேல்
பார்வையை நிறுத்த முடியவில்லை
எந்தக் கண்களிலும்
வலிய உதவுபவர்கள் மீது வரும்
அதிகப்படியான சந்தேகங்கள்
வார்த்தைகளைப் புறக்கணித்து
இடைவெளியைத் துருவும்
அனர்த்த வாசிப்புகள்
வளர்ப்பு நாயின்
வாலும் நாக்கும் மறைந்து
பூதாகரமாய்த் தெரியும் கோரைப் பற்கள்
நம்பிக்கையை எழுதி முடிப்பதற்குள்
அழைக்காமல் முன் வந்தமரும் அவ
கடவுளைக் கைகூப்பும் கணத்திலும்
கால்வாசி மனம் அடைத்த பிசாசு எண்ணங்கள்
மறுதலித்தலையே இயல்பாக்கி
மறந்துபோன இயல்பைத் தேடும் மனம்
வேண்டாத இரண்டெழுத்துக்களை
வெட்டும் உறுதியுடன்
கோப்பையில் துளி இடமும் வைக்காது
நாள் முழுதும் நிரப்பிக் கொண்டிருக்கும்
நான்.
Posted by பிரகாஷ் at 6:10 PM 1 comments
Labels: கவிதை
கூழாங்கற்கள்
சாயங்கால நகரும் ஆற்றில்
கூழாங்கற்கள்
மௌனமாய் சில
ஆற்றோடு பேசும் சில
கொஞ்சம் தவிப்பாய்
என் உள்ளங்கையில் சில
Posted by பிரகாஷ் at 6:10 PM 0 comments
Labels: கவிதை
8:31
வழக்கமான முகங்கள் வருமதில் நிறையவே
செய்தித்தாளிலோ,இயர்ஃபோன்களுக்கிடையிலோ
மனதை நுழைத்து உலகம் மறந்த சிலர்
உட்கார இடம் கிடைத்த உற்சாகத்தில் சிலர்
ஸ்ரீராமஜெயம் போல ஏதோ எழுதும் சிலர்
விட்டுப்போன விடிகாலை உறக்கத்தைத்
தொட்டுத் தொடர்ந்தபடி சிலர்
வரும் ஸ்டேசனில் இறங்காவிடினும்
வாயிற்படியின் வாயில் சிலர்
ஒட்டப் பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களை
பட்டும் படாது பார்த்தபடி சிலர்
பரீட்சையோ என்னவோ பயம் பூசிய முகத்துடன்
பள்ளிப் பிள்ளைகள் சிலர்
அதற்கப்புறம் வரும் எதிலும்
அளவிலடங்காக் கூட்டமென்பதால்
எப்போதும் நான் ஏறும் 8:31 ரயிலிலே
அடுத்தவர் செய்கையை அதிமுக்கியமாய் ஆராயும்
இலக்குகளற்று என்போலிருக்கும் இன்னும் ஒரு சிலர்
Posted by பிரகாஷ் at 6:10 PM 2 comments
Labels: கவிதை
இல்லாத சில ஹைகூக்கள்
சிரித்துக் கொண்டே
அழும் காந்தி
லஞ்சப் பணத்தில்.
பல்லிடுக்கில் முடிகள்
அசூயையற்று
சீப்பு.
7கழுதை வயதாகியும்
12க்கு மேல் தெரியாத
கடிகாரம்.
கிழ ஆலத்தின்
ஊன்றுகோலாய்
விழுதுகள்.
கண்ணாமூச்சியில்
நிலா,பூமி
அமாவாசை.
கவிதையின்
போன்சாய்
ஹைகூ.
கடவுளின் முகவரி
அடைப்புக் குறிக்குள்
( )
சந்தேகப் பிராணியாய்
திரும்பத் திரும்ப எண்ணும்
கடிகாரம்.
Posted by பிரகாஷ் at 6:10 PM 7 comments
Labels: கவிதை
November 19, 2007
கடவுள்
விரதமிருந்து,மந்திரம் ஜெபித்து
பாத யாத்திரையாய் மலையேறி
கடவுளைக் கண்டேன்
நான் அங்கு இல்லை.
Posted by பிரகாஷ் at 9:45 AM 0 comments
Labels: கவிதை
அருகாமை
தேங்காய் எண்ணெய் இருந்தும்
காலம் பூராவும் பரட்டைத் தலையாய்
தென்னை மரங்கள்.
அதனருகில் இருந்தும்
அடி மூக்கைக் காணமுடியா கண்கள்.
உள்ளூர்க் கோவில்களுக்குப்
போகக் கிடைக்கும் நேரம்
எப்போதுமே நாளைதான்.
நம்முள் இருப்பதாலேயே
அந்நியமான கடவுள்.
வயதான பெற்றோர்க்கு
மரணத்தின் பின்னரே
முழுப்பசி தீர்க்கும் பிண்டங்கள்.
