October 4, 2007

உடையாத குமிழிகள்

உருண்டோடும் வருடங்கள் சின்ன வயது ஞாபகங்களை, பொக்கிஷங்களாக மாற்றி விடுகின்றன. அந்த வயது அறியாமை கூட இப்போது நினைத்துப் பார்க்கையில்,அனுபவித்து ரசிக்கத் தக்கவையாக பரிணாமம் எடுத்து விடுகின்றன. சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்
அப்போதைய எனது சாகசங்கள்.
அப்போது,என் வீட்டில் பாட்டிக்கு மட்டும் தான் நீச்சல் தெரியும்.
"நீச்ச தெரியுமாடா உனக்கு?" என்கிற என் வயதொத்தவர்களின் கேள்விக்கு,"தெரியாது" என்று பதிலளிக்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னும்.
ஞாயிற்றுக்கிழமையானால், பாட்டி,எல்லாத்துணிகளையும் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் (தே.கல்லுப்பட்டி) பஸ்ஸ்டாண்டுக்குப் பின்னால் இருக்கும் தெப்பக்குளத்திற்கு எங்களை கூட்டிச்சென்று,துணிகளைத் துவைத்தபின், கொஞ்ச நேரம் நீச்சல் கற்றுக் கொடுப்பார். என் அருணாக்கயிறை (அரைஞாண் கயிறு) பாட்டி பிடித்துக் கொள்ள, கை,கால்களை உதைத்து வட்டமிடும் ஒரு அரை நிமிட நேரத்திற்குள்
அரை லிட்டர் தண்ணீரை முழுங்கி விட்டிருப்பேன்.
அருணாக்கயிறு அறுந்து ,மூழ்கி விடுவேனோ என்கிற பயத்தினாலும், பாட்டியுடன் தெப்பத்திற்கு போகும் பாக்கியம் எப்போதாவதுதான் கிடைத்ததாலும்,சைக்கிள் டியூபின் உதவியை நாடினேன்.
காற்றடிக்கப்பட்ட சைக்கிள் டியூபை இரண்டாக வளைத்து,
உடம்பில் போட்டுக் கொண்டு தண்ணீரில் மிதப்பேன்.
இவ்வாறு,கல்லுப்பட்டி தெப்பம், தேவன்குறிச்சி(பக்கத்து ஊர்) தெப்பத்தில்
ஓரளவு நீச்சல் பழகிய பின்,எங்கள் ஊர் "சதுரக்கிணற்றில்"
கால்வைக்கும் தைரியம் எனக்கு வந்தது. சதுரக்கிணறு, பெயருக்கு ஏற்ப சச்சதுரமாக இருக்கும். எவ்வளவு ஆழம் என்று யாருக்கும் தெரியாது.
அதிலும், கற்றுக்குட்டிகளான என்னைப் போன்றவர்கள்
உள்ளே இறங்கவே யோசிப்பர்: இதில் எங்கிருந்து முங்கி ஆழம் எல்லாம் பார்ப்பது? "ஒரு பனைமர ஆழம் இருக்கும்" என்று ஊர்ப் பையன்கள் சொல்வார்கள். கிணற்றுக்குள் இறங்கும் படிக்கட்டு கீழ் நோக்கி சென்று, சுவருக்கு சற்று முன்பாகவே முடிந்து விடும்.
கடைசி இரண்டு மூன்று படிகள் இல்லாமல் அந்த மூலை, வட்டமாய், வெறுமையாய் இருக்கும்.இரண்டு,மூன்று பேர் நிற்கும் அளவு மூலையில் இடம் இருக்கும். அதை "பணியாரக்குழி" என்று அழைப்போம்.
கைலி கட்டிக் கொண்டு, ஈரக்கைலியை காற்றுள்ள பலூன் போலக் கட்டிக்கொண்டு பணியாரக்குழிக்குப் பக்கத்திலேயே நீச்சலடிப்பேன்.மற்ற நண்பர்கள் கிணறு முழுவதும் நீந்தி வருவதும், மோட்டார் ரூமிற்கு மேலிருந்து"சொர்க்" அடிப்பதும் எனக்கு ஏக்கப் பெருமூச்செரியும் விஷயங்கள்.அதிகபட்சம் என்னால், கிணற்றின் மேலிருந்து நேராகக் குதிக்கத் தான் தெரியும்.சதுரக்கிணற்றில் நன்கு நீச்சல் பழகிய பின்,சைக்கிள்டியூப்,கைலி உதவியின்றி எங்கு வேண்டுமானாலும் நீச்சலடிக்கும் தைரியம் வந்தது.
முழுப் பரீட்சை லீவுக்கு,பெரியம்மா ஊரான ஒ.கோவில்பட்டிக்குப் போவேன். என் பெரியம்மா மகன் சதீஷ் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து,
மதிய உணவுக்குப் பிறகு, ஒரு மூன்று மணி நேரம் அந்த ஊரில் இருக்கும் எல்லா கிணறுகளிலும் ஊறிக்கிடப்போம். வேப்பம்பட்டியார் கிணறு, சீனிநாயக்கர் கிணறு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிணறு।ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒவ்வொரு விதமான சாமுத்ரிகா லட்சணங்கள். வேப்பம்பட்டியார் கிணறு குறுகலாக வட்டமாக இருக்கும்: அதன் தண்ணீர் கண்ணாடி மாதிரி இருக்கும்.சூரிய வெளிச்சத்தில், கீ..ழே தரையில் கிடக்கும் கற்கள் பளிச்சென்று தெரியும்.சீனிநாயக்கர் கிணறு ஷங்கர் படக் கிணறு போல, மிக பிரம்மாண்டமாக இருக்கும்.கிணற்றுக்கு மேலே, தரை வழியாக கிணற்றை சுற்றி ஓடிவரவே முழுதாக மூன்று நிமிடங்கள் தேவை.இதில் வேறு, "உள்ள முதலை எல்லாம் இருக்குடா" என்று அந்த ஊர்ப் பையன்கள் சொல்கையில்,"ஒரு வேளை இருக்குமோ?" என்கிற சந்தேகம் வயிற்றில் புளியைக் கரைக்கும்.உள்ளே நீந்திக் கொண்டிருக்கையில் காலில் படும் எந்தப் பொருளும் முதலையின் பற்களோ என்கிற கிலியை ஏற்படுத்தும்.
படித்து முடித்து,சென்னைக்கு வேலைக்கு வந்த பின் கிணறு எல்லாம் கிடைக்கவில்லை.சரி,கடல் இருக்கையில் கிணறு எதற்கு? என்று,ஆளில்லாத காந்தி பீச் போய் நண்பர்களுடன் சேர்ந்து அரிதாக எப்பொழுதேனும்ஒரு இரண்டு மணி நேரம்கடலில் ஆட்டம் போட்டு வருவேன்.
இப்பொழுது மும்பையில், இருக்கும் வேலைப்பளுவில் அதெல்லாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்கள்.
சென்ற வருடம் கல்லுப்பட்டிக்கு சென்றிருந்த போது,கத்தாரில் வேலைபார்க்கும் என் நண்பன் ஜெயக்குமார் விடுமுறையில் வந்து இருந்தான்.வெகு நாள் கழித்து வந்து இருந்ததால்,ஊரின் நிறைய இடங்களை சென்று பார்த்தோம். "வாடா! சதுரக்கிணறு வரைக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துரலாம்டா" என்று அவனை வலுக்கட்டாயமாக அழைத்துப் போனேன்.
சதுரக்கிணறு, சற்று வயதாகி, பொலிவிழந்து காணப்பட்டது.
அதைப் பார்த்தால், இப்போது உள்ள சிறுவர்கள் யாரும் அடிக்கடி போய் நீந்தும் இடம் போலத் தெரியவில்ல. தடுத்து வளர்ந்திருந்த முட்செடிகளை கவனமாக விலக்கி, படிகளில் இறங்கினேன்।பணியாரக்குழிக்கு வெகு கீ॥ழே தூசி படிந்த, கலங்கலான நீர்மட்டம் தென்பட்டது.
அதிகம் பயன்படுத்தாததால் சற்றுப் பாழடைந்து போனசதுரக்கிணறைப் பார்க்க மனதுக்கு என்னவோ போல இருந்தது. "வாடா! போகலாம்" என்கிற ஜெயக்குமாரின் கூவலுக்கு பதில் ஏதும் சொல்லாமல்
கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.

