November 22, 2007

குட்டிக் கவிதைகள்

எடுக்க மறந்த அழைப்பின்
பெயர் தெரியா எண்கள்
எதுவும் சொல்லாவிடினும்
எழுப்பும் கேள்விகள் ஏராளம்



விடியல் பறவைகளின்
எழுப்புதலைப் புறக்கணித்து
காற்றின் உலுப்பலில்
புரளும் இலைகள்


யாருமற்ற வானில்
அடுக்கி வைக்கப்பட்ட காற்றை
கலைத்துப் போடும்
பறவை



இலக்கு நோக்கி இறுக்கமாய்
தற்கொலைப்படை வீரர்கள்
தீப்பெட்டிக்குள்


தொலைந்து விட்ட
முதல் அலையைத் தேடி
தொடரும் அலைகள்


சரியாக நினைவில்லை
என் பழைய புத்தகத்தில்
ஒளிந்து கொண்டிருப்பது
நான் வைத்த மயிலிறகா
அது போட்ட குட்டியா?


நாளைய திட்டங்களை எழுதுகையில்
என் பின்புறம் ஒலித்தது சிரிப்பொலி
நான் திரும்பியவுடன் ஓடி மறையும்
நாளை

2 comments:

ஹரன்பிரசன்னா said...

//யாருமற்ற வானில்
கேட்பாரற்ற தைரியத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட காற்றை
கலைத்துப் போடும்
பறவை//

இரண்டாம் வரி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்ற எல்லாமே ரொம்ப நார்மல். முதல் கவிதை சுத்த குழப்பம்.

பிரகாஷ் said...

கேட்பாரற்ற தைரியத்தை எடுத்து விட்டு,குழப்பத்தைத் தீர்த்து விட்டேன்.
நன்றி பிரசன்னா.