அருமை தெரியாத எதுவும்
அருகாமையில் இருந்தும்
அகப்படாத தூரத்தில்.
Posted by பிரகாஷ் at 9:45 AM 1 comments
Labels: கவிதை
மும்பை
அலுவலகம் விரையும் அம்மாக்களிடம்
அரை முத்தம் பெறும் குழந்தைகள்
விழிக்கும் முன் கிளம்பி
உறங்கிய பின் வந்து
அந்நியமாகும் அப்பாக்கள்.
கணவனிடம் தன்னைவிட அதிக நேரம்
உடனிருக்கும் ரயில்கள் மீது
பொறாமையுறும் மனைவிகள்.
நூறுக்குக் கட்டாதென்று மறுத்து
திரும்ப அழைத்து
நாற்பதுக்கு விற்கும்
பிளாட்பார வியாபாரிகள்.
தங்களைத் தாங்களே
எதோ ஒரு திசையில்
எய்து கொள்ளும் அம்புகளாய்
சிறார்கள்.
எப்போதும் கிடைக்கும்
வடாபாவ் வும், விலைமாதர்களும்.
ரசிக்கும் கண்களுக்காய்
சலித்துப்போன காத்திருப்பில்
மெரைன்ட்ரைவும்,ஜுஹு பீச்சும்.
உண்ணவும்,உறங்கவும்
புணரவும்,சண்டையிடவும்
எப்போதாவது வாழவும்,
பன்னெண்டுக்குப் பத்தில்
விசாலமான வீடுகள்.
முகம் தெரியாத
அண்டை வீட்டுக்காரர்கள்.
வேண்டாத ஏழாவது விரலாய்
விருந்தாளிகள்.
பிடிமானம் ஏதும்
தேவைப்படாத ரயில்கள்.
ஐந்து நிமிடங்களுக்கொரு முறை
தரையிறங்கும் அலுமினியப் பறவைகள்.
அதை ரசிக்க நேரமின்றி
எகனாமிக் டைம்ஸில் கண்கள்.
நம்பிக்கைகளை ஒளித்து வைத்திருக்கும்
நாளைகள்.
இடைவெளியின்றிச் சக்கரங்கள் ஏறி
தார்ச் சாலையில் அப்பிக் கிடக்கும்
மனிதம்.
Posted by பிரகாஷ் at 9:45 AM 2 comments
Labels: கவிதை
அவரவர் யோக்யதை
தற்செயலாய்த் தெரிந்தது
மனைவியின் பாஸ்வேர்ட்.
உபயோகித்து உள்ளே செல்ல...
சின்ன வயது ஏக்கங்கள்
ஏமாற்றங்கள்
வயதின் பிடியில்
எதிர்க்கத் திராணியற்ற
பலவீன கணங்கள்
முள் சிநேகம் கிழித்த உடை.
கிணற்றின் அடியில்
கிடப்பவையாய் எல்லாம்.
வெளியேறி, ஏதோ நினைத்து
அவளுக்கும் தெரிந்த
எனது பாஸ்வேர்டை
கவனமாய் மாற்றினேன்.
அவரவர் யோக்யதை
அவரவர் பாஸ்வேர்ட் அறியும்.
Posted by பிரகாஷ் at 9:45 AM 0 comments
Labels: கவிதை
உறுப்புகள்
வெறிக்கப்பட்டு வெறிக்கப்பட்டு
மியூசியத்தின் உயிரற்ற உடலாய்
கழுத்துக்குக் கீழே எனது உறுப்புகள்.
நெரிசலில் உரசும் ஆண்களின்
எந்த உறுப்பும் அவன் குறியாகி
காம விந்துவை வெளியேற்றும்.
எதிர்ப்படும் எவனும் இன்று
அதிசயமாய் முகத்தையே முறைக்க
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில் முளைத்திருக்கிறதோ
முலைகள் ஏதுமென்று.
Posted by பிரகாஷ் at 9:45 AM 1 comments
Labels: கவிதை
November 18, 2007
குழந்தைத்தனம்
சின்ன வயதில் எனக்கு
சிறகுகள் இருந்தன.
செடி கொடிகளையும்
பெரிதாக்கும் காலம்
என் சிறகுகளை மட்டும்
குள்ளமாக்கியது.
மறதியாய் வெளிப்படும்
சிறகுகளைக் கொத்த
கூரான அலகுகளுடன்
காத்திருக்கும் உலகம்.
கவனமாய் மறைத்துக் கொள்கிறேன்
பெரிய சட்டை அணிந்து.
Posted by பிரகாஷ் at 4:43 PM 0 comments
Labels: கவிதை
November 17, 2007
சாவி
நடுத்தெருவில் கிடந்ததொரு சாவி.
தவறி விழுந்ததோ
வலுவில் வீசப்பட்டதோ.
எத்தனையோ கால்கள் பட்டு
விழுந்த இடம்,இருக்குமிடம்,
போகுமிடம் ஏதுமறியாது,
இப்போது என் கையில்.