12 comments:

Unknown said...

Prakash,
Due to non availablity of Tamil Fonts,,

Each and Every word brings the world of purity before me and makes me to wish that i should have a stay in your town.

Even now you are willing to share the things that happened in your childhood which not many of us are willing.

Hats of to your boldness.

All the very best for your life achievement

பிரகாஷ் said...

ராஜலட்சுமி,
கருத்துக்கு நன்றி.
கிராமப்புறத்திலிருந்து வரும் என் போன்ற நிறையப் பேரின் வாழ்க்கை இது போன்ற அனுபவங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.இதை பகிர்ந்து கொள்வதற்கு எதற்கு தைரியம் எல்லாம் வேண்டும்?

Unknown said...

Prakash,

Becoz, many people are not at all willing to tell even that they are from such a background.

ஹரன்பிரசன்னா said...

formatting கவிதை போல இருக்கவும் கொஞ்சம் பயந்துவிட்டேன். எழுதத் தொடங்கிறவர்கள் எல்லாருமே இதுபோன்ற சிறு வயது ஞாபகங்களிலேயே தொடங்குகிறார்கள். நீங்களும். இவற்றையெல்லாம் உதறிவிட்டு, பொதுவிஷயங்களுக்கு நகரலாம். :) பின்னர் மீண்டும் இவ்விஷயங்களுக்குத் திரும்பும்போது இன்னும் அழகாக எழுதமுடியலாம். நன்றி.