அங்கேயே போட்டாலும்
எடுத்துக் கொண்டு சென்றாலும்
எந்த நிகழ்வின் நகர்வும்
திரும்ப மீள முடியாத்
தவறான திசை நோக்கியே.
பூட்டின் உலகம் திறக்கும் சாவியின்
பூட்டிய உலகம் திறக்கப் படாமல்
அதன் கையில் அதனையே வைத்துக்
குழம்பியபடி நடுத்தெருவில்.
Posted by பிரகாஷ் at 8:00 PM 2 comments
Labels: கவிதை
November 16, 2007
ரயில் பயணத்தில்
காசுக்காக மேஜிக் செய்யும்
உட்கார்ந்திருப்பவர்களின்
அதிசயமாய்
சக மனித நம்பிக்கைகளின்
மூன்றாம் ஏசிக்குள்
நீண்ட பயணத்தில்
புறக்கணிக்கப்பட்ட காதலாய்
வளைவுப் பாதையில்
அடுத்த ரயிலுக்காக
டவர்த் தாயைத் தொலைத்த
நகரத் தந்தையின்
மனிதக் குழந்தைகளுடன் செல்லும்
நல்ல கவிதை தேடி
பிளாட்பாரம் இறங்கி
Posted by பிரகாஷ் at 8:19 PM 0 comments
Labels: கவிதை
November 13, 2007
புரண்ட உலகங்கள்
ஏதோவொரு ஸ்டேசனில்
குலுங்கி நின்றது ரயில்.
ஜன்னலின் உள்ளிருந்து வந்த
பூச்சியொன்றை
சுண்டி வெளியேற்றிய கணத்தில்,
அதன் உலகைப்
புரட்டிப் போட்டதாய் அதிர்ந்தேன்.
துழாவி பூச்சியை எடுக்க எத்தனிக்கையில்
நகரத் துவங்கியது ரயில்
என்னுலகைப் புரட்டிப் போட்டு.
Posted by பிரகாஷ் at 10:00 PM 4 comments
Labels: கவிதை
நிகழாத எதிர்பார்ப்பு
பஸ் சக்கரத்தினடியில்
சற்றே நசுங்கின சைக்கிள்.
ரத்தக் காயம் ஏதுமில்லை.
சற்றே ஏமாந்த முகங்கள்
கலைந்து விரைந்தன
அவரவர் திசையில்.
Posted by பிரகாஷ் at 9:47 PM 2 comments
Labels: கவிதை
ஒன்றையாவது
என் அறையில் நுழைந்த
வண்ணத்துப்பூச்சி
மின் விசிறியில் அடிபடும் முன்
நிறுத்தி விட ஆசை
நகரும் காலத்தையாவது.
Posted by பிரகாஷ் at 9:45 PM 0 comments
Labels: கவிதை
November 4, 2007
நுழைய முடியாத தெரு
ஆக்கர் குத்தப்பட்ட தழும்புகளின்றி
தார்த்தோல் போர்த்திய என் தெரு.
மண் வீடுகளின் சவக்குழிகளில்
வளர்ந்திருந்த மாடி மரங்கள்.
வாகனக் காப்பகமாகிப் போன
எதிர்வீட்டு மாட்டுத்தொழுவம்.
சாலை விழுங்கியிருந்த,
வீடுகளின் கடைசிப் படிகள்.
"தூமியக்குடிக்கி", "கண்டாரஓளி"
சப்தங்களின்றி குழாயடி.
புதிய மூக்குகள் அறிந்திராத
காற்றில் காணாத ரைஸ்மில் வாசனை.
தாவும் மணி நாயின் கால்தடங்களற்ற
வெள்ளைச் சட்டையில் நான்.
எத்தனைமுறை நடந்தாலும்
நுழையவே முடியவில்லை
என் பழைய தெருவுக்குள.
Posted by பிரகாஷ் at 2:01 PM 2 comments
Labels: கவிதை
November 1, 2007
இன்னொரு வகை
சுடிதாரில் நான் குனியும்
எந்தவொரு கணத்தையும்
தவறவிடாத கழுகுக்கண்கள்.
பேருந்தில்,ஹோட்டலில்,கடைவீதியில்,
இந்த இடம்தான் என்றில்லாது எங்கும்.
தற்செயல் தவிர
மற்ற எல்லா அர்த்தங்களும்
கற்பிக்கப்படும் என் தீண்டலுக்கு.
எல்லா ஆண்களும்
இப்படித்தான் என்றில்லை
இன்னொரு வகையும் உண்டு
-சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.
Posted by பிரகாஷ் at 6:34 PM 2 comments
Labels: கவிதை
செல்லா(த) செல்
கட்டைவிரல் வலிக்க
விடாது புலம்பும் மனிதர்கள்.
எப்போதும் தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் கடவுள்.
Posted by பிரகாஷ் at 6:24 PM 0 comments
Labels: கவிதை