பிரகாஷ் said...

நல்ல யோசனைக்கு நன்றி பிரசன்னா.

கானகம் said...

//சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்
அப்போதைய எனது சாகசங்கள்//

எனதும் அதே.. ஆனால் சைக்கிளில் இரண்டு கையையும் விட்டு ஒட்டும் அளவு திறமை (?) பெற்றிருந்தாலும் நீச்சலில் தைரியம் முழுமையாய் கிடைக்கவில்லை.. எனது அண்ணன் கல்லுப்பட்டி தெப்பகுளத்தில் தூக்கி வீசியதால் வந்த அலர்ஜியாய் இருக்குமோ என்னமோ??

நல்ல பதிவு. ஹரன் ப்ரசன்னா சொன்னதுபோல வேற விஷயங்களை எழுத ஆரம்பித்துவிட்டு பின்னர் இதில் இறங்கலாம் என்பதுகுறித்து யோசி.. உங்களுக்குத்தான் கவிதை எல்லாம் நன்றாகவே வருகிறதே..

வாழ்த்துக்கள்..அட்டகாசமான ஆரம்பம்..

ஹரன்பிரசன்னா said...

ஓ குமார். எப்படி ஒரே கமெண்ட்டில் இத்தனை குழப்பம்? எப்படி உங்களால மட்டும்..!


//நல்ல பதிவு.//

சரி.

//ஹரன் ப்ரசன்னா சொன்னதுபோல வேற விஷயங்களை எழுத ஆரம்பித்துவிட்டு பின்னர் இதில் இறங்கலாம் என்பதுகுறித்து யோசி..//

அப்படி இது நல்ல பதிவு இல்லியா? அப்ப மொதல்ல சொன்னது? என்ன விளையாட்டா?

//உங்களுக்குத்தான் கவிதை எல்லாம் நன்றாகவே வருகிறதே..//

யோசி என்று முதல் வரி முடியும்போது எப்படி அடுத்த வரி உங்களுக்கு எனத் தொடங்க முடியும்? எது தப்பு? யோசியா, உங்களுக்கா? யோசியுங்களா, உனக்கா?

//வாழ்த்துக்கள்..அட்டகாசமான ஆரம்பம்..//

வேற மாதிரி யோசிக்க சொன்னா, இது சுமாரா (அல்லது மோசமா!) இருக்குன்னுதான அர்த்தம்? அப்புறம் எதுக்கு வாழ்த்துகள்? கிண்டலா? இல்லை உள்குத்தா? அட்டகாசமான ஆரம்பம்னா என்ன அர்த்தம்? உருண்டோடும் என்கிற வார்த்தையில் ஆரம்பிப்பதா? என்னதான் சொல்ல வர்றீங்க? பிரகாஷ் எழுதணுமா வேண்டாமா? :)

கானகம் said...

வாய்ப்பளித்த அணைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வணக்கம்.

Anonymous said...

நன்றாகவே எழுதுகிறீர்கள். சின்ன வயதூ ஞாபகங்களை எழுதுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. நீங்கள் அந்த கூட்டத்தில் சேராமல் இருப்பது உங்கள் பதிவுகளை பார்க்க வருபவர்களை திரும்பி வரவழைக்கும். இல்லையெனில் இவனும் பழய பஞ்சாங்கம்தானா என ஓடிப்போய்விடும் சாத்தியங்கள் அதிகம்.

புரியாத கவிதைகளை எழுதி தணக்குத்தானே படித்துக்கொள்ளும் கூட்டத்துடனும் சேரவேண்டாம்..

உங்கள் எழுத்து இயல்பாக எந்தவித அலங்காரங்களும் இல்லாமல் இயல்பாய் உள்ளது. அதை தொடரவும்..

பிரகாஷ் said...

வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சுப்ரமணியசாமி.

ஹரன்பிரசன்னா said...

//புரியாத கவிதைகளை எழுதி தணக்குத்தானே படித்துக்கொள்ளும் கூட்டத்துடனும் சேரவேண்டாம்..//

சுப்பிரமணிய சாமி, 'நீங்க'தானா அது??? நல்லா இருந்தா சரி.

Anonymous said...

ஹரன், என்னைத் தெரியுமா உங்களுக்கு?? எனக்கென்று வலைப்பதிவோ அல்லது வேறு ஒரு அடையாளமும் இல்லாமல் வலையில் தோன்றிய பக்கமெல்லாம் போய்பார்த்துவிட்டு வருவது மட்டுமே எனது பொழுதுபோக்கு. அனானியாய் கருத்து இட விருப்பமில்லை. எனவேதான் எனது பெயர். எனது ஈமெயில் முகவரி subramaniyaswamy@yahoo.com. If you are interested you can contact